சனி, 1 டிசம்பர், 2018

ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்

ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்  தினத்தந்தி :அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு, இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கும்,  சம்பளம், பயண சலுகைகள் உள்ளிட்டவற்றைப்  பெறவும் அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. ஏற்கெனவே, அரசு நிதியை ராஜபக்சே பயன்படுத்துவதற்குத் தடை விதித்து வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மந்திரிகள் நிதியை பயன்படுத்துவதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததால், தீர்மானத்துக்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே, பிரதமருக்கான  அலுவலக செலவுகளைச் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், மந்திரிகளும் நிதியை செலவு செய்ய தடை விதித்து இருப்பது ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய அடியாக  பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏன்?

இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.

நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன. 16-ந்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. 
அதையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கிடையே, நடப்பு நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலம் முடிவதற்கு 20 மாதங்கள் இருக்கும் நிலையில் அந்த நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார். எனினும், அந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Sponsored by Revcontent

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக