சனி, 29 டிசம்பர், 2018

மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட மாட்டேன்: சீமான்

மின்னம்பலம் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட
டெல்டா மக்களுக்கு, புயலடித்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னமும் மறுவாழ்வுக்கு உரிய உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் செய்யப்படவில்லை என்பதைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் இன்று ஆர்பாட்டம் நடந்தது.
தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் விவசாய சங்கப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இன்று டிசம்பர் 29 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் முழக்கப் போராட்டமாக இது அமைந்தது.
மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட மாட்டேன்: சீமான்நாகை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் அவுரித் திடலில் நடந்த இந்த ஆர்பாட்டம் நாகப்பட்டினம் வாசிகளையும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான டெல்டா வாசிகளையும் ஈர்த்து உட்கார வைத்தது. காரணம் அவர்களின் வலி.
இந்த ஆர்பாட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன், “மாநில அரசு சொன்ன 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி வரவில்லை என்று இன்று வரை மக்கள் சாலை மறியல் செய்யும் அவலத்தில் இருக்கிறார்கள். அந்த பெட்டிகள் வந்த பகுதிகளில் கூட அதில் பொருட்கள் குறைகின்றன என்கிறார்கள்.
ஏன் தமிழக அரசு நினைத்தால் நான்கே நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை அதிகாரிகள் மூலம் கொடுக்க முடியாதா? அதற்கான கட்டமைப்பு இல்லையா?
மாநில அரசு இப்படி என்றால், மத்திய அரசு தமிழ்நாட்டை மட்டும் இனப் பாகுபாட்டோடு நடத்துகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டார். ஆனால் சில நூறு கோடிகள்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வருத்தமோ கோபமோ கொண்டதாகத் தெரியவில்லை. இந்த இரு அரசுகளையும் கண்டித்துதான் மக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“பட்டுக்கோட்டையில் ஒரு தகப்பன் தன் வீட்டு மேல்கூரையை மாற்ற முடியாமல், அதற்கு பணம் இல்லாமல் தன் மகனை பத்தாயிரம்ரூபாய்க்கு அடமானம் வைத்திருக்கிறார். பெற்ற மகனை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது அந்தத் தந்தைக்கு அவமானம் அல்ல. தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் பிரதமருக்கும்தான் அவமானம்.
இந்தியாவில் அதிக வரி ஈட்டிக் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம். என் காசை எடுத்து எனக்குக் கொடுப்பதற்கு உங்களால் முடியவில்லை. ஆனால் இந்தோனேசியாவுக்கும், மாலத்தீவுக்கும் என் வரிப்பணத்தை எடுத்துக் கொடுத்து இந்தியா உதவி செய்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால் நாங்கள் உன் நாட்டு மக்கள் இல்லையா?” என்ற சீமானிடம், “ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி போன்ற எதிர்ப்பு காட்டுவீர்களா?” என்று கேட்டனர்.
“என் வரி வேண்டும், என் வாக்கு வேண்டும், ஆனால் என் வாழ்க்கை உனக்கு பிடிக்காது. தமிழகத்துக்கு வாக்கு கேட்க வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டமாட்டேன். ஏற்கனவே இதுபோல செய்து வழக்கு வாங்கிக் கொண்டு அலையத்தான் வேண்டியிருக்கிறது. அதை விட கறுப்புக் கொடிக்கென்று ஒரு பெருமை இருக்கிறது. அதை இவருக்கு எதிராகக் காட்டி அதன் பெருமையை சிதைக்க விரும்பவில்லை. மோடிக்கு நாங்கள் காட்டும் எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இருந்து அவருக்கு ஒரு வாக்கு கூட விழக் கூடாது. அந்த நிலையை உண்டாக்குவதே எங்கள் வேலை” என்றார் சீமான்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக