புதன், 12 டிசம்பர், 2018

ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதி.. கொங்கு மண்டலம்…

டிஜிட்டல் திண்ணை: கொங்கு மண்டலம்… ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதி!மின்னம்பலம் : “செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்தியை பிரேக் செய்தது மின்னம்பலம்தான்...
“மின்னம்பலத்தின் இன்றைய 1 மணிப் பதிப்பில், ஸ்பெஷல் டிஜிட்டல் திண்ணையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி நாளை காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணையப் போகிறார் என்பதைச் சொல்லியிருந்தேன். அதில் ஒரு சின்ன திருத்தம். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று மும்பை கிளம்பிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். நாளை மதியம் 12.30 மணிக்குத்தான் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து நாளை மதியம் நேரடியாக அண்ணா அறிவாலயம்தான் வருகிறார் ஸ்டாலின். அதனால் மதியம் ஒரு மணி அளவில் இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என செந்தில் பாலாஜிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

திருச்சியிலிருந்து கேன்.என்.நேருவும் நாளை காலை விமானத்தில்தான் சென்னை வந்து சேருகிறார்.
கொங்கு மண்டலத்தில் திமுக சற்று பலவீனமாகவே இருக்கிறது. அதைச் சரிசெய்து திமுகவின் வலிமையைக் கூட்டுகிறேன் என்றும், அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் செந்தில் பாலாஜி வாக்களித்தாராம். அதுதான் ஸ்டாலினை இந்த இணைப்புக்கு ஒப்புக்கொள்ள வைத்தது என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி திமுகவுக்குப் போவது உறுதியானதும், கரூர் மாவட்டத்தில் அமமுகவில் இருந்த தொண்டர்கள் பலரும், நிர்வாகிகள் சிலரும் இன்று பிற்பகலில் அவசர அவசரமாக அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். ‘செந்தில் பாலாஜியை நம்பித்தான் நாங்க தினகரன் கட்சிக்குப் போனோம். அவரு திடீர்னு திமுகவுக்கு போவாருன்னு நாங்க எதிர்பார்க்கலை. திமுகவை எதிர்த்தே நாங்க வளர்ந்துட்டோம். அவருக்கு வேணும்னா அங்கே செட் ஆகிடும். எங்களுக்கு திமுக ஒத்துவராது. அதுக்காக தினகரன் கட்சியிலும் தொடர முடியாது. எங்களுக்கு நல்லது கெட்டது எதுவா இருந்தாலும் செந்தில் பாலாஜிதான் பார்த்தாரு. அவரு போன பிறகு அந்தக் கட்சியில் யாரோடு பேசுறதுன்னுகூட எங்களுக்குத் தெரியல. அதனால அம்மா கட்சிக்கே போய்டலாம்னுதான் அதிமுகவுக்கு போயிட்டோம்.’ என்று சொல்லியிருக்கிறார்கள் அவசரமாக அணி மாறியவர்கள்.
தனக்கு நெருக்கமாக இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு மதியத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தொடர்ந்து போன் போய்க்கொண்டே இருக்கிறதாம். ‘என்னை நம்பி வாங்க... உங்களுக்கு என்ன செய்யணுமோ நான் செய்யுறேன்..’ என்று கெஞ்சாத குறையாக நிர்வாகிகளை அழைக்க ஆரம்பித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு அடுத்த மெசேஜும் வந்தது. “செந்தில் பாலாஜியின் இந்த முடிவு தினகரனை ரொம்பவே உலுக்கிவிட்டது. செந்தில் பாலாஜியால் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி, அவருடைய உதவியால் வென்ற சில முன்னாள் எம்.எல்.ஏக்களும் நாளையோ இன்னும் சில நாட்களிலோ திமுகவில் சேரவிருக்கிறார்கள் என்னும் செய்தி தினகரனின் காதுக்குப் போயிருக்கிறது. இது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்த வாரத்தில் கொடுத்த அப்பாயின்மெண்ட் எல்லாவற்றையும் கேன்சல் செய்துவிட்டாராம் தினகரன்.
‘நான் அவரை ரொம்பவே நம்பினேன். இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கலை. அவரோட சேர்ந்து பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் போயிடக் கூடாது. அதுல எல்லோரும் கவனமாக இருங்க. மத்த எம்.எல்.ஏ.க்களிடமும் செந்தில் பாலாஜி நிச்சயமாகப் பேசுவாரு. ஆனால், இனி ஒருத்தரும் இங்கேயிருந்து போனால் அது நமக்குப் பெரிய பலவீனமாகிடும். அதனால மிச்சம் இருக்கும் 17 பேருகிட்டயும் தினம் ஒரு தடவையாவது நான் பேசணும். அவங்க போன் பண்ணினாங்கன்னா உடனே எனக்குக் கொடுங்க... நான் பிஸி என்றெல்லாம் சொல்லி போனை வெச்சிடாதீங்க...’ என்று தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் தினகரன்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக