வியாழன், 6 டிசம்பர், 2018

கர்நாடகம் தள்ளி வைத்த தரமற்ற சைக்கிளை தமிழக அரசு வழங்கி மோசடி ,,

இலவச சைக்கிள்களில் கர்நாடக அரசின் லோகோ!மின்னம்பலம் : ‘தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்படுகிற சைக்கிள்களில் எப்படி கர்நாடக அரசின் லோகோ வந்தது? இந்த விஷயத்தில்கூட கவனமாக இருக்க மாட்டீர்களா?’ என்று நேற்று (டிசம்பர் 5) நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில், பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைச் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் வழங்கிய சைக்கிளில் கர்நாடக அரசின் முத்திரையுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் பாலிமர் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. கர்நாடக அரசு முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள அந்த சைக்கிள்கள் தரமற்றதாகவும் இருந்தன. எனவே, கர்நாடக அரசு முத்திரையுடன் வழங்கப்படுகிற சைக்கிள்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள சைக்கிள்களை திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மேலும் கூடுதல் ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த அரசு கூடுதல் வழக்கறிஞர் நர்மதா சம்பத்திடம் எப்படி லோகோ இடம்பெற்றது எனக் கேள்வி எழுப்பினர். சைக்கிள்களில் தமிழ்நாடு லோகோதான் உள்ளது. 25 முதல் 50 சைக்கிள்களில் மட்டும் சைக்கிள் முன் கூடையில் கர்நாடகா லோகோ இருந்ததாகவும் இது தயாரிப்பாளரின் தவறு என்று தெரிவித்தார்.
இதையடுத்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக