திங்கள், 21 ஜனவரி, 2019

சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலை; 6 பேர் கைது: 3 சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

THE HINDU TAMIL : கொலை செய்யப்பட்ட ஏசுராஜன், குமரேசன், குமரன் சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பில் ரவுடி கொலை: சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (22) . குற்றச்செயலகளில் ஈடுபட்டு வந்தவர் வழிப்பறி வழக்கில் டிபி சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்த இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார்.  நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சூதாட்டத்தில் குமரனுக்கும் மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி குமரனை சக நண்பர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்க குமரன் சாலையில் ஓடியுள்ளார்.

ஆனால் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் குமரனைத் துரத்திய கும்பல் அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, வெட்டிவிட்டுத் தப்பியது. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த குமரன் அங்கேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீஸார் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குமரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹைதர் (எ) அப்புவுக்கும் (25) முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் சூதாட்டம் ஆடிய போது ஏற்பட்ட தகராறில், ஹைதர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரனைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புளியந்தோப்பு போலீஸார் ஹைதர் (எ)அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன், பவித்ரன் ஆகிய 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஆவடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை:
ஆவடி நந்தவனம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது அண்ணன், தங்கை குடும்பத்தாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவராஜ், தங்கை மகன் முரளி இருவரும் வீட்டில் உள்ள மின்மோட்டாரைப் பார்த்துள்ளனர்.
அதில் மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மதுபோதையில் இருந்த அவர்கள் இருவரும், ஆட்டோ பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகத்திடம் இதுகுறித்துக் கேட்டுள்ளனர். அண்ணன் மகன், தங்கை மகன் என்கிற உரிமையில் அவர்களை ஆறுமுகம் சத்தம் போட்டுள்ளார்.
மதுபோதையிலிருந்த அவர்கள் ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனர். கட்டையாலும், கடப்பாரையாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஆறுமுகத்தைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகத்திடம் தகராறு செய்து தாக்கிய அண்ணன் மகன் முரளி, தங்கை மகன் தேவராஜ் இருவரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் (மேற்கு) முதியவர் கொலை:
அண்ணாநகர் மேற்கு விரிவு கலெக்டர் நகர் முதல் தெருவில் வசித்தவர் ஏசுராஜன் (70). இவரது மனைவி கலா (65). ஏசுராஜன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இடையில் கடந்த ஓராண்டுக்கு முன் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக இருந்தார்.
ஏசுராஜன் மகன் அருள்ராஜ். இவரது மனைவி அல்பேன்ஸ் ரூபி. இவர்களுக்கு 2½ வருடங்களுக்கு முன் திருமணமாகி அதே தெருவில் வசித்து வந்தனர். மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதால் ஏசுராஜனுக்கு மகன் அருள்ராஜ் வீட்டிலிருந்து உணவு வருவது வழக்கம்.
அவரது தேவைகளை, துணிகளைத் துவைப்பது போன்றவற்றையும் மருமகளே கவனித்து வந்துள்ளார். இதனால் மனைவி கலாவுக்கு மருமகள் அல்போன்ஸ் ரூபியின்மேல் கோபம் இருந்து வந்தது. இதனால் அவர் தவறான தகவலைப் பரப்பியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணி அளவில் கலாவின் உறவினர் கோபால் ஏசுராஜைப் பார்க்க வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு வழக்கம்போல் மருமகள் ரூபி மாமனார் ஏசுராஜனுக்கு இரவு உணவு கொண்டு செல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போது ஏசுராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஏசுராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏசுராஜனைக் கொலை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி, கலாவின் உறவினர் கோபால், மகன் மற்றும் மருமகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரும்பாக்கத்தில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை:
அரும்பாக்கத்தில் ரவுடி ஒருவர் முன் பகை காரணமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றினர்.
சூளைமேட்டைச் சேர்ந்தவர் குமரேசன் (30). இவர் மீது சேத்துப்பட்டு மற்றும் சூளைமேடு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பள்ளிக்கரணையில் கொலை வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வியாபாரியாகவும் இருந்துள்ளார். இதே பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் மாவா வெங்கடேசன் குரூப்.
ஆரம்பத்தில் மாவா வெங்கடேசன் குரூப்புடன் இருந்த குமரேசன் பின்னர் கஞ்சா, மாவா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் பிரிந்தார். இதில் கடந்த 2017-ம் ஆண்டு குமரேசன் தாக்கப்பட்டு வெட்டு விழுந்தது. போலீஸ் பிரச்சினை காரணமாக மாவா வெங்கடேசன் குரூப் பெரும்பாக்கத்துக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டது.
இந்நிலையில் கடந்த  ஆண்டு பள்ளிக்கரணையில் யுவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரேசன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்குக்காக  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அரும்பாக்கம் திரும்பினார் குமரேசன். அப்போது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு குமரேசன் கூட்டாளிகளுடன் வெளியே வந்தார்.
அவருக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கத்தியுடன் அவர்களை விரட்டியது. இதைப் பார்த்த குமரேசன் தப்பி ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் விரட்டிச் சென்று அவரைச் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் உயிரிழந்தார். சாலையில் நடந்த கொலையைக் கண்ட பொதுமக்கள் அலறி ஓடினர்.
இந்தக் காட்சிகள் அருகிலிருந்த ஒரு கடையில் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என விசாரணை  நடத்தி வருகின்றனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து சகாயராஜ் என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பில் மற்றொரு ரவுடி இதேபோன்று விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஜெ.ஜெ.நகர் முதியவர் ஏசுராஜ், ஆவடி ஆறுமுகம் என சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்தது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக