செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஜொமோடோ ஊழியர் வீடியோ.. எச்சில் உணவை விநியோகம் செய்யும் அவலம்


மின்னம்பலம் : பிரிக்க முடியாத அளவுக்கு உறுதியான டேப்களைக் கொண்டு உணவுப்பொருட்களை பார்சல் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது ஜொமோடோ நிறுவனம். தற்போது ட்விட்டரில் வைரலாக பரவும் ஒரு வீடியோவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்விட்டர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பகிரப்பட்டது. அதில், வாடிக்கையாளர் விரும்பும் உணவகங்களில் இருந்து உணவை எடுத்துச் செல்லும் ஊழியர் ஒருவர், நடுவழியில் அந்த பார்சலை பிரித்து உண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே அந்த உணவில் இருந்து சிறிதளவு எடுத்துச் சாப்பிடும் அந்த ஊழியர், அதன்பின் அதனை மீண்டும் பேக் செய்து அதே இடத்தில் வைக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இதனால், ஜொமோடோ ஊழியர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவைச் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் சேர்த்து வருகிறார்கள் என்ற கருத்து பரவியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஜொமோடோ ஊழியருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பலரும் பதிவுகள் பகிர்ந்தனர். ஜொமோடோவில் ஆர்டர் செய்ய நினைத்த சிலர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் தவிர்த்துவிட்டதாகக் கூறியிருந்தனர்.

நேற்று (டிசம்பர் 10) இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தது ஜொமோடோ நிறுவனம். இது அரிதாக நடக்கும் ஒரு தவறு என்று விளக்கமளித்தது. “இது மாதிரியான புகார்களை மிகவும் கூர்ந்து கவனித்து விசாரணை செய்து வருகிறோம். எங்களது விசாரணையில், மதுரையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வந்தது. அங்குள்ள கிளையில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். சம்பந்தப்பட்ட பணியாளரது நடத்தையை எடையிடுவதில் நேர்ந்த தவறு இது என்று தெரிந்து, அவரைப் பணியில் இருந்து நீக்கிவிட்டோம்” என்று கூறியது.
“பல்வேறு தொலைதொடர்பு சாதனங்கள் வழியாக, ஜொமோடோ உயர் தரத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை மீண்டும் உறுதியாகக் கூறுகிறோம். இந்த தவறு மிக அரிதானது, வழக்கத்தில் இல்லாதது; இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், சிலர் தங்களது ஆர்டர்களை திரும்பப் பெற்றனர். இந்த சம்பவம் மூலமாக, ரெஸ்டாரண்ட்களில் இருந்து எடுத்துச் செல்லும் உணவை வழியில் பிரிக்கும் வாய்ப்பிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, இனிமேல் எளிதில் உடைக்க முடியாத டேப்களைக் கொண்டு உணவு பேக் செய்யப்படும். அது மட்டுமல்லாமல், இது மாதிரியான நடத்தைகளைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தனது இணையதளத்தில் தெரிவித்தது ஜொமோடோ நிறுவனம்.
தங்களோடு சேர்ந்து பணியாற்றும் 1.5 லட்சம் பங்குதாரர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், இம்மாதிரியான ஒழுங்கின்மையை வெளிப்படுத்திய வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது ஜொமோடோ நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக