ஞாயிறு, 13 ஜனவரி, 2019

பேட்ட-விஸ்வாசம்: முதலுக்கே மோசம், லாபம் எங்கே?

பேட்ட-விஸ்வாசம்: முதலுக்கே மோசம், லாபம் எங்கே?மின்னம்பலம் :தமிழ் சினிமா 365: பகுதி - 13
இராமானுஜம்
“என்னய்யா சினிமா எடுத்திருக்கானுங்க? பொங்கல் நமக்கு பொங்காது போலயே அடுத்த வாரம் வேறு புதுப் படம் தேட வேண்டியதுதான்” என புலம்பியவரிடம், “யோவ் நீ போட்ருக்கிற ரெண்டு படமும் 3 நாளில் 100 கோடி வசூல் செஞ்சுருக்குனு டுவிட்டருல போட்ருகானுவலே. நீ என்னடான்னா அண்ணாமலை படத்துல பாத்ரூம்ல குஷ்பூவ ஆடை இல்லாம பாத்துட்டு பிரமை பிடித்து புலம்பற ரஜினி மாதிரியே பினாத்துறயே பேட்ட படம் போட்டுட்டு” என அதை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தவர் எதிர் கேள்வி கேட்டார். .
மதுரை அருகில் உள்ள திரையரங்குக்கு வெளியில் உரிமையாளரும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தபோது விஸ்வாசம் என்றோம். “அட அத ஏம்பா கேட்டு உசுப்பேத்துறீங்க?” என்றவர், தொடர்ந்து......
“பேப்பர், டிவி, டிவிட்டர்ல பேட்ட-விஸ்வாசம் வசூலை வாரிக் குவிக்குதுனு கூவுறவனுகள தியேட்டர்ல வந்து பாக்கச் சொல்லுங்க தம்பி. ஒரு ஷோவுக்கு 100 டிக்கெட்டை தாண்டுறதுக்கே இங்க மூச்சுத் திணருது. முதல் நாள் ரெண்டு நடிகனோட ரசிகனுங்க புண்ணியத்துல கல்லா நிரம்பியது அடுத்தடுத்த நாட்களில் சுகப்படலதம்பி” என்றார். அப்படி என்றால் தியேட்டர்களுக்கு நஷ்டம் வருமே என்ற போது “ஏன் வருது? ஏன் வருது?” என வடிவேல் கணக்காய் இழுத்தவர்,
“கொழுப்பெடுத்து போய் மூன்றாவது தரப்பாக எம்.ஜி. அடிப்படையில் தியேட்டரில் படத்தை போட்டவனுகளுக்குத்தான்
நஷ்டம் வரும்.
நமக்கு வாடகை தான் தம்பி” என்றார். அப்படி என்றால் அவர்களுக்கு நஷ்டம்தானே என்ற போது "தம்பி நடிகனுக்கு ரசிகனா இருந்தா ஒரு டிக்கெட் எடுத்தமா படம் பார்த்தமான்னு போயிடனும் அதை விட்டுட்டு தியேட்டர்ல 3ஆவது நபராக விநியோகஸ்தரிடம் மினிமம் கேரண்டி தொகை கொடுத்து படம் போட்டாரு ரசிகர் மன்ற தலைவர். அவர் மாட்டுனது மட்டுமில்லாம முதல் நாள் காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் இன்னொரு ரசிகர் மன்ற தம்பி அதிக விலைக்கு வாங்கிட்டாரு. இப்ப ரெண்டு பேருமே முட்டு சந்துல முட்டிகிட்டு புலம்பறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஒரே நாளில் போட்ட முதலீட்டில் பாதி திரும்ப வராது என்கிற போது என்ன செய்வாங்க முட்டு சந்துல தான் முட்டிக்கிறணும். அவனுக தலைவா, தல என கோஷம் போடுகிற நடிகருங்க நஷ்டத்தை கொடுக்கவா போறாங்க” என சோகம் இழையோடிய குரலில் உரையாடியவரிடம் ‘இங்க மட்டுமா, இல்ல....’ என்ற போது, “தம்பி எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை” என்றார்.
பேட்ட-விஸ்வாசம் படங்கள் திரையிடலில் என்னதான் நடந்தது என விசாரித்த போது, தென் மாவட்டங்களில் பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நட்சத்திர நடிகர்கள் நடித்த படத்தின் உரிமையை வாங்குகிற விநியோகஸ்தரே தியேட்டர் இருக்கும் பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற தலைவர்களை உசுப்பேத்தி மினிமம் கேரண்டியில் படத்தைத் திரையிட ஏற்பாடு செய்து விடுகின்றனர். பல ஊர்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகும் வக்கில் போல அவர்களாகவே விநியோகஸ்தர் வலைக்கு வந்து மாட்டிக் கொள்வதும் நடந்திருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்களைப் பொறுத்தவரை வாடகை, கேண்டின் வியாபாரம், பார்க்கிங் மூலம் வருகிற வருமானம் போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர்.
காரணம் தென் மாவட்டங்களில் விஜய், அஜித், ரஜினி நடித்த படங்களைத் திரையிட தியேட்டரில் கேட்கப்படும் எம்.ஜி, அட்வான்ஸ் தொகை நடிகர்களின் தகுதிக்கு மீறி கேட்கின்றனர். அந்த தொகை பெரும்பான்மையான படங்களுக்கு மொத்த வசூல் கூட ஆகவில்லை. அதனால் தொடர் நஷ்டத்தில் இருந்து விடுபட வே இப்படியொரு முடிவுக்கு வந்தோம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களையும் பெரும்பான்மையான தியேட்டர்களில் திரையிட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கின்றனர். இந்த தொகை வசூல் மூலம் திரும்ப கிடைக்குமா என்ற அச்சம் கடந்த இரு நாட்களாக நிலவி வருகிறது. ரசிகர் மன்றத்தினரை நம்பி முதல் நாள் முழு காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் அசலை தேற்ற முடியாமல் 50% . நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
நாளை: வட மாவட்ட நிலவரம் என்ன?
நேற்றைய பகுதி: தமிழ் சினிமா 365: பகுதி - 12: பலிகடாவான ரசிகர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக