புதன், 23 ஜனவரி, 2019

நடிகர் அஜித் மற்றும் நடிகர் தினகரன் ... பாஜகவின் பல்வேறு முகங்கள்

LR Jagadheesan : நேற்றில் இருந்து நடிகர் அஜித் பாஜகவை எதிர்ப்பதாக
நம்புவதைப்போலவே ஜெயலலிதா இறந்தபின் டி டி வி தினகரன் மு க ஸ்டாலினைவிட தீவிரமாக பாஜகவை எதிர்ப்பதாக பலரும் இதே சமூக ஊடகங்களில் விதந்தோதிக்கொண்டிருந்தனர்.
தமிழிசைக்கான தனது மறுப்பறிக்கையில் அஜித் எப்படி தமிழிசையின் பெயர்கூட குறிப்பிடாமல் பவ்யமாய் அறிக்கை விட்டாரோ அப்படித்தான் டிடிவியும் ஆரம்பம் முதலே தெருவோர வித்தைக்காரன் கீரி பாம்பு சண்டையிடும் என்று வித்தைகாட்டி காசு பறிப்பதைப்போல பாஜகவை எதிர்க்க திமுகவை விடவும் ஸ்டாலினைவிடவும் நானே சரியான ஆள் என்று பொய்வித்தை காட்டிக்கொண்டிருந்தார்.
ஆர் எஸ் எஸ் என்பதும் அதன் அரசியல் கட்சியான பாஜக என்பதும் “சித்தாந்த” (அது அழிவுக்கானது என்பது வேறு) ரீதியிலும் நிறுவனரீதியிலும் வலுவான அடிப்படை கட்டமைப்பு கொண்டவை. அதை சித்தாந்த ரீதியிலும் நிறுவன ரீதியாகவும் எதிர்த்துக்கொண்டு தேர்தல் அரசியலிலும் தமிழ்நாட்டில் வெல்ல வேண்டுமானால் திக, திமுக ஆகிய இரு அமைப்புகளின் கூட்டு போராட்டத்தால் மட்டுமே அது சாத்தியம். அதுவும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளின் துணையோடு.
தனது இந்த முதன்மையான இலக்கை திகவும் திமுகவும் போதுமான வேகத்தில் போதுமான வகையில் போதுமான அளவுக்கு பொறுப்புணர்ந்து செய்கின்றனவா இல்லையா என்பதையொட்டி ஆயிரம் விமர்சனங்கள், கவலைகள் இருக்கலாம்.

ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜகவை எதிர்க்கவேண்டுமானால் திக, திமுக ஆகிய இரு அமைப்புகளை விட்டுவிட்டு, புறந்தள்ளிவிட்டு, தோற்கடித்துவிட்டு தமிழ்நாட்டில் அதை ஒருநாளும் செய்ய முடியாது என்கிற யதார்த்தத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
மாறாக டிடிவி போன்றவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ்/பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவார்கள் என்று நீங்கள் நம்பினால் ரஜினி சொன்ன அந்த ஆண்டவனால் கூட உங்களையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற முடியாது.
https://m.dailyhunt.in/…/tinakaranukku+mathiya+amaichar+bat…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக