திங்கள், 10 டிசம்பர், 2018

டிஜிட்டல் ஊடகங்கள் செய்திகளை முந்தி தருகிறது ....

சிறப்புக் கட்டுரை: முன்னேறும் டிஜிட்டல் ஊடகங்கள்!மின்னம்பலம் : சுச்சி பன்சால்
“எல்லா விளம்பரதாரரும் இப்போது டிஜிட்டல் ஊடகங்களின் மீது கவனம் செலுத்துகின்றனர்” என்கிறார் அமர்தீப் சிங். இவர் ஐபிஜி மீடியா பிரேண்ட்ஸ் டிஜிட்டல் மீடியா ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். தங்களது பிராண்ட் ஊக்குவிப்புக்கும், வளர்ச்சிக்கும் டிஜிட்டல் ஊடகங்கள் ஏற்றதாக இருக்கும் என்று நிறுவனங்கள் கருதத் தொடங்கியுள்ளன. அதனால்தான் பெரும்பாலான டிஜிட்டல் ஊடகங்களில் இன்று சந்தைப்படுத்துதலுக்குத் தனியாக மேலாளர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக, டிஜிட்டல் மீது அதிக கவனம் கொண்ட நிறுவனங்களில் இப்போது தனியாக ஒரு தலைமை டிஜிட்டல் அதிகாரி உள்ளார். விளம்பரதாரர்கள் ஊடகங்களுக்கு ஒதுக்கும் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 15 விழுக்காட்டை இப்போது டிஜிட்டல் ஊடகங்களுக்கு ஒதுக்குகின்றனர்.

“வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் பிரிவு மூன்றாண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரம் செய்வது மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது அவைதான் பெரியளவில் டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றன” என்கிறார் அமர்தீப் சிங்.
விளம்பரங்கள் அளிக்கப்படுவதில் அச்சு ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் ராஜிவ் திங்கரா. இவர் வாட் கன்சல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மற்றும் சமூக சந்தைப்படுத்துதல் ஏஜென்சியாகும். “வேகமாக விற்பனையாகும் நுகர் பொருட்கள் பிரிவில் மட்டுமே, ஆங்கில ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு விளம்பரப் பணம் மாற்றம் காணவில்லை. யுனிலெவர், ஐடிசி லிமிடெட் மற்றும் கோத்ரெஜ் குழுமம் ஆகியவையும் தங்களது டிஜிட்டல் விளம்பரங்களுக்கான செலவுகளை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தியுள்ளன. இப்போதும் விளம்பரதாரர்களின் சந்தைப்படுத்துதல் திட்டங்களில் அச்சு ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது” என்கிறார் ராஜிவ் திங்க்ரா.

சில்லறை, வங்கியியல், நிதியியல் சேவைகள், காப்பீடு, வாகனம், தொலைத் தொடர்பு, ரியல் எஸ்டேட் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் டிஜிட்டலில் விளம்பரம் செய்கின்றன. “மொபைல் போன் பயன்பாடு அதிகரித்த பிறகு, குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு அதிகரித்த பிறகு வாடிக்கையாளர்களின் நுகர்வு பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்கிறர் அனிதா நாயர். இவர் ஹவாஸ் ஊடகத்தின் இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
மேலும், “இந்தியாவில் தற்போது மாதம் ஒன்றுக்கு 1,300 பீட்டா பைட் அளவிலான டேட்டா பயன்படுத்தப்படுகிறது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 மடங்கு வளர்ச்சியாகும்” என்றும் அவர் கூறுகிறார். உலகாளவிய மொபைல் விற்பனைச் சந்தையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜியோவின் தாக்கத்தால் டேட்டா கட்டணங்கள் 48 விழுக்காடு சரிந்துள்ளது. இது ஸ்ட்ரீமிங் சேவைகளை உயர்த்தியுள்ளது.
மதிப்பீடுகளின்படி தற்போது 40 முதல் 50 கோடி இந்தியர்கள் இணையதளம் பயன்படுத்துகின்றனர். இந்தியர்கள் ஆன்லைனில் காணொளி பார்க்கப் பயன்படுத்தும் நேரம் இப்போது நாள் ஒன்றுக்குத் தோராயமாக 58 நிமிடங்களாக அதிகரித்துள்ளது. ஆனால், இது 6 வருடங்களுக்கு முன்பு 2012ஆம் ஆண்டில் வெறும் 2 நிமிடங்களாக மட்டுமே இருந்தது. 2019ஆம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து 67 நிமிடங்களாக உயரும் என்று ஜெனித் மீடியா ஏஜென்சியின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தை மதிப்பு 2023ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர்களாக உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருப்பவர்களிடமும், பெண்களிடமும், வயதானவர்களிடமும் இணையப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணையம் பயன்படுத்துபவர்களில் 82 விழுக்காட்டினர் ஆன்லைன் வீடியோக்களில் வெளியாகும் விளம்பரங்களை நுகர்கிறார்கள்.
“செய்திகளை நுகர்வதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல் ஊடகங்களைக் காட்டிலும், அச்சு ஊடகங்களின் செலவுகள் அதிகமாக இருப்பதும் அத்துறைக்குச் சவால் நிறைந்ததாக உள்ளது. செய்திகளை நுகரும் போக்கு மாறி வருவதற்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது மிக முக்கியமான காரணமாக உள்ளது. இளைய தலைமுறையினர் செய்திகளை நுகர்வதற்கு அச்சு ஊடகங்களிலிருந்து டிஜிட்டலுக்கு மாறி வருகிறார்கள்” என்கிறார் நீல் கமல் ஷர்மா. இவர் மேடிசன் மீடியாவின் தலைமை இயக்கு அதிகாரியாகவுள்ளார்.

மதிப்பீடுகளின்படி டிஜிட்டல் ஊடகங்களின் மொத்த செலவு ரூ.12,000 முதல் ரூ.13,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகை ஊடகங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருந்தாலும், வேகமான வளர்ச்சி கண்டுவரும் துறையாக உள்ளது. டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி 30 விழுக்காடாக உள்ளது. ஆனால், அச்சு ஊடகங்களின் வளர்ச்சி 4 முதல் 6 விழுக்காடாகவும், காட்சி ஊடகங்களின் வளர்ச்சி 12 விழுக்காடாகவும் மட்டும்தான் உள்ளது. தற்போது டிஜிட்டல் செலவுகளில் 60 முதல் 70 விழுக்காடு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களின் வழியாக மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது.
அனிதா மேலும் கூறுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரையில் இணையத்தை நுகர முதன்மை சாதனமாக ஸ்மார்ட்போன்தான் உள்ளது. இதனால் மொபைல்போன் வழியான விளம்பரங்களுக்கு (எஸ்.எம்.எஸ் / செயலிகளின் வழியாக) அதிகம் செலவிடப்படுகிறது. மொபைல்போன் மூலமான விளம்பரங்கள் ஆண்டுக்கு 34 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரூ.1,314 கோடியாக இருந்த இதன் மதிப்பு 2017ஆம் ஆண்டில் ரூ.1,761 கோடியாக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இதன் வளர்ச்சி 49 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் பெரும்பகுதி வருவாய் கூகுள், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய மூன்று நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன” என்கிறார்.
ஆனால், அச்சு ஊடகங்கள் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். “அச்சு ஊடகங்கள் இன்னமும் வலுவானதாகவே உள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் தங்களது தொழிலை விரிவாக்க அச்சு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன” என்கிறார் அக்ரீஸ் ஷர்மா.
நன்றி: மின்ட்
தமிழில்: பிரகாசு
மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக