ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

வினவு : வணிக பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும், வினவு மாதிரி மாற்று பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும் என்ன வேறுபாடு?
– ஜேம்ஸ்
ன்புள்ள ஜேம்ஸ்,
வணிக பத்திரிகையில் சேர பட்டப் படிப்போ அல்லது பத்திரிகைத் துறையிலோ படித்திருக்க  வேண்டும். மாற்று ஊடக பத்திரிகையாளராக பரிணமிப்பத்தற்கு ஆர்வமும் பொதுநல நாட்டமும் வேண்டும். வணிக ஊடக பத்திரிக்கையாளர் துறை சார்ந்த திறமை அடிப்படையிலும் மாற்று உலக பத்திரிகையாளர் குறைந்தபட்ச திறமையோடு ஆர்வம் அர்ப்பணிப்பு அடிப்படையிலும் பணியாற்றுகிறார்கள். முன்னவருக்கு இது தொழில். பின்னவருக்கு இது கடமை. கார்ப்பரேட் ஊடகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து விளம்பரம் பெறுகின்றன. கடந்த சில தினங்களாக “உண்மை வென்றது” என்ற முதல் பக்க விளம்பரத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தை வணிக ஊடகங்கள் பெயருக்கு காட்டுவார்களே அன்றி முக்கியத்துவம் கொடுத்து காட்ட மாட்டார்கள். காலம் செல்லச் செல்ல இந்த விதிகள் – கட்டுப்பாடுகள் வணிக ஊடக பத்திரிகையாளர்களின் ஆழ்மனதில் டிஎன்ஏ போல பதிந்து விடும்.

வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது நிர்வாகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் எழுதும் ’கலை’யை பயில்கிறார். மாற்று ஊடக பத்திரிகையாளரைப் பொறுத்த வரை அரசும், போலீசுமே அதிகம் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அவற்றை உடைப்பதே அவரது முதன்மைப் பணி. கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது வனத்தில் சுள்ளி சேகரிக்கும் மக்களை ஒடுக்கும் அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து எழுதியதால் கைது செய்யப்படுகிறார். கவுரி லங்கேஷோ சுட்டுக் கொல்லப்படுகிறார். எனவே முன்னவரின் கட்டுப்பாடு என்பது ஆளும் வர்க்கம் வேண்டுகின்ற சுயதணிக்கையாக அவருடைய பணியில் இருக்கிறது. பின்னவரின் கட்டுப்பாடு என்பது அவரது பணியை முடக்கும் வண்ணம் அரசால் ஏவப்படுகிறது.


ஸ்டெர்லைட் விளம்பரத்திற்கு முன்னே, பெட்டி செய்தியாக சுருங்கிப் போன கடையடைப்பு போராட்டப் பதிவு.
கார்ப்பரேட் ஊடகங்களின் பாலபாடம் பொதுமக்களுக்கு புரியும் படியும் எளிமையாகவும் கவர்ச்சியாகவும் எழுத வேண்டும். மாற்று ஊடக பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் எழுத வேண்டும். முன்னவர் நிலவும் பொதுப்புத்தியை வைத்துக் கொண்டு அதனோடு முரண்படாமல் எழுதிச் செல்வார். பின்னவர் பொதுப்புத்தியை எதிர்த்து எழுத வேண்டியிருப்பதால் அவரது எழுத்து நிறைய சர்ச்சைகளை எதிர் கொள்ளும். முன்னவர் மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எப்படிச் சொல்லவேண்டும் என்பதில் தேர்ந்தவராக இருப்பார். பின்னவர் மாற்றத்தை நோக்கி எழுதுவதால் மக்களின் மனநிலை குறித்த பிடிமானம் ஓரளவிற்கே இருக்கும். அதனால் இவர் மக்கள் விரும்பும் வகையில் எழுதுவதை தொடர் முயற்சியில் கற்றுக் கொள்வார்.
வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது எழுத்து திறமையால் ஊடக உலகில் பிரபலமாகி தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் அடுத்தடுத்த உயர்பதவிகளையோ அல்லது சினிமா வாய்ப்புகள், தனி ஊடக நிறுவனத்தை ஆரம்பிப்பது என பயணிக்க முடியும். மாற்றுப் பத்திரிகையாளர் தனது ஊடகம் முன்வைக்கும் கருத்து – இலட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார். அவருக்கு தனிப்பட்ட பிரபலம், புகழ், அடுத்தடுத்த உயர்பதவிகளுக்குச் செல்லுதல் போன்றவை தேவையும் இல்லை – வாய்ப்பும் இல்லை. அவருக்கும் அதில் பெரிய விருப்பம் இருக்காது. முன்னவர் தன் எழுத்து மக்களால் பாராட்டப்படுவதை அதிகம் விரும்புவார். பின்னவருக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் முதன்மையாய் தன் எழுத்து மக்களிடம் உரிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மகிழ்வார்.
வணிக ஊடக பத்திரிகையாளர் நிர்வாக வரம்புகளுக்கு உட்பட்டு தனது எழுத்தை நேர்த்தியாக எழுதும் கலையில் முன்னேறுவது சில காலம் மட்டுமே இருக்கும். பிறகு அந்த தனித்திறமை கார்ப்பரேட் ஊடகங்களின் சமரசத்தோடு இணைந்து பயணிப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவரது எழுத்து தேங்கி விடுகிறது. மாற்றுப் பத்திரிகையாளருக்கு நிர்வாக சமரச வரம்புகள் இல்லை என்றாலும் அவர் பொதுமக்களிடம் தனது கருத்தைக் கொண்டு செல்வது என்ற முறையில் அமெச்சூராக ஆரம்பித்து  பிறகு தொழில்முறை பத்திரிகையாளர் என்ற நிலையை நோக்கி பயணிப்பார். இந்த அம்சத்தில் இவர் வளர்கிறார். முன்னவர் தேய்கிறார்.


வணிக ஊடக பத்திரிகையாளர் தனது செய்திகளுக்கான மூலாதாரங்களைப் பெரும் செய்தி நிறுவனங்கள், போலீஸ், நீதிமன்றம், அரசுத்துறைகள், பெரிய கட்சிகள், பிரபலங்கள் போன்றோரிடமிருந்து பெறுவார். மாற்றுப் பத்திரிகையாளர் ஒரு போலீசு தரும் செய்தியை மூலாதாரமாக வைத்துக் கொள்ள மாட்டார். நேரடியாக மக்களிடம் சென்று விசாரிப்பார். அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை பகுத்தாராய்ந்து உண்மையை கண்டுபிடிப்பார்.
கார்ப்பரேட் ஊடக பத்திரிகையாளர் தனது தொழில் நிமித்தமாக கட்சித் தலைவர்கள் உயர் அதிகாரிகள் திரை நட்சத்திரங்கள் ஆகியோரை அடிக்கடி சந்திப்பார். இந்த சந்திப்பின் மூலமாக அவர் மெல்லமெல்ல ஆளும் வர்க்க அரசியல் சட்டகத்தில் நுழைந்து இந்த அமைப்பில் தானும் ஒர் அங்கம், பெரிய அளவில் முரண்பட முடியாது என ’தெளிவு’ பெறுவார். பிரபலங்களை பார்க்க வேண்டிய தேவை மாற்று ஊடக பத்திரிக்கையாளருக்கு அதிகம் இல்லை. ஏனெனில் மேற்கண்ட நபர்கள் அனைவரும் முன்வைக்கும் கருத்துக்களை விமர்சனப் பார்வையோடு ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிப்பதுதான் அவரது பணியாக இருக்கிறது.
மாற்று ஊடக பத்திரிகையாளர் தனது எழுத்துப் பயணத்தில் பொதுவான பார்வையிலிருந்து குறிப்பான பார்வையை நோக்கி பயணிப்பார். சமூகம் பற்றிய அவரது பொதுக்கருத்துக்கள் பின்பு சமூக மாற்றம் என்ற நிலையில் குறிப்பான கருத்துக்களை நோக்கி பயணிக்கும். ஆனால் வணிக பத்திரிகையாளரோ வேலையில் சேரும் போது இருக்கும் குறிப்பான அவரது பார்வையை கருத்தை பணிக்காலத்தில் இழந்து வணிக ஊடகங்களின் பொதுவான பார்வை எனும் பொதுத்தன்மையை ஏற்பார்.
ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனும் இடம் உருவாக்கியிருக்கும் பல்வேறு சலுகைகள் உரிமைகளை வணிக பத்திரிகையாளர் பயன்படுத்திக் கொள்வார். அவரது இரு சக்கர வாகனத்தில் மீடியா என்ற பெயரை வைத்துக் கொண்டு அவர் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். மற்ற சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத சிவில் சமூக மற்றும் அரசு தொடர்புடைய பணிகள் பலவற்றை எளிதில் செய்து விட முடியும். வீடு ஒதுக்கீடு முதல் ரயில் முன்பதிவு வரை அனேக சலுகைகளை அவர் எளிதில் பெற முடியும்.


தஞ்சை ம.க.இ.க. சார்பில் பத்திரிகையாளர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கௌரிலங்கேஷ் நினைவேந்தல் நிகழ்வு.
மாறாக, மாற்று ஊடக பத்திரிகையாளர் ஒரு ஊடகவியலாளர் எனும் தகுதிகள் கிடைக்கும் சலுகைகள் உரிமைகள் எவற்றையும் பயன்படுத்த முடியாது. அவர் அரசு, அதிகார வர்க்கம் போட்டிருக்கும் தடுப்பரண்களை தாண்டித்தான் செய்தி சேகரிக்க முடியும். பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.
தனது சொந்தப் பார்வையை இழக்காமல் கார்ப்பரேட் உலகின் சமரசங்களால் வெறுப்படையும் ஒரு வணிக பத்திரிகையாளர் மாற்று ஊடகங்களை நோக்கி வரும்போது ஒரு வைரம் போல மிளிர்வார், பணியாற்றுவார். மாற்று ஊடகங்கள் கோரும் அர்ப்பணிப்பை தர முடியாமல், மக்கள் நலனிலிருந்து பின்வாங்கும் ஒரு மாற்று ஊடக பத்திரிகையாளர், வணிக ஊடகங்களை நோக்கி  பயணித்தால் விரைவிலேயே சமரசங்களில் சாதனை படைத்து ஆளும் வர்க்கம், பத்திரிகை நிர்வாகம் கோரும் ’திறமையினை’ அடைவார்.
வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் அடிப்படை வர்க்கத்தினராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் தனது வர்க்கப் பார்வையை இழந்து ஆளும் வர்க்க பார்வைக்கு தயாராகி விடுவார். மாறாக வசதியான நடுத்தர வர்க்கத்தில் இருந்து மாற்று ஊடகங்களில் சேரும் ஒருவர் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பார்வையை மெல்ல மெல்ல பெறுவார்.
கார்ப்பரேட் ஊடகங்களுக்கு பெரும் வலைப்பின்னல் இருப்பதால் நேரடி செய்திகள், நேரடி நிகழ்வுகள், நேரடி கள அறிக்கைகள் அனைத்தையும் ஒரு ஊடகவியலாளர் செய்ய முடியும். மாற்று ஊடகங்களுக்கு அந்த வலைப்பின்னல் இல்லை என்பதால் ஒரு பத்திரிகையாளர் பெரும் ஊடக செய்திகளைப் படித்து தனது கண்ணோட்டத்தில்  மறு ஆக்கம் செய்ய வேண்டியிருக்கும்.
வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் பத்திரிகைத் துறையின் அனுபவங்கள், நேர்த்தியினைக் கற்றுக் கொள்வதற்கு துறை சார்ந்த சூழலில் நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாற்று ஊடகங்களில் அவை ஒருவரது தனிப்பட்ட முயற்சியாக மட்டுமே இருக்கிறது, சூழலில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக