செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை: லண்டன் மருத்துவர் .. விடியோ


ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை: லண்டன் மருத்துவர்மின்னம்பலம் : ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு விரும்பவில்லை என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வரும் நிலையில், அடிக்கடி புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல அப்போலோ நிர்வாகம் மறுத்துவிட்டது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘எனக்குத் தெரிந்தவரை வெளிநாடு செல்வதை ஜெயலலிதா விரும்பவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களை எழுப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக ராதாகிருஷ்ணனை விசாரிக்கவும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஒருவருடன் உரையாடும் ரகசிய வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், “ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் 2016 நவம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு என்னை அழைக்கவில்லை. அப்போலோவில் இயன்ற அளவுக்கு ஜெயலலிதாவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.
அவருடன் உரையாடும் நபர், “கலைஞர் முதல்வராக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்வதற்கு அவர் உடன்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். அதுபோல ஜெயலலிதாவை லண்டன் அழைத்துச் செல்வது தொடர்பாக சசிகலா என்ன கூறினார்?” என்று கேட்கிறார்.
அதற்கு, “வெளிநாடு செல்ல வேண்டியது அவசியமா என்று சசிகலா என்னிடம் கேட்டார். கண்டிப்பாகப் போக வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தால் அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். முதலில் சசிகலாவைச் சந்தித்தபோது சமநிலையை பேணுவது சற்று சிரமமாகவே இருந்தது. பின்னர் ஜெயலலிதாவே வெளிநாடு செல்ல விரும்பவில்லை” என்று பதிலளிக்கிறார் ரிச்சர்ட் பீலே.
இது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பதிவான வீடியோ என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக