வெள்ளி, 7 டிசம்பர், 2018

திராவிடத்தில் இரை எடுத்து , இந்துத்துவாவிற்கு முட்டை போடுகிற கள்ளக் கோழிகள்.

சாந்தி நாராயணன் : மஹாபாரதப் புனைவில் சல்லியன் என்றோர் பாத்திரம்
உண்டு.
பாண்டவர்களின் உறவினன். நகுலன் சகாதேவனுக்கு மாமன் முறையானவன்.
போர்க்காலத்தில் பாண்டவர்கள் பக்கம் இயல்பாகப் பொருந்தி வருகிறவன். பாண்டவர்களின் கூட சேர்ந்திருக்கிற ரத்தம்.
போர்காலத்து ஆயத்தங்களின் போது ஏற்பட்ட 'கம்ம்யூனிகேசன் கேப்'பினால் துரியோதனன். பக்கம் சேர்ந்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டவன்.
போர் தொடர்ந்த நேரம், சல்லியன் தனது நண்பனாய் வருகிறான் என்று எண்ணி பெரும் வரவேற்பை துரியோதனன் கொடுக்க,
அதை ஏற்றுக்கொண்டு வேறு வழியின்றி கவுரவர்கள் பக்கம் நின்று கொண்டவன்.
சல்லியன் நின்றது தான் கவுரவர்கள் பக்கம். பின்னாளில் கிருஷ்ணன் கைப்பாவையாக சரியாக வேலை செய்தான்.
கெடுவாய்ப்பாக கர்ணனுக்கு தேரோட்டுகிற வேலை வந்தது சல்லியனுக்கு. சூத்திரன் கர்ணனுக்கு அரச பரம்பரை நான் தேரோட்டுவதா என்ற புழுக்கம் வேறு.
கூட இருந்தே குழி பறித்தான்,
களத்திலே தன்பக்கம் இருக்கிற கர்ணனை இகழ்ந்தும், அவன் எதிரியான அர்ஜுனனை புகழ்ந்தும் ஓயாமல் இரண்டகம் செய்தான்.
மிகச் சரியான நேரத்தில், சல்லியன் களத்திலே கர்ணனனை தனியே விட்டு பாதியிலே ஓடிப்போனான்.
கர்ணனுக்கு மனத்தளர்வை ஏற்படுத்துவது அவன் இலக்கு. அது கிருஷ்னன் சொல்லித்தந்த சூது. கர்ணன் களத்திலே சாய்ந்ததில் சல்லியன் பங்கு பெரும்பங்கு. இது பாரதம் சொன்னது.
அந்தப் புனைவைப் போலே இன்றைக்கும் சல்லியர்கள் உண்டு.
திராவிடர்கள் பக்கத்தில் இருப்பார்கள் சிலர் .
திராவிடர்கள் தங்களுக்கு தருகிற வரவேற்பில் திராவிடத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள்.
முக்கிய நேரங்களில் , அடுத்த கட்டம் நகர்கிற தருணங்களில் தங்கள் சூது வேலைகளை செய்வார்கள்.

ஆகா, என்றெழுந்தது பார் ரஷ்யப் புரட்சி என்று முதல் வரியில் முற்போக்கு வேடமும். அது அன்னை பராசக்தி கடைக்கண் பார்வை தான்
கம்யூனிட்டுகள் புடிங்கியது எதுவும் இல்லை என்று குறுக்குசால் ஒட்டிய பாரதிக்கும் முன்னானது அந்த சல்லிய வரலாறு.
காலமெல்லாம் திராவிடத்தின் பலன்களை உண்டுகொழுத்து, வனவாசம் எழுதி அண்ணா காமராஜர், கலைஞர் வரை பொய்ப்புகார் எழுதி,
அர்த்தமில்லா மதத்திற்கு அர்த்தம் சொல்ல முயன்ற கண்ணதாசன் வந்ததும்,
தமிழ் தேசியம் பேசிய வாய் , இந்தியை தாரில் அழித்த திராவிடத்திற்கு எதிராக மண்ணெண்ணெய் தூக்கித்திரிந்த மா. பொ சி நின்றதும்,
சல்லியர்கள் வரலாற்றின் ஒரு பகுதி தான்.
காலமெல்லாம் கூட இருந்து கம்யூனிஸ்டுகளை வீழ்த்திய பூணூலிஸ்டுகளும்
போலியாய் தலித்தியம் பேசி, திராவிடத்தை எதிரியாக கட்ட முற்படுகிறவர்களும் கூட சல்லிய வகையினர் தான்.
இன்னும் ஏராளம் சல்லியர்கள் உண்டு. நேரப்போதாமை கொண்டு பட்டியல் இல்லாமல் வெறும் அடையாளங்களை மட்டும் சுட்டியிருக்கிறேன்.
இவர்களோடு, தேர்தல் நெருங்க நெருங்க சில முகநூல் பிரபலங்களும் கூட தங்கள் சல்லிய அவதாரங்களை தாங்களே காட்டுவார்கள்.
திராவிடத்தின் எந்த எதிரியையும் தலைமேல் வைத்துப் புகழ்வார்கள்.
திராவிட இயக்கங்களை இல்லாத காரணம் சொல்லி இட்டுக்கட்டி இகழ்வார்கள்.
காரணம் கேட்டால் நான் திராவிடத்தை மேம்படுத்தவே, குறைகளை சுட்டிக்காட்டி சரிசெய்யவே சொல்கிறேன் என்று விளக்க வியாக்கியானங்கள். கொடுப்பார்கள்.
எங்கு போனாலும் தங்கள் இலக்கு மாறாதவர்கள்.
ஆகா, ரஜினிக்கு கூட்டம் பாருங்கள்.
ஐயோ திமுகவில் இளைஞர்கள் இல்லை.
ஆகா, தினகரன் திராவிட செல்வராகிறார்.
ஐயோ திராவிடர் கழகம் செயல்வேகம் போதவில்லை.
அதோ கமல் நுணுக்க அரசியல் செய்கிறார். திமுக வீரியம் போதாது.
என்றெல்லாம் இல்லாததை இட்டுக்கட்டி, இருக்கிறதை மட்டுப்படுத்தி
வாய்பந்தல் போடுவார்கள்.
எங்கே ஸ்டாலின் செயல்களில் சறுக்கல் கிடைக்கும் என்று கண்கொத்திப் பாம்பாவர்கள்.
ஏதோ ஒரு ஊடகம் ஸ்டாலின் சொன்னதை திரிக்கும்.
திரித்ததை உள்ளம் உவக்க ஊர் முழுதும் பரப்பி சுகமடைவார்கள். கேட்டால், ஸ்டாலினிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் என்றோர் வஞ்சகம் பேசுவார்கள்.
திராவிடத்தில் இரை எடுத்து , இந்துத்துவாவிற்கு முட்டை போடுகிற கள்ளக் கோழிகள்.
எழுத்தை வைத்து கல்லாக் கட்டும் கோழிகள்.
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கோழிகள் தொகைக்கு தோகை விரிக்கும். தங்களை மயிலென்று தாங்களே அடையாளம் காட்டும்.
வரலாறு நெடுகிலும் இவர்கள் பலர் இருந்ததன் தடம் இருக்கிறது.
இவர்களை சரியாக அடையாளம் கண்டு தள்ளியும் வைக்காமல் , அள்ளிக்கொஞ்சவும் செய்யாமல், கண்ணாடியைப் போல் கையாள்கிற நுணுக்கத்தை திராவிடர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
(சூது வேலைகளை அடையாளம் காட்ட மிகப் பொருத்தம் என்பதால் மகாபாரதத்தை எடுத்துச் சொல்லவேண்டியதாகிவிட்டது. அதில் எனக்கும் வருத்தம் தான்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக