புதன், 26 டிசம்பர், 2018

இலங்கையில் அதிபர் தேர்தல்: ஜனவரியில் தேதியை அறிவிக்கிறார் சிறீசேனா

Sirisenaதினமணி : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அவரது இலங்கை சுதந்திர கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அதிபரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதே சமயம், இலங்கை அதிபருக்கான பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதற்கு சிறீசேனா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு கட்சியினரை தயார் செய்யும் வகையிலேயே இந்தக் கூட்டத்தை அவர் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆண்டுக்கு தயாராகும்படி சுதந்திர கட்சியின் நிர்வாகிகளை அதிபர் சிறீசேனா அறிவுறுத்தியிருக்கிறார். மாகாண சபைகளின் தேர்தலும், அதிபர் தேர்தலும் அடுத்த ஆண்டில் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபரின் பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவுபெறுகிறது. அதற்கு முன்னதாகவே, 2019 ஜனவரி 8-ஆம் தேதியை ஒட்டிய சமயத்தில் தேர்தல் அறிவிப்பை சிறீசேனா வெளியிடலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த அக்டோபர் மாதம் பதவிநீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவை புதிய பிரதமராக சிறீசேனா நியமித்தார். பின்னர் திடீர் திருப்பமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்கு முன்னதாகவே, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளும் அதிபரின் முடிவுகளுக்கு எதிராக அமைந்த நிலையில், ராஜபட்ச பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. பின்னர், வேறுவழியில்லாத நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சிறீசேனா.
இருப்பினும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை சிறீசேனா அடுத்த ஆண்டில் மீண்டும் முன்னெடுப்பார் என்று டெய்லி நியூஸ் தெரிவிக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக