புதன், 19 டிசம்பர், 2018

சசிகலா : மோடி எதற்காக நம்மை வீழ்த்தினார் என்ற "உள்கணக்கு" எனக்கு மட்டும்தான் தெரியும் ! வேறு என்ன பணம் கொடுக்கல் வாங்கல்தான்?


விகடன் : வரப் போகும் தேர்தலில் என்ன வியூகம் வேண்டுமானாலும் மோடி எடுத்துக்கொள்ளட்டும். நாம் ஒற்றுமையாக இருந்து செயலாற்றாமல் போய்விட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம் ‘ எனப் பேசியிருக்கிறார் சசிகலா.
` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா?!'  - தினகரனிடம் கொதித்த சசிகலா
`சசிகலாவுடனான நேற்றைய சந்திப்பு தினகரனுக்கு திருப்திகரமாக அமையவில்லை’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். ` அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையோடு செயல்படுவது குறித்தும் தேர்தல் நிலைப்பாடு பற்றியும் சசிகலா கூறிய கருத்தில் தினகரன் உடன்படவில்லை’ என்கின்றனர் சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று மதியம் தினகரனோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கத்துரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாள் விசாரணை நடத்திய பிறகு நடக்கும் சந்திப்பாகவும் இது இருந்தது. தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சென்றது; நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளன.


` சிறை சந்திப்பில் என்ன பேசப்பட்டது?’ என அ.ம.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “ வழக்கத்துக்கு மாறான உற்சாகத்தில் சசிகலா இல்லை. அ.ம.மு.க-வின் செயல்பாடுகள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை உள்ளிட்ட விஷயங்களால் மிகுந்த வேதனையில் அவர் இருக்கிறார். சிறைக்குள் தினகரனிடம் அவர் கடுமை காட்டினாலும், வெளியில் அப்படி நடக்காதது போலக் காட்டிக் கொள்வதில் வல்லவராக இருக்கிறார் தினகரன். அதேநேரம், அ.ம.மு.க-வில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் இளவரசி குடும்பம் மூலமாக உடனுக்குடன் அறிந்து கொள்கிறார் சசிகலா. ` குடும்பத்துக்கு மூத்தவர்கள் எல்லாம் விலகித் தனித்தனியாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், ஆபத்துதான் வந்து சேரும் எனப் பலமுறை கூறிவிட்டேன்’ எனப் பேசிய சசிகலா, ` அக்கா சமாதியில் அடித்து சத்தியம் செய்ததே, மோடி அரசை அகற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு எதிராக அந்தக் கட்சியின் ஆதரவாளராக இருக்கும் சிலர் மட்டும் செயல்படவில்லை. அதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருந்தது. இந்தச் சதி எனக்கு எதிராக மட்டும் அல்ல, அக்காவுக்கு எதிராகவும் உருவான சதிதான்.


அவர்களை வீழ்த்துவதற்காகத்தான் கல்லறையில் அடித்து சபதம் செய்தேன். என்னையும் என் கணவரையும் ஏன் வீழ்த்தினார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அக்கா மருத்துவமனையில் இருந்தபோது ராகுல்காந்தியை அழைத்து வந்தோம். அவர்களோடு நாம் கூட்டணி வைப்போம் என நினைத்தேன். ஆனால் ஸ்டாலின், ராகுலோடு இணைந்துகொண்டார். இப்போதுள்ள சூழலில் மோடி எதிர்ப்பை பலப்படுத்துவது லாபமா… பலவீனப்படுத்துவது லாபமா எனப் பாருங்கள். சிறையில் நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இங்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. அதுக்குக் காரணம் காங்கிரஸ்தான். மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துவிட்டால் நமக்குத்தான் ஆபத்து.


நான் ஒரு தீர்க்கமானவள். மோடி எதற்காக நம்மை வீழ்த்தினார் என்ற உள்கணக்கு எனக்கு மட்டும்தான் தெரியும். அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரப் போகும் தேர்தலில் என்ன வியூகம் வேண்டுமானாலும் மோடி வகுத்துக்கொள்ளட்டும். நாம் ஒற்றுமையாக இருந்து செயலாற்றாமல் போய்விட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம் ‘ எனப் பேசியிருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்குத் தினகரன் பதில் தெரிவிக்கவில்லை. குடும்பத்தில் உள்ளவர்களை இணைத்துக்கொண்டு செயல்படுவதற்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தினகரன் தெரிவித்த கருத்தில் சசிகலாவுக்கு உடன்பாடில்லை” என்றவர்,
சசிகலா
“ சொல்லப் போனால் இந்தச் சந்திப்பின் மூலம் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ` நான் ஒரு சி.எம் வேட்பாளர். அ.ம.மு.க-வே வலுவாக இருக்கிறது. அந்தக் கட்சியின் மூலமாகவே தேர்தலை எதிர்கொள்ளலாம்’ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார் தினகரன். தி.மு.க, காங்கிரஸ் என்ற சிந்தனையே அவருக்கு இல்லை. அ.ம.மு.க-வில் இருந்து பொறுப்பாளர்கள் விலகிச் செல்வதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை. ` பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படாதவர்கள் இங்கு இருக்கலாம்’ என்கிறார். `மீண்டும் அ.தி.மு.க-வில் சேருவோம்; பதவி கிடைக்கும்’ என்ற எண்ணத்தில்தான் பலரும் சசிகலா பக்கம் வந்தனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமியோடு சேரும் முடிவில் தினகரன் இல்லை. அந்த நோக்கத்தில் இருந்து தினகரன் விலகிச் செல்கிறார் என்பதுதான் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின் ஆதங்கமாக இருந்தது. அ.தி.மு.க-வோடு இணைவதில் சசிகலாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தேர்தல் நெருங்குவதற்குள் சசிகலாவுக்கு எதிராக தினகரன் வியூகம் வகுத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்றார் விரிவாக.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக