புதன், 26 டிசம்பர், 2018

ரத்த தானம் பாதுகாப்பா? என்னென்ன சோதனைகள், எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும், யார் பெறலாம்

 க.சே.ரமணி பிரபா தேவி tamil.thehindu.com/:
 மனித ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவம் ரத்தம். இதனால்தான் ரத்த தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிக்கு பரிசோதிக்காமல் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தானமாகப் பெறப்படும் ரத்தத்தில் என்னென்ன சோதனைகள் நடத்தப்படுகின்றன, யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம், எவ்வளவு நாள் வரை ரத்தத்தைப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கியின் தலைவர் மருத்துவர் எஸ்.சுபாஷ்.
''மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கிறோம். ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும்.  கொடையாளி அளிக்கும் ரத்தத்தை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர்.
அரசு சார்பில் ஆண்டுக்கு 350 ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதுதவிர தினந்தோறும் சுமார் 30 - 40 தன்னார்வலர்கள் வந்து ரத்தத்தை அளிக்கின்றனர். 2018-ல் சுமார் 35,000 கொடையாளர்கள் ரத்த தானம் செய்துள்ளனர்.
இங்கு பெறப்படும் ரத்தத்துக்கு அதிகத் தேவை இருப்பதால் அவற்றை அரசு மருத்துவமனைகளுக்குள்ளேயே பரிமாறிக் கொள்கிறோம். தனியார் மருத்துவமனைகளுக்கோ தனி நபர்களுக்கோ ரத்தத்தை அளிப்பதில்லை.
 யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்?
* 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம்.
* அவர்களின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
* ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.
*  உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யார் ரத்தம் தரக்கூடாது?
* டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள்,  சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.
* மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு.
* மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை ரத்தம் தரக்கூடாது, கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
* எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.
* இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
எப்படி ரத்தம் சேகரிக்கப்படுகிறது?
முதலில் ரத்தக் கொடையாளர்களிடம் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவரா, இரவு தூங்கினீர்களா, மது அருந்தியுள்ளீர்களா உள்ளிட்ட 20 அடிப்படைக் கேள்விகளைக் கேட்போம். அடுத்ததாக ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம்,  இதயத்துடிப்பு ஆகியவற்றின் அளவை சரிபார்ப்போம்.
அதைத் தொடர்ந்து கொடையாளியிடம் இருந்து 350 மில்லி லிட்டர் ரத்தம் எடுக்கப்படும். அதில் 3 மில்லியை எடுத்துத் தனி ரத்தப் பையில் சேகரிப்போம். அதை சோதனைக் குழாயில் செலுத்தி 5 வகையான பரிசோதனைகள் மேற்கொள்வோம்.
 என்னென்ன சோதனைகள்?
1.எச்.ஐ.வி  (எய்ட்ஸ்)
2.ஹெபடைடிஸ் பி (மஞ்சள் காமாலை)
3. ஹெபடைடிஸ் சி  (மஞ்சள் காமாலை)
4. பால்வினை நோய்
5. மலேரியா
சோதனையின் முடிவு பாஸிட்டிவ் என வந்தால் சம்பந்தப்பட்ட சோதனைக்குழாயையும் ரத்தம் சேகரித்த பையையும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி விடுவோம். பின்பு கொடையாளரை அழைத்துப் பேசி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கவுன்சிலிங் கொடுப்போம்.
 பரிசோதனையின் முடிவு நெகட்டிவ் என வந்தால், பரிசோதிக்கப்பட்ட பைகள் (Screened Bags)என்று முத்திரை குத்தப்படும். அவற்றை ரத்தம் வழங்கும் இடத்துக்கு மாற்றுவோம். பரிசோதனை செய்யப்படாத ரத்தப் பைகள் பரிசோதிக்கப்படாதவை (Unscreened Bags)என்ற பட்டியலில் வைக்கப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும்.
பரிசோதனைகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன?
எலிசா சோதனை - 4 மணி நேரத்தில் முடிவுகள் தெரியும்.
கார்டு சோதனை - 1 துளி ரத்தத்தை கார்டில் விடவேண்டும். அதில் இரண்டு கோடுகள் தோன்றினால் நோய் இருக்கிறது என்று அர்த்தம்.
ரத்தம் எடுப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வழக்கம்போல அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும். மன அளவில் வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மனிதத் தவறுகள் ஏற்படாமல் கவனத்துடன் ரத்தப் பைகளைக் கையாள வேண்டும்.
எத்தனை நாட்களுக்கு ரத்தம் கெடாமல் இருக்கும்?
ரத்த சிவப்பணுக்கள் (Redcells)-35 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் - 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் பதப்படுத்த வேண்டும்.
தட்டணுக்கள் (Platelets) - 5 நாட்கள் - 22 டிகிரி செல்சியஸ்
ரத்த வெள்ளையணுக்கள் (Plasma)- 1 ஆண்டு - மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்
ரத்தம் எவ்வாறு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது?
பரிசோதிக்கப்பட்ட ரத்தப் பைகளில், நோய் எதுவும் இல்லாத, பரிசோதிக்கப்பட்ட பை (Screened Negative)என்று எழுதிவைப்போம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் ரத்தத்தை மீண்டும் பரிசோதிக்க வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மருத்துவமனைகள் ரத்த வங்கிகளிடம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
 ரத்தம் தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவமனை வார்டிலேயே ரத்த தானப் படிவம் அளிப்பார்கள். அதைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். தங்களின் ரத்த மாதிரியை அளிக்க வேண்டும். அதையும் தானமாக வழங்கப்படும் ரத்தத்தையும் கொண்டு கிராஸ் மேட்சிங் சோதனை (Cross Matching Compatible Test)செய்யப்படும். அது ஒத்துப்போகும் பட்சத்தில் ரத்தத்தைத் தானமாகப் பெறலாம்'' என்றார் மருத்துவர் சுபாஷ்.
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக