ஞாயிறு, 9 டிசம்பர், 2018

இந்துத்வ தேர்தல் சூழ்ச்சி ஆரம்பித்துவிட்டது.. தலித் கட்சிகள் தனித்து போட்டி தற்கொலை முயற்சியே!

Adv Manoj Liyonzon : தலித் தேர்தல் அரசியல் அமைப்புகள் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கூற்று என்னைப் பொறுத்தவரையில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். மேலும் தலித் அமைப்புகள் தனிமைப்பட்டு, இடதுசாரி வாக்குகள் சிதறி, பாசிச இந்துத்வ அமைப்புகள் வெற்றிபெறவே வழி வகுக்கும்.
இது எப்படி என்பதை கீழே பார்ப்போம்.
அட்டவணை சாதி மற்றும் அட்டவணை பழங்குடி, கிறிஸ்தவர்களாக மாறிய அட்டவணை சாதிகள் என்று தலித் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்தம் சேர்த்து தமிழகத்தில் தற்போது 1 கோடியே 50 லட்சம், அதாவது 25% தலித் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இதில் பொது நீரோட்டத்தில் பயணிக்கும் விசிக உட்பட இதர தலித் அமைப்புகள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக பெற்ற வாக்குகள் வெறும் 1.51% மட்டும் தான். மீதமுள்ள பெரும்பாலான வாக்குகளும் திராவிட கட்சிகளுக்கு தான் கிடைக்கிறது. சொற்ப எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் பெறுகிறார்கள். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் பலம் வாய்ந்தவையாக இருப்பதால், இங்கே ஒரு காலமும் தலித் அமைப்புகள் தனித்து நின்று மொத்தமுள்ள 25% வாக்குகளையும் பெற்றுவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
எங்கே சற்று மனசாட்சிப்படி நேர்மையோடு பதில் சொல்லுங்கள், இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் உட்சபட்சமாக விசிக 1.51% வாக்குகளைத் தான் பெற்றிருக்கிறது. தனித்து போட்டியிட்டால் 21% வாக்குவங்கியை விசிகவும் இதர தலித் அமைப்புகளும் பெற்றுவிடுமா!? தலித்துகள் ஒட்டுமொத்த தலித் அமைப்புகளையும் ஆதரித்து ஒருசேர வாக்களித்துவிடுவார்களா.!? அல்லது ஒரு 10% வாக்குகளை தான் பெற முடியுமா.!?

தலித் அமைப்புகள் தனியாக நின்றாலும் இதுநாள்வரை பெற்றுவந்த 1.51% வாக்கு வீதத்தை தான்டி, ஒரேயடியாக ஒரு 5% வாக்குகளை பெறுவதே கடினம் தான். ஒருவேளை அப்படியே 5% வாக்குகளை பெற்றாலும், அதைவைத்து ஒரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரை கூட பெற முடியாது. மாறாக அது வாக்குகளை சிதறடித்து பாசிச இந்துத்வ பாஜக கூட்டணி வெற்றி பெறவே வழிவகுக்கும்
உதாரணம்:- பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளராக நின்ற பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஓரணியாக திரளாமல், தனித்தனியே எதிர்த்து நின்றதால், வாக்குகள் சிதறி, அது பாசிச இந்துத்வ பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனையே எளிதாக வெற்றி பெறச் செய்தது.
அதைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் சமாஜ்வாடி-காங்கிரஸ் பகுஜன் ஒவைசியின் MIMமும் தனித்தனியே போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, பாசிச இந்துத்வ பாஜக வேட்பாளர் யோகி ஆதித்யநாத் ஆட்சியமைக்க வழிவகுத்தது.
பாசிச இந்துத்வ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதனை பாஜக ஆட்சியில் நடக்கும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களை வைத்தே புரிந்துகொள்ள முடியும்.
அதைப் போலவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில், தலித்துகளை தூண்டிவிட்டு, தலித் அமைப்புகளை தனியாக போட்டியிட வைத்து, வாக்குகளை சிதறடித்து, அதன்மூலம் சொற்ப எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெறவே பாசிச இந்துத்வ பாஜக வேலை செய்கிறது. அதன் பிரதிபலிப்பு தான் தலித் அமைப்புகள் தனியாக போட்டியிட வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகும்.
மேலும் இந்த குழப்பத்தை ஆதரிப்பது யார் என்று பாருங்கள், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி மற்றும் செ.கு.தமிழரசன். ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் பட்டியல் அடையாளம் அவமானம் இழிவு என்று கருதி, பட்டியல் வெளியேற்றத்தை கோருபவர்கள். பட்டியல் வெளியேற்றம் என்பது பாசிச இந்துத்வாவின் கொள்கை. செ.கு.தமிழரசன் ஜெயலலிதாவின் நிழலில் அரசியல் வளர்ச்சி பெற்றவர். இவர்கள் மூவரின் சமீபத்திய நடவடிக்கைகளை ஆராய்ந்தாலே இவர்கள் ஆதரிக்கும் இந்த சிந்தனை தலித்துகளுக்கு எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஊகித்துவிடலாம்.
திராவிட கட்சிகள் மீது நமக்கு பெரும் அதிருப்தி உண்டு. கடுமையான விமர்சனம் உண்டு. ஆனாலும் தற்போது இந்தியாவை பாசிசம் ஆட்கொண்டிருக்கும் இந்த வேளையில், தலித்துகள் பெரும்பான்மையாக திராவிட கட்சிகளையே சார்ந்து, நம்பி வாக்களிக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ்-விசிக-கம்யூனிஸ்ட்-இஸ்லாமிய-கிறிஸ்தவ கூட்டணி அமைத்து வெற்றி பெறுவது தான் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது. தலித் வாக்குகள் பெரும்பான்மையாக திமுக அதிமுகவிற்கே விழுந்தாலும், தற்போதைய பாஜக நிழல் அதிமுகவை கணக்கில் கொள்ளாமல், திமுக-காங்கிரஸ்-விசிக-கம்யூனிஸ்ட்-இஸ்லாமிய-கிறிஸ்தவ கூட்டணியில் இடம் பெற்று, தேவையான எண்ணிக்கையில் சீட்டுகள் வாங்கி வெற்றி பெற்று அவ்வழியே அரசியல் அதிகாரம் அடைவதே சாலச் சிறந்த வழி.
தமிழகத்தை பொறுத்தவரை தலித் அமைப்புகள் தலித் வாக்குவங்கியை மட்டும் நம்பி தனியாக போட்டியிடும் சூழல் தற்போது இல்லை, அது தற்கொலை முயற்சியே.
தற்போது Inclusive தான் தேவையே தவிர Separation தீர்வாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக