திங்கள், 17 டிசம்பர், 2018

ஆணையர் திருமகள் கைது . அறநிலைய துறை கூடுதல் ஆணையர்

மின்னம்பலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையரான திருமகளை சிலைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டில். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு முன்பு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது புன்னைவன நாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக வேறு சிலை வைக்கப்பட்டதாகவும், ராகு, கேது சிலைகள் மாயமானதாகவும் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரையடுத்து சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்மாணிக்கவேல் தலைமையில் மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு இரண்டு நாட்களாக ஆய்வு நடத்தியது.

2004ஆம் ஆண்டில் கோயில் நிர்வாக அதிகாரியாகவும், தற்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராகவும் இருப்பவரான திருமகளின் வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் சோதனை நடத்தினர். சிலைகள் மாற்றப்பட்டது குறித்து திருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திருமகள் கைது செய்யப்படுவார் என சில செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமகள் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், குற்றம்சாட்டப்பட்ட திருமகளிடம் விசாரணை நடத்த வியாசர்பாடியில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றபோது திருமகள் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தொடர்ந்து அதிகாரிகள் தேடிவந்த நிலையில் நேற்று (டிசம்பர் 16) திருமகள் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு திருமகள் அழைத்துச் செல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக