புதன், 26 டிசம்பர், 2018

தேர்தல் தோல்வி: அமித் ஷா Vs கட்கரி..

மின்னம்பலம் : “எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் சரிவர செயல்படாததற்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும்” என்று அமித் ஷாவை நிதின் கட்கரி மறைமுகமாகச் சாடியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் (டிசம்பர் 24) புலனாய்வுத் துறை அதிகாரிகளின் 31ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். என்னுடைய கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் சரிவர செயல்படவில்லை. அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும், நான்தானே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சகிப்புத்தன்மை மிகப்பெரிய சொத்து என்று தெரிவித்த கட்கரி, இந்தியா ஒரு தேசமல்ல, மக்களின் தொகுப்பு என்றும், முன்னாள் பிரதமர் நேருவைத் தனக்குப் பிடிக்கும் என்றும், தீர்வு கொடுக்க முடியாத ஒருவர், குறைந்தபட்சம் பிரச்சினைகளை உருவாக்காமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், “ஆட்சிகள் மாறிக்கொண்டிருந்தாலும் நாடு அப்படியேதான் இருக்கும். இந்த நாடு எந்தவொரு கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ சொந்தமானது அல்ல, 120 கோடி மக்களுக்குச் சொந்தமானது” என்றும் நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்பு புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, தேர்தல்களில் தோல்வியடைந்தால் கட்சியின் தலைமைதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் தனது கருத்து தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கட்கரி பதிலுரைத்திருந்த நிலையில், அமித் ஷாவை விமர்சிக்கும் விதமாக மீண்டும் அதுபோலவே பேசியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்குப் பதிலாக நிதின் கட்கரியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சமீபத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசினுடைய வேளாண் அமைப்பு ஒன்றின் தலைவர் கிஷோர் திவாரி ஆர்எஸ்எஸ் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கட்கரி இவ்வாறு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது உட்கட்சி கருத்து மோதல் என்று வெளிப்படையாகப் பேசப்பட்டாலும், ஆர்எஸ்எஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான, அதன் தலைமையகமான நாக்பூர் அமைந்திருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான நிதின் கட்கரி மூலமாக விமர்சனக் குரல் எழுப்பப்படும் நிலையில், இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக