புதன், 9 ஜனவரி, 2019

கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை மக்கள் கொண்டாட்டம்

tamilthehindu : புதிதாக உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கியச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார்.
சுற்றுலாத் தலமான கல்வராயன் மலை.
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.

இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் இதை வலியுறுத்தி வந்தனர். கள்ளக்குறிச்சித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவும் சட்டப்பேரவையில் இக்கருத்தை பலமுறை வலியுறுத்திஇருந்தார்.
இந்த சூழலில், நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு, கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக விளங்கியபோது, இம்மாவட்டத்தை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1993-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடலூர் மாவட்டத்தை பிரித்து விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினார். விழுப்புரம் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியின்போதே கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியிலேயே விழுப்புரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்த நிலையில், தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோயிலூர் ஆகிய 5 வட்டங்கள் வருகின்றன.
சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுகவினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
முதல்வரின் மகன் போட்டி?பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாரிசுகளை களமிறக்கி வரும் நிலையில், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை அறிவித்ததன் பின்னணியில், முதல்வர் தனது வாரிசான மிதுன்குமாரை, நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சித் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
டெல்லியில் அரசியல் செய்ய தனக்கு நம்பகமான ஒருவர் தேவைப்படுவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனை களமிறக்கி வெற்றி பெறச்செய்யும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குமரகுருவிடம் கேட்டபோது, ‘‘தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. எனவே சட்டப்பேரவையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாவட்டக் கோரிக்கையை வைத்தேன். அதை முதல்வர் நிறைவேற்றித் தந்துள்ளார். மற்றபடி வேறு அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை” என்றார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கருத்துகள்ளக்குறிச்சி (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான ஐ.பிரபுவிடம், புதிய மாவட்டம் உருவானது தொடர்பாக கேட்டபோது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நடந்து முடிந்த அனைத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும், தனி மாவட்டம் குறித்து வலியுறுத்தி வந்தேன். தற்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக