திங்கள், 17 டிசம்பர், 2018

டிடிவி தினகரனை குறிவைக்கிறாரா மு.க.ஸ்டாலின்? பின்னணியில் உலாவும் வதந்திகள்

ttv dhinakaran, senthil balaji, mk stalin, டிடிவி தினகரன், செந்தில்பாலாஜி, மு.க.ஸ்டாலின்tamil.indianexpress.com : காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர், அ.ம.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவர் என பலரும் பட்டியலில் உள்ளார்களாம். ஒருவழியாக செந்தில்பாலாஜியின் தி.மு.க. இணைப்பு நடந்தேறிவிட்டது. தினகரனை சுற்றி மத்திய அரசின் பிடி இறுகி வரும் சூழலில், அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு தான் பலரும் தாவுவார்கள் என அரசியல் வட்டாரமே கருதியிருந்தது. லெப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் வளைந்த கணக்காக, தி.மு.க. பக்கம் தாவியுள்ளார் செந்தில்பாலாஜி. இந்த யூ டர்ன் பின்னணியில் ஸ்டாலினின் பயமும், கூட்டணி வியூகங்களும் காரணங்களாக அடுக்கப்படுகின்றன.
கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறிகொடுத்தது. தி.மு.க.விற்கு என விழும் வாக்குகள் தினகரனுக்கு மடை மாறின. குறிப்பாக தி.மு.க.வின் சிறுபான்மை வாக்குகளை வெகுவாக கபளீகரம் செய்திருந்தார்
டி.டி.வி. தினகரனால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதோடு, தி.மு.க.விற்கு வரவேண்டிய பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளும் சிதறுவது ஸ்டாலினை வெகுவாக கலவரப்படுத்தியுள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகளே கூறுகிறார்கள்.
கருணாநிதியின் சிலை திறப்பு விழா பிஸிக்கு இடையே நம்மிடம் பேசிய தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஒருவர், “முதலில், தினகரன் ஒரு அச்சுறுத்தல் என்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ச்சியாக அவர் எதிர்கொள்ளும் மத்திய அரசின் தாக்குதல்கள், அவர் மீது சாப்ட் கார்னரை சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 60 சதவிகித பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை கவரும் வல்லமை தினகரனுக்கு உள்ளது. இதே நிலை வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால், தி.மு.க. வெற்றி பெற போராட வேண்டியதிருக்கும்.
2004 பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வென்றதை போன்று மீண்டுமொரு சாதனையை படைக்க ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு தடையாக தினகரன் இருக்கிறார். இரண்டாவது, ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலுவாகியுள்ளது. இதனால் சீட் ஒதுக்கீட்டில் அக்கட்சியின் டிமாண்ட் அதிகரிக்கும். விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.வும் இதே காரணத்தை வைத்து தி.மு.க.வை அசைத்து பார்க்க முற்படலாம்.
ஒருவேளை இவர்கள் தி.மு.க.வை விட்டு விலகினால், அவர்களுக்கு இரண்டாவது ஆப்ஷனாக இருக்கப் போவது தினகரன் தான். அங்கு அவர்கள் செல்வதை தடுக்கத் தான், தினகரனை பலவீனப்படுத்த செந்தில்பாலாஜியை எங்கள் பக்கம் இழுத்துள்ளார் ஸ்டாலின்.
செந்தில்பாலாஜி ஒன்றும் மாநில அளவில் பெரிய தலைவரோ, மக்கள் செல்வாக்கு பெற்றவரோ அல்ல. அரவக்குறிச்சி, கரூர் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றவர் மட்டுமே. அவரால் கரூர் மாவட்டத்தை தவிர்த்து வேறெங்கும் அரசியல் செய்ய முடியாது. செந்தில்பாலாஜி ஆபரேஷனின் நோக்கம் தினகரனை பலவீனப்படுத்த தான்!” என்றார்.
கடந்த சில மாதங்களாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர், விருதுநகரைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் இருவரும் தினகரனை எப்படியாவது தங்களோடு இணைத்துக் கொள்ள பெரிதும் காய் நகர்த்தியுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஒருபோதும் அங்கம் வகிக்க முடியாது என டி.டி.வி. திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதன்பிறகு தான் செந்தில்பாலாஜி ஆபரேஷன் நடந்தேறியுள்ளது.
அ.ம.மு.க.வில் தேவர் சமுதாயத்தினரின் ஆதிக்கம் அதிகமிருப்பதாக விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செந்தில்பாலாஜியின் கட்சி தாவல் தினகரனுக்கு ஒரு அடி தான். சேலஞ்சர் துரை, தாமோதரனை விட்டால் இப்போது கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு வலுவான ஆள் இல்லை.
அ.ம.மு.க. கட்சி கொடியை டிசைன் செய்து ப்ரிண்ட் அடித்ததில் தொடங்கி, கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியது வரையில் கட்சிக்காக பல கோடி ரூபாயை செந்தில்பாலாஜி இரைத்துள்ளார். அதற்கான பிரதிபலன் கண்ணுக்கு எட்டிய வரையில் தென்படாததால் தான், தி.மு.க.விற்கு அவர் தாவியதாகவும் கூறப்படுகிறது.
அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் 2011, 2014, 2016 தேர்தல்களில் துடிப்புடன் செயலாற்றி, தற்போது ஒதுக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலை எடுக்கும்படி செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் சொல்லியுள்ளாராம். அவர்களில் யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களோ, அவர்களை தி.மு.க.விற்குள் இழுக்கும் முதல் அசைன்மெண்ட் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நான்கு தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு முன்னாள் செயலாளர், இன்ஷியல் பெயர் கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர், அ.ம.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவர் என பலரும் பட்டியலில் உள்ளார்களாம்.
தினகரனின் வளர்ச்சியால் அ.தி.மு.க.வை விட அதிகம் கலவரமாகியிருப்பது தி.மு.க. தான். “தி.மு.க. நம்மளை தாக்குறதும் ஒரு நல்லது தான். ஸ்டாலினுக்கு எதிரி எடப்பாடியில்ல, தினகரன் தான்னு மக்களுக்கு புரிஞ்சிடுச்சுல. திருவாரூர் பை எலக்‌ஷன்ல நாம கொடுக்க போற அடி, நாம தான் தி.மு.க.விற்கு மாற்றுனு உறுதி செய்றதா இருக்கனும்” என்று தன் கட்சி மூத்த நிர்வாகிகளிடம் உறுமியுள்ளார் டி.டி.வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக