செவ்வாய், 4 டிசம்பர், 2018

உபி போலீஸ் ஆய்வாளர் சுட்டு கொலை ..பாஜக கொலை வெறியாட்டம்

மாலைமலர் : உத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.


நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பத்வால் கிராமத்தில் 8 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு லாரியை ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்தியது.

லாரியில் இருந்த கால்நடைகளை கீழே இறக்கியது. பின்னர், அந்த லாரிக்கு அக்கும்பல் தீவைத்தது. லாரி டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், அந்த கும்பல், பசு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே, பக்கத்து மாவட்டமான சம்பாவில், பசு கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 16 கால்நடைகளை மீட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாகனத்தில் இருந்து 3 கால்நடைகளை போலீசார் மீட்டனர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக