ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அரசு ஊழியர்களின் ரூ.21,181 கோடி எங்கே? எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லமுடியுமா?


அரசு ஊழியர்களின் ரூ.21,181 கோடி எங்கே?மின்னம்பலம் : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆவேசம்!
அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் சிபிஎஸ் பிடித்தம் செய்த ரூ.21,181 கோடி எங்கே என எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லமுடியுமா? புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்காமலிருக்க புதிய அரசாணை போட்டது யார் எனப் பல கேள்விகளுக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான சுப்பிரமணியன் மின்னம்பலத்துக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், 21 மாத நிலுவைத் தொகையைக் கேட்டும், மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 22ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் பெரும்பாலான பெண் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், தாலுக்கா அளவிலும் வீடு வீடாக தேடிச்சென்று அரசு ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்துவருகிறார்கள். மற்றொருபக்கம் கல்வித் துறை அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தும் வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்களைத் திசை திருப்பும் விதமாக, அரசு ஊழியர்கள் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள் இன்னும் ஊதியம் போதவில்லை என்று போராடுகிறார்கள், மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது என்றும் பலவிதமான செய்திகள் ஊடுருவி வருகிறது.

இந்நிலையில் நாளை (ஜனவரி 28) சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதியரசர் ஶ்ரீதர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது ஜாக்டோ ஜியோ வழக்கு. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி நீதிமன்றத்தில் சட்ட ரீதியாகவும், வெளியில் போராட்டமும் செய்துவரும் வேளையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனைத் தொடர்புகொண்டு ஆளுங்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும், பொதுமக்களின் எழுப்பும் வினாக்களையும் அவரிடம் முன்வைத்தோம். அதைக் காண்போம்.
உங்கள் கோரிக்கை என்ன?
பதில்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், பள்ளி கல்வித் துறையுடன் துவக்கப்பள்ளி துறையை இணைக்கக் கூடாது, ஊரக வளர்ச்சித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பால்வாடியை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது, ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், 21 மாதம் அரியர்ஸ் வழங்கவேண்டும் என பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அதற்காக வருடந்தோறும் மாணவர்கள் பொதுத் தேர்வு நேரத்தில், வீதிக்கு வந்து வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது நியாயமா?
பதில்: அமைதியாக மனுகொடுத்து பார்த்தோம், நேரடியாகப் பேசி பார்த்தோம், பலவழிகளில் கேட்டு பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பிரச்சனைகளைப் போராட்ட வடிவில் மக்கள் மத்தியில் வைக்கிறோம்.

நாடு முழுவதும் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியபோது நீங்கள் மட்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கேட்பது நியாயமா?
பதில்: காவல் துறையில் டாக் ஸ்குவாடு என்று நாய் வளர்க்கிறார்கள் அந்த நாய்க்குக்கூட பழைய பென்ஷன் திட்டத்தைத்தான் அமல்படுத்துகிறார்கள் ஏன்? எம்.எல்.ஏ, எம்.பி,களும் பழைய பென்ஷன் திட்டத்தைத்தானே அமல்படுத்திவருகிறார்கள், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம்தானே கொடுக்கப் போகிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு சேர்த்து கொடுக்க மனம் இருந்தாலும், கொடுப்பதற்கு நிதி இல்லை என்றும் உங்கள் போராட்டம் மக்களுக்கு எதிரானது என்றும் ஆளுங்கட்சியினர் கூறுகிறார்களே?
பதில்: 2018 ஜூன் 3ஆம் தேதி வரையில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 10% விழுக்காடு சிபிஎஸ் பிடித்த ரூ.21,181 கோடி பணம் எங்கே இருக்கிறது யாரிடம் இருக்கிறது என்ன ஆனது விழுங்கிவிட்டார்களா அல்லது விட்டு வைத்துள்ளார்களா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் சொல்வாரா அல்லது அந்தப் பணத்தை ஊழியர்களிடமே உடனடியாக திருப்பி கொடுப்பாரா?

ஆசிரயர் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லபோகிறிங்க?
பதில்: தனியார் கல்விக்கு ஊக்குவிப்பது யார், தனியார் பள்ளி கல்லூரிகளின் உரிமையாளர்கள் யார் எல்லோரும் அரசியல்வாதிகளும் பண முதலைகளும்தானே, கல்வியைப் பொதுவுடைமையாக்கினால் அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில்தானே படித்தாக வேண்டும், தனியார் பள்ளிக் கல்லூரிகளை அரசுடைமையாக மத்திய மாநில அரசுக்குத் தைரியம் இருக்குமா?
அரசு ஊழியர்கள் சங்கம், ஜாக்டோ ஜியோவில் இருப்பவர்கள் திமுக கம்யூனிஸ்ட் என்று சொல்கிறார்களே?
பதில்: அவர்கள் சொல்வது உண்மை என்றால் கம்யூனிஸ்ட் கட்சி தானே ஆட்சியைப் பிடித்திருக்கவேண்டும், திமுகவாக இருந்திருந்தால் ஆட்சியை நழுவ விட்டிருக்காதே, உழைப்பவர்கள், ஊழியர்கள் சங்கத்திற்கு சாதியும் இல்லை கட்சியும் இல்லை, மதமும் இல்லை, அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை அப்படியென்றால் அதிமுகவினர் யாரும் அரசு ஊழியராக இல்லையா? சாதி மதம் கட்சி கடந்து நாங்கள் உரிமைக்காக ஒற்றுமையாகப் போராடுகிறோம்.
உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்துக் கட்சியினரையும் சந்தீப்பிர்களா?
பதில்: நிச்சயமாகச் சந்திப்போம் ஆதரவு கேட்போம் ஆதரவு கரம் நீட்டுவார்கள், நாளை ஜனவரி 28ந் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
உங்கள் பிரச்சனைகளுக்கு மட்டும் போராடுகிறீர்களா?
பதில்: அரசு ஊழியர்கள் பல போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாகப் போராடியுள்ளோம். இந்தப் போராட்டத்தில் முக்கியமாகப் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் 3 ½ லட்சம் காலி பணியிடங்களை நிரப்புங்கள் என்று கேட்டு போராடுகிறோம். ஆனால் இந்த அரசு புதிய வேலை வாய்ப்பு இல்லை என்று ஜி ஓ 56 போட்டுள்ளது, ஆதிசேஷன் தலைமையில் ஒரு கமிட்டி போட்டு 3 ½ லட்சம் பணியிடங்களை நிரப்பக் கூடிய அவசியம் இருக்கிறதா என்று, இந்த ரகசியத்தை அமைச்சர் ஜெயகுமார் அவர்களைப் பேட்டி கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அரசுக்கு வருமானம் இல்லை என்கிறார்களே உண்மையா?
பதில்: கனிமவளம் கொள்ளையால் ரூ 2 லட்சம் கோடி வரி வசூலிக்க முடியாமல் விட்டார்கள் என்று சகாயம் ஐ.ஏ.எஸ், கமிட்டி சொல்லியுள்ளது. அந்த கொள்ளையர்கள் யார் அவர்கள் பின்னால் போராடும் அப்பாவி அரசு ஊழியர்களா இருக்கிறார்கள்?
அரசு திட்டங்களை செயல்படுத்த அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகச் சொல்கிறார்களே?
பதில்: பொதுப்பணித்துறை வேலைகளையும், நெடுஞ்சாலைத் துறை வேலைகளையும் அரசு மிஷினரி வைத்து அரசு ஊழியர்களை வைத்து தரமாக வேலை செய்யலாமே, ஏன் ஒப்பந்தக்காரர்களுக்கு விடுகிறார்கள் எத்தனைச் விழுக்காடு வேலை தரமாக நடைபெறுகிறது, ஒப்பந்தக்காரார்களிடம் 20% க்கும் மேற்பட்ட கமிஷன் வாங்கிக் கொள்ளையடிப்பது யார் அரசு ஊழியர்களா சொல்லுங்கள், மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்துவோமா? அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்பமுடியாது.
ஜெயலலிதாவைப் போல் ஆட்சி நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கிறார்களே?
பதில்: அந்த அம்மையார் செய்த தவறை உணர்ந்தார். ஜாக்டோ ஜியோவினரை மூன்று முறை அழைத்துப் பேசினார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதிக் கொடுத்தார். சட்டமன்றத்தில் பல கோரிக்கைகளை நிறைவேற்றினார் ஜெயலலிதா. அவருக்கு இருந்த தகுதியும் திறமையும் இவரிடம் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவாக முடியாது.
போராட்டத்தை உருவாக்குவது யார் அரசு ஊழியர்களா அல்லது ஆட்சி நடத்துபவரா?யாருடைய மதியற்ற ஆலோசனையில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துவருகிறார்கள், நிர்வாகிகளை பொய்வழக்கு போட்டுச் சிறைக்குள் தள்ளிவருகிறார்கள், சரி அந்த இடத்தில் தற்காலிக பணியாளர்களை நியமித்து வருகிறார்கள், நீதி மன்றம் தீர்ப்பின்படி அரசு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினால் அவர்கள் என்ன செய்வார்கள். பலகனவுகளோடு பத்தாயிரம் சம்பளமாகவிருந்தாலும் அரசாங்கம் வேலை என்று வந்துள்ளவர்களை திடீரென்று உங்களுக்கு வேலையில்லை நீங்கள் வீட்டுக்கு போங்கள் என்றால் அவர்கள் போவார்களா? அதன் பிறகு அவர்கள் வேலைகேட்டு போராட மாட்டார்களா? அப்போது அவர்களையும் கைது செய்வீர்களா?
அப்பேதுகூட எங்கள் சங்கம் அவர்களுக்கும் வேலைக் கொடுங்கள் என்றுதான் போராடுவோம், போராட்டத்தைத் தூண்டுவது அரசு ஊழியர் சங்கங்கள் இல்லை ஆளத்தெரியாத ஆட்சியாளர்கள்தான் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். 214 சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நாளை நீதி மன்றம் தீர்ப்புக்கு காத்திருக்கிறோம் காலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறி முடித்தார் சுப்பிரமணியன்.
-எம்.பி.காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக