சனி, 26 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ ..: கைதான நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல்! தற்காலிக ஆசிரியர்களின் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

tamil.indianexpress.com : தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பணி என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அப்போது அவர், “பணிக்கு வராத ஆசிரியர்கள் நாளை (இன்று) பள்ளியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்கள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை கிடையாது. ஆனால் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பணிக்கு வருவார்கள் என்று தெரிகிறது.
மேலும் படிக்க – ஜாக்டோ ஜியோ போராட்டம் : தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இந்த நிலையில், இவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த ஊதியத்தை ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய கடிதத்தில், “ஜனவரி 22-ம் தேதியில் இருந்து அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்காக தகுதியுள்ள ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய ஆசிரியர்களுக்கு தொகுப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த தொகையை மாதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
25-ம் தேதிக்குள் பணியில் சேரவேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டதை ஆசிரியர்களுக்கு கூறியிருக்கிறோம். ஆனாலும் பல ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேரவில்லை. எனவே இதை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க களப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய பணியாகும். உங்களின் உதவி இல்லாமல் இந்த பணியை நிறைவேற்ற முடியாது. எனவே நீங்கள் தனிக்கவனம் செலுத்தி, அனைத்து பள்ளிகளும் எந்தத் தடையும் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கோவையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 11 பேருக்கு பிப்.1-ம் தேதி வரை சிறை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நெல்லையில் கைதான ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 பேருக்கு பிப்.8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக