வெள்ளி, 28 டிசம்பர், 2018

திமுகவைப் பிடிக்கவில்லை: முதல்வரை சந்தித்த சரத்

திமுகவைப் பிடிக்கவில்லை: முதல்வரை சந்தித்த சரத்மின்னம்பலம் : முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், திமுகவை தனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று (டிசம்பர் 28) நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது அக்கட்சியின் துணைச் செயலாளர் சேவியரும் உடனிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “கஜா புயல் விவகாரம், பட்டாசுத் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தினேன். பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் எனவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். கஜா புயலால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

“உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் தனித்துப் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து முடிவெடுக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்பது என்று முடிவெடுத்துள்ளோம். உடனே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவேன் என்று நினைத்துவிடாதீர்கள், அதுகுறித்து நான் ஏதுவும் சிந்திக்கவில்லை” என்று தெரிவித்த சரத்குமார்,
“திமுகவை எனக்குப் பிடிக்கவில்லை. பிரதமரை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் விமர்சிக்கிறார். கலைஞரை வந்து பார்த்தபோது மட்டும் மோடி அன்பானவராகத் தெரிந்தார். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நாகரீக அரசியலை விரும்புபவன் நான், நாகரீகத்துக்கு புறம்பாக இருப்பதால், நாளை என்னைக் கூட திட்டலாம் என்பதால் ஒதுங்கியிருப்பதே நல்லது” என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக