வெள்ளி, 4 ஜனவரி, 2019

சபரிமலையில் ஈழத்து சசிகலா தரிசனம் செய்தார், கேரளா போலீஸ் உறுதி செய்தது

சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தார், கேரளா போலீஸ் உறுதி செய்ததுதினத்தந்தி : சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை  அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.< சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதலே மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின. பதட்டமான நிலையே தொடர்கிறது. 

பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் இலங்கையை சேர்ந்த சசிகலா (46) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் சபரிமலைக்கு வந்தார். இருமுடிக்கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் சசிகலாவை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும் அவரது கணவரும், மகனும் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

சசிகலா பம்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலையில் பக்தர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனாலும் போலீசார் என்னை திருப்பி அனுப்பினர். நான் ஒரு அய்யப்ப பக்தை. 41 நாட்கள் விரதம் இருந்து வந்திருக்கும் என்னை கோவிலுக்குள் விடவில்லை. நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்கள் ஏன் என்னை சுற்றி இருக்கிறீர்கள்? உங்கள் அனைவருக்கும் அய்யப்பன் பதில் தருவார் என்று ஆவேசமாக கூறினார். ஆனால் சபரிமலை சன்னிதானத்தில் சசிகலா தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளா போலீசும் சசிகலா அங்கு தரிசனம் செய்ததை உறுதி செய்துள்ளனர். 

சபரிமலை கோவிலில் சசிகலா தரிசனம் செய்யும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  சசிகலா அய்யப்பன் கோவிலுக்குள் வந்தார். நீதிமன்றமோ, எந்தஒரு சட்ட முகமையோ ஆதாரம் கோரினால் அவர் கோவிலுக்குள் நுழையும் வீடியோ காட்சியை சமர்ப்பிப்போம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக