வெள்ளி, 14 டிசம்பர், 2018

சபரிமலை ஆர்.எஸ்.எஸ்காரர் தீக்குளித்து சாவு - கேரளாவில் முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு

சபரிமலை விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து சாவு - கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்புதினத்தந்தி :சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்தார். இதனால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரம், சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் உடல்நிலை மோசமானது. அவர் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து கடந்த 4 நாட்களாக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் சி.கே.பத்மநாபன் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக உண்ணாவிரத பந்தலில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று அதிகாலை 1 மணி அளவில் திருவனந்தபுரம் முட்டடை பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று கோ‌ஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜனதா தொண்டர்களும், போலீசாரும் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது. ஆனாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பா.ஜனதா மாநில செயலாளர் ரமேஷ் என்பவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எனவேதான் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் உயிரை இழந்துள்ளார். எனவே இந்த சம்பவத்தை கண்டித்து கேரளா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். இந்த போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக