ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மோடியின் முடிவால் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரிப்பு

tamil.thehindu.com என்.ராம் : பல்வேறு
விதிமுறைகளை கடைபிடிக்காமல்
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தாலும், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாகக் கோரப்பட்ட 13 சிறப்பு வடிவமைப்பு, மேம்பாட்டு அம்சங்களாலும், காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையும் 41 சதவீதம் அதிகமாக போடப்பட்டுள்ளது,
இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் அனைத்தும் 'தி இந்து'வுக்கு(ஆங்கிலம்) மட்டும் பிரத்யேகமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.காங். ஆட்சி முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி பாரிஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி காங்கிரஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து, 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தார்.

இந்த 36 ரஃபேல் போர் விமானங்களும் வானில் பறப்பதற்குத் தயாராக முழுத் தகுதியுடையதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் முந்தைய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் விலை அதிகமாகும்.
13 சிறப்பு அம்சங்கள்
அதாவது ரஃபேல் போர் விமானத்தில் இந்தியாவுக்கு மட்டுமே உரிய 13 சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை (India Specific Enhancements) இந்திய அரசு கேட்டிருந்தது. இந்த 13 அம்சங்களுடன் 36 விமானங்கள் வடிவமைக்க 130 கோடி யூரோ என்ற விலையை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் மிகக் குறைந்த விலையை மேற்கோள்காட்டி 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் பெற்றது.
அந்த ஒப்பந்தத்தில் 18 விமானங்கள் பறப்பதற்கு தயாரான நிலையிலும், 108 விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் வகையிலும் செய்யப்பட்டது. பறக்கும் நிலையில் உள்ள ரஃபேல் விமானத்தின் விலை 79.3 மில்லியன் யூரோ என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 2011-ம் ஆண்டு விலை உயர்வை காரணம் காட்டி விமானம் ஒன்றின் விலை 100.85 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், 2016-ம் ஆண்டில் பிரான்ஸ், இந்திய அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 2011-ம் ஆண்டு விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைக்கப்பட்டு, விமானம் ஒன்றின் விலை 91.85 மில்லியன் யூரோவாகக் குறைக்கப்பட்டது.
ஆனால், இந்திய விமானப்படை கேட்டுத்தொண்டதற்கிணங்க, இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேகமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்காக 140 கோடி யுரோவை டசால்ட் நிறுவனம் கேட்டது. அதன்பின் பேச்சுவார்த்தைக்குப் பின் விலை 130 கோடி யூரோவாகக் குறைக்கப்பட்டது.
இதன் மூலம் 36 ரஃபேல் போர் விமானங்களின் 13 சிறப்பு அம்சங்கள், வடிவமைப்புக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஒவ்வொரு விமானத்துக்கும் 11.11 மில்லியன் யூரோ என்ற நிலையில் இருந்து 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 36.11 மில்லியன் யூரோவாக அதிகரித்தது.
காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு மட்டுமான பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகை 126 விமானங்களுக்கானது, ஆனால் அதை விட சற்றே குறைக்கப்பட்ட விலையில் 36 ரபேல் விமானங்களுக்கும் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகையையும் மோடி தலைமை பாஜக அரசு ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டது  இதனால்தான் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகரித்துள்ளது. இதே இப்போதைய மையப் பிரச்சினையும் சர்ச்சையும்.
அதாவது சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் இந்தியாவுக்கான பிரத்யேக வடிவமைப்புகளுக்கான தொகை ஐமுகூ ஆட்சி ஒப்பந்தத்தில் 126 விமானங்களுக்குமானது, ஆனால் பறக்கக்கூடிய நிலையில் வாங்கும் 36 ரபேல் விமானங்களுக்கும் அதே தொகை, அதாவது சற்றே குறைக்கப்பட்ட தொகை, இதுதான் 41% விலை அதிகமானதற்குக் காரணம்.
3 பேர் எதிர்ப்பு
'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் சார்பில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு(ஐஎன்டி)வில் இருந்த 7 பேர் கொண்ட குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் 3 மூத்த அதிகாரிகள் இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் வர்மா (இணைச் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர்), அஜித் சுலே (நிதி மேலாளர்), எம்.பி. சிங்(ஆலோசகர்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு மட்டுமே உரிய 13 சிறப்பு அம்சங்கள் வடிவமைப்புக்காக டசால்ட் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ள விலை மிக அதிகமாகும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ரஃபேல் விமான விலை குறித்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 பேரில் 3 பேர் விலை உயர்வை எதிர்த்த நிலையில், 4 அதிகாரிகள் ஆதரித்துள்ளனர்.
அதாவது, இந்திய விமானப்படையின் துணைத் தலைவர், இணைச் செயலாளர் (பாதுகாப்பு மேலாண்மை), இணைச் செயலாளர் மற்றும் கூடுதல் நிதி ஆலோசகர், மற்றும் ஏர் ஸ்டாப் துணைத் தலைவர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
7 பேர் கொண்ட குழுவில் 4 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், 3 பேரின் எதிர்ப்பு எடுபடவில்லை. 4:3 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
2009-ம் ஆண்டு 126 விமானங்களுக்குக் கோடிட்ட 140 கோடி யூரோவைக் காட்டிலும், 2015-ம் ஆண்டு மே மாதம் நிர்ணயிக்கப்பட்ட 130 கோடி யூரோ சிறந்தது என அதிகாரிகள் 4 பேர் ஆதரவு தெரிவித்துவிட்டனர். இதுபோல் 10 விதமான கேள்விகள் எழுப்பப்பட்டபோதும், 4:3 என்ற வாக்குகளின் அடிப்படையில் முடிக்கப்பட்டு, இந்திய பேச்சுவார்த்தை குழு தங்களின் அறிக்கையையும் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி தாக்கல் செய்தனர்.
பாதுகாப்பு துறை கொள்முதல் குழு:
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் விதிகளின் கீழ் கொள்முதல் செய்ய அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பொறுப்பில் இருந்து விலகி அந்தப் பொறுப்பை பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக்கு மாற்றிவிட்டார்.
பிரதமர் மோடி ஏற்கனவே எந்த விதமான முன்அறிவிப்பும் இன்றி 2015-ம் ஆண்டு 36 ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுவிட்ட நிலையில், அதில் இருந்து மாற முடியாது என்பதால், இதைப் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழுவுக்கே மாற்றப்பட்டது.
ஆனால், ரஃபேல் போர்விமானங்களில் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான 13 சிறப்பு அம்சங்கள், வடிமைப்புகள் என்ன என்பதை பாஜக அரசு தேசிய பாதுகாப்பு கருதி வெளியிட மறுத்துவிட்டது. சில தகவல்கள் அது தொடர்பாக முன்கூட்டியே வெளியாகின. குறிப்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) சிறப்பு நிருபர் தினகர் பெரி இதை 2018 நவம்பரில் வெளியிட்டிருந்தார்.
மற்ற நாடுகளின் போர்விமானங்களில் இல்லாத அம்சங்கள் இந்த 13 சிறப்பு அம்சங்களில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அதிநவீன ரேடார்கள், ஹெல்மெட்டில் டிஸ்ப்ளே, உயர்வாகப் பறந்தவாறே தாக்கும் வசதி, அதிநவீன சென்சார், ஜாமர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதா?
பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் தவிர்த்து வேறு நிறுவனமும் குறைந்த விலையில் போர்விமானங்களை அளிக்க இந்திய அரசிடம் கோரியது. குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை உள்ளடக்கிய யூரோபைட்டர் டைப்பூன் கன்சோர்டியம் (இஏடிஎஸ்) தொடர்பு கொண்டது.
20 சதவீதம் தள்ளுபடி விலையில் 126 போர் விமானங்களை வழங்குவதாகக் கூறியும் அது நிராகரிக்கப்பட்டது.
ஆனால், இஏடிஎஸ் அமைப்பு தங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விமானங்கள் வழங்குவதாகக் கூறியுள்ளது என்ற விஷயத்தைக் கூறி டசால்ட் நிறுவனத்துடன் இந்திய பேச்சுவார்த்தைக் குழு பேரம் பேசி இருக்க வேண்டும். ஆனால், 4:3 என்ற வாக்குகள் அடிப்படையில் மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.
இது தவிர அருண் ஜேட்லி பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்பஸ் நிறுவனமும் போர் விமானங்களை 20 சதவீதம் தள்ளுபடி விலையில் சப்ளை செய்ய முன்வந்தது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி கடிதமும் அந்த நிறுவனம் எழுதி இருந்தது. ஆனால், அந்தச் சலுகையும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.
36 விமானங்களுக்கு 130 கோடி யூரோ
2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களில் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டுக்காக 140 கோடி யுரோ விலையை டசால்ட் நிறுவனம் நிர்ணயித்து இருந்தது. ஆனால், பாஜக அரசில் 2016-ம் ஆண்டு செய்யப்பட்டஒப்பந்தத்தில் 36 ரஃபேல் போர்விமானங்களில் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டுக்காக 130 கோடி யூரோ என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையைக் காட்டிலும் 25 மில்லியன் யூரோ அதிகமாக பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலையைக் குறைத்துவிட்டதாக பாஜக அரசு கூறிவருகிறது. ஆனால், 9 சதவீதம் விலை குறைப்பைக் காட்டிலும், ஒவ்வொரு விமானத்தின் மீதும் 25 மில்லியன் யூரோ விலை உயர்வு என்பது மிக அதிகமாகும்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அளித்த விளக்கத்தில் காங்கிரஸ் அரசு ரஃபேல் போர் விமானத்துக்கு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் நாங்கள் 9 சதவீதம் விலையைக் குறைத்துவிட்டோம். ஒரு விமானத்துக்கு 100.85 யூரோ என்று விலை இருந்த நிலையில் நாங்கள் 91.75 யூரோ என்று குறைத்தோம் என்று தெரிவித்தார்.
ஆனால், விமான வடிவமைப்பு, சிறப்பு அம்சங்களுக்காகச் செலவிடப்பட்ட, ஒரேயொரு முறை மட்டுமே ஆகும் செலவு அதாவது மீண்டும் மீண்டும் வராத செலவுத் தொகை குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. 36 ரஃபேல் விமானங்களின் சிறப்பு அம்சங்களுக்காக 127.86 மில்லியன் யூரோ விலை வழங்க பாஜக அரசு ஒப்புக்கொண்டது. இது 2007-ம் ஆண்டு டசால்ட் நிறுவனம் கூறிய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் அதிகமாகும்.
மேலும், டசால்ட் நிறுவனம் விலையில் 9 சதவீதம் அளித்த தள்ளுபடிக்காக 'பாலோ-ஆன் கிளாஸ்' என்ற சிறப்பு வசதியையும் பாஜக அரசு ரத்துசெய்ய ஒப்புக்கொண்டுள்ளது. 'பாலோ-ஆன் கிளாஸ்' என்பது, தற்போது என்ன விலையில் விமானம் கொள்முதல் செய்கிறோமோ அதேவிலையில் அடுத்த கட்டமாக நாம் வாங்கும் விமானங்களில் 50 சதவீதத்துக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்புத் துறை தளவாடங்கள் கொள்முதலில் இந்த 'பாலோ-ஆன் கிளாஸ்' என்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசில் இந்த வசதி இருந்தது. ஆனால், இதை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி 126 விமானங்களுக்கான விலையும், அடுத்த கட்டமாக 63 விமானங்கள் வாங்கும் போது விலையை உயர்த்தக்கூடாது என்பதாகும். ஆக (126+ 63) 189 விமானங்களுக்கான விலை மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.
விதிமுறை மீறல்கள்
இதன் மூலம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. நிதி வல்லுநர்கள் கண்டறிந்த வகையில், அரசியல் நோக்கத்துக்காக தன்னிச்சையாக 520 கோடி யூரோவில் இருந்து 820 கோடி யூரோவாக உயர்ந்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஒட்டுண்ணி முதலாளித்துவம் (குரோனி கேபிடலிஸம்) பின்புலத்தில் இருப்பது தெரிகிறது.
ஆனால், ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலோடு ஒப்பிடும்போது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பண விவகாரங்கள் ஏதும் பின்புலத்தில் இருக்கிறதா என்பது இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக