புதன், 5 டிசம்பர், 2018

சென்னை பெண்கள் விடுதியில் குளியலறையில் ரகசிய கேமரா; உரிமையாளர் கைது

ரகசிய கேமரா: கண்டுபிடித்த இளம்பெண்கள்!tamilthehindu :சென்னை ஆதம்பாக்கத்தில் தனியார் பெண்கள் விடுதியில் குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி கண்காணித்த உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஹைடெக் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள விடுதி ஆடம்பரமாக  இருந்ததால் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் விரும்பி அதிக அளவில் தங்கியுள்ளனர்.திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் இந்த விடுதியை நடத்தி வருகிறார். தாம்பரத்தில் வசித்து வரும் சஞ்சீவ் பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றத்துடன் உள்ளவர். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் சரளமாகப் பேசுவார்.

ஆங்கிலமும் அத்துப்படி. இதனால் அவரது விடுதியில் தங்குவதற்கு ஒரு போட்டியே இருந்தது. பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலேயே இந்த விடுதி செயல்பட்டதால் தங்கியிருக்கும் பெண்களுக்கு போக்குவரத்துக்கு எந்தவித சிரமமும் இல்லை. இதனால் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர்.
சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்தபோது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் சில வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் (HIDDEN CAMERA DETECTOR)செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து குளியலறை, தங்கும் அறைகளில் சோதித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் கிடைத்ன. குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்டி கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
 உடனடியாக அதை எடுத்து தூக்கிப்போட்டு உடைத்துள்ளனர். போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த மிகச்சிறிய ரகசிய கேமராக்களைக் கைப்பற்றினர். அதில் காட்சிகள் எதுவும் இல்லை.
அவை வேறொரு இடத்தில் இருந்து இயக்கப்பட்டு அங்குதான் பதிவுகள் சேமித்து வைக்கப்படுகிறது. வேறொரு இடம் அதற்கான ட்ரைவ் எங்குள்ளது என போலீஸார் ஆய்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சீவை அழைத்த போலீஸார் விடுதிப் பெண்கள் அளித்த புகாரில் அவரைக் கைது செய்துள்ளனர்.
உரிமையாளர் சஞ்சீவ் எவ்வளவு நாட்களாக இதுபோன்ற வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் எத்தனை இடங்களில் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரகசியக் கேமரா மூலம் எடுக்கப்பட்ட பதிவுகளை என்ன செய்தார். இதற்கென்றே இருக்கும் இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளாரா? முக்கியமான ஹார்ட் டிஸ்க் எங்கே உள்ளது உள்ளிட்ட கேள்விகளை வைத்து போலீஸார் சஞ்சீவை துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கும் விடுதியில் இவ்வாறு ரகசிய கேமரா இருந்ததால் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். விடுதியைப் பூட்டுபோட்டு போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
சஞ்சீவிடமிருந்து 16 செல்போன்கள், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரின் செல்போனை போலீஸார்  ஆய்வு செய்துவருகின்றனர்.
விடுதியில் குளியலறை, படுக்கையறையில்தான் ரகசிய கேமராக்கள் இருந்ததாக போலீஸாரிடம் அங்கு தங்கியிருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கேமராக்களை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பொருத்தியுள்ளனர். இதற்கு சஞ்சீவுக்கு சிலர் உதவியிருக்கலாம், இது தனிப்பட்ட நபர் ஒருவர் செய்கிற காரியமல்ல, இதன் பின்னர் ஒரு நெட்வொர்க் இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ரகசிய கேமராக்கள் எச்டி தொழில் நுட்பத்தில் அதிக எம்பி (MB) உள்ள கேமராக்கள். விலை உயர்ந்த அந்தக் கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் மிகத் தெளிவாக தெரியும் என்கின்றனர் போலீஸார். இந்த வழக்கு விரைவில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவுக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக