திங்கள், 10 டிசம்பர், 2018

அண்ணன் திருமாவும் ராக்கெட் ராஜாவும்.. மைய நீரோட்டத்தின் இரு கரைகள்

thetimestamil : அண்ணன் திருமாவளவனுக்கு : பகுதி – 1
ப. ஜெயசீலன் : சமகால அரசியல் தலைவர்களில் அரசியல் தலைமைத்துவம்(political leadership) பெற்றவர் யாரென்று கேட்டால் திருமாவளவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சீமான்,அன்புமணி, ஸ்டாலின், கமல் போன்ற அனைவரும் நிர்வாகம்(administration) மற்றும் மேலாண்மை(management)(ரோடு போடுவோம், பாலம் கட்டுவோம், மாடு மேய்க்க வைப்போம், இலவச மருத்துவம் தருவோம்) குறித்து மட்டுமே திரும்ப திரும்ப தங்களது பார்வையாக(vision) முன்வைக்கிறார்கள்.
இன்னும் சொன்னால் கமல் ஒரு பேட்டியில் நமக்கு இன்றைய காலத்திற்க்கு தேவை அரசியல்வாதிகள் அல்ல ஒரு நல்ல CEO என்று சொன்னார். இது ஒரு மிக மோசமான அரசியல் புரிதலற்ற ஒரு பார்வை. இந்த பார்வையின் பல்வேறு பரிணாமங்கள்தான் சிலர் சகாயம் IAS முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுவதும், அன்புமணி அடிக்கடி நான் ஒரு டாக்டர், நான்தான் இலவச ஆம்புலன்ஸ் விட்டேன் நான் முதல்வரானால் இன்னும் நல்லா பண்ணுவேன் என்று சொல்வதும்.

உண்மையில் ஒரு தரமான மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் MBA படித்த ஒருவனால் இவர்களைவிட மிக திறமையாக நிர்வாகத்தையும், மேலாண்மையையும் செயல்படுத்திவிட முடியும். பிறகு எதற்கு இந்த அரசியல் தலைவர்கள்? யார்வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வந்து திறமையான IAS அதிகாரிகளை வைத்து அரசாங்கத்தை நடத்திவிட முடியுமே? அல்லது எந்த அரசியல் கோட்பாடு புரிதலுமற்ற முட்டாள் வேண்டுமானாலும் முதல்வராகி ஒரு திறமையான MBA பட்டதாரியை துணைக்கு வைத்து எந்த துறையின் நிர்வாகத்தையும் சீர் செய்து விட முடியும். பிறகு எதற்கு பிரத்யேகமாக அரசியல் தலைவர்கள்?
இங்குதான் அரசியல் தலைவர்களை மதிப்பிட அவர்களுடைய அரசியல் தலைமைத்துவத்தை அளவுகோளாக கொள்ள வேண்டும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் தலைமைத்துவம் என்பது சில முக்கியமான நேரங்களில் சிலநூறாண்டு தலைமுறைகளின் தலைவிதியையே தீர்மானிக்க கூடியவை. வடவர், பார்ப்பனிய எதிர்ப்பின் நீட்சியாக திமுக எடுத்த இருமொழி கல்விக்கொள்கை என்னும் முடிவு இன்று வரை தமிழகத்தின் சமூக பொருளாதார முனைகளில் விளைவுகளை ஏற்படுத்துவதை நாம் காண்கிறோம்.
அரசியல் தலைமைத்துவம் என்பது மிக தெளிவான, விரிவான கோட்பாட்டு பின்புலத்தோடு, புரிதலோடு அரசியல் முடிவுகளை எடுப்பது மற்றும் வழிநடத்துவது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது என்கின்ற நிர்வாக/மேலாண்மை முடிவிற்கு பின்பு ஏராளமான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. சுற்றுசூழல், மக்களின் நில உரிமை/பகிர்ந்தளிப்பு, தனியார் துறையின் பங்கேற்பு/பங்களிப்பு, சாலையின் பயன்பாடு மற்றும் பயனாளிகள் போன்ற இன்னும் ஏராளமான விஷயங்கள் சார்ந்து எந்த கோட்பாட்டு அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன, அப்படி எடுக்கப்படும் முடிவுகள் அந்த அரசியல் தலைமை அதுவரை முன்னிறுத்திய கோட்பாடு சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்படி தான் செயல்படுத்த முனையும் விரும்பும் விசயங்களை தனது அரசியல் கோட்பாட்டு பின்னணியோடு அணுகமுடிந்தவரே அரசியல் தலைமைத்துவம் பெற்றவர் என்று சொல்ல முடியும். இந்த அடிப்படையில் தமிழக சூழலில் அம்பேத்கரிய பெரியாரிய கோட்பாட்டு தளத்தை முழுமையாக உள்வாங்கிவராக, ஆளுமை செலுத்தக்கூடியவராக அரசியல் தலைமைத்துவம் பெற்ற ஒரே வெகுஜன தேர்தல் இயக்க கட்சியின் தலைவராக அண்ணன் திருமாவளவன் மட்டுமே உள்ளார்.

கடந்த 10 வருடங்களாக அண்ணன் திருமாவளவனின் கிட்டத்தட்ட எல்லா பேச்சுக்களையும் நான் கேட்டுவந்திருக்கிறேன். அவரது கோட்பாட்டு புரிதல்களும்,விளக்கங்களும் என்னை போன்ற லச்சக்கணக்கானவர்களுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. அப்படிப் பட்ட அண்ணன் திருமாவளவன் சமீபத்தில் நாடார் அமைப்புகள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் அழைப்பிதழில் பெயர் இல்லாத நிலையிலும் அந்த மேடையில் அவர் ஆற்றிய உரையை கேட்க நேர்ந்தது.
சுபாஷ் பண்ணையாரின் , ராக்கெட் ராஜாவின் பெயரையும் அவர்கள் நடத்தும் நாடார் இயக்கத்தின் பெயர்களையும் குறிப்பிட்டு வணக்கம் சொல்லி “நாடார் குல சொந்தங்களே” என்று தொடங்கி அண்ணன் ஆற்றிய உரையை கேட்டேன். அதே மேடையில் ராக்கெட் ராஜா வன்கொடுமை சட்டத்தை எதிர்த்து பேசினார். அடுத்த நாள் அதே மேடையில் இருந்த கார்குழல் ஹரி நாடார் திருமாவளவன் போன்றவர்கள் சாதி வன்முறையை தூண்டுகிறார்கள் என்று பேட்டி தருகிறார். இவர்களை போன்ற சில்லறைகள் புழங்கும் மேடைகளில் அண்ணன் திருமா ஏன் புழங்க வேண்டிய தேவை வந்தது?
பெயர் குறிப்பிட்டு அவர்களுக்கு வணக்கம் சொல்லி “நாடார் குல சொந்தங்களை” ஆசுவாசப்படுத்தி, காமராஜர் புகைப்படத்தை தனது கட்சி பயன்படுத்தும் பராக்கிரம சாதனையை அங்கு திரண்டிருந்தவர்களுக்கு எடுத்துரைத்து உரையாற்றவேண்டிய நிர்பந்தம், அவசியம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை அண்ணனிடம் எழுப்பினால் அவர் என்ன பதில் சொல்வார் என்று எனக்கு தெரியும். “மைய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்”.
சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் தலித்திய அமைப்புகள் அணிதிரள வேண்டும் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனும் குறிப்பாக ரவிக்குமார் போன்ற விசிக-வினரும் “மைய்ய நீரோட்ட” புராணத்தையே பாடினார்கள். அண்ணன் தொடர்ந்து மைய்ய நீரோட்டம் குறித்து பல்வேறு தருணங்களில் விரிவான விளக்கங்களை வழங்கியிருக்கிறார். சுருக்கமாக சாதி ஹிந்துக்களின் நோக்கம் தலித்துகளை விலக்கிவைப்பது(to isolate). தலித்துகளின் போராட்டமும் விருப்பமும் ஒன்றிணைவது(to integrate).
இந்நிலையில் தலித்துகளும் குறிப்பாக தலித்திய இயக்கங்களும்/கட்சிகளும் மைய நீரோட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். அதாவது தமிழ் தேசியம், தமிழர் நலன்/உரிமை போன்ற விஷயங்களில் தான் போராட சென்றால் கல்லெடுத்து அடித்தாலும், தேர்தல் கூட்டணி அமைத்து கூட்டணி கட்சினரோடு பிரச்சாரம் செய்ய செல்கையில் கூட்டணி கட்சினரே சாதி ஹிந்துக்கள் தெருவுக்குள் எங்களோடு வராதீர்கள் எங்களுக்கு ஓட்டு விழாது என்று சொன்னாலும் நாம் அவர்களோடு இணைந்திருப்பது அவசியம். ஏனென்றால் அப்பொழுதுதான் “மைய நீரோட்டத்தில்” நீச்சல் அடிக்க முடியும். இதை நாம் செய்ய மறந்தாலோ, மறுத்தாலோ தனிமை பட்டு போவோம்.
அண்ணன் திருமா, சாதி என்பது வெறும் அடக்குமுறையோடு மட்டும் தொடர்புடையது அல்ல மாறாக அது அதிகாரத்தோடு தொடர்புடையது என்று விளக்கி மிக விரிவான ஆழமான உரைகளை ஆற்றியிருக்கிறார். அண்ணனின் வார்த்தையில் சொல்வதென்றால், தலித்தை கோவிலுக்குள் விடாமல் இருப்பதின் உண்மையான காரணம் தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்பதோ, அவர்களை பாகுபாடோடு நடத்த வேண்டும் என்பதோ அல்ல. தலித்துகள் கோவிலுக்குள் வந்தால் அடுத்து அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள். உதாரணத்திற்கு தலித்துகள் கோவிலுக்குள் வந்தால் கோவில் குளத்தை ஏலம் எடுக்க முயல்வார்கள். இதன் மூலம் அதிகாரப்பகிர்வுக்கான தேவை ஏற்படும். இதனை தடுப்பதின் ஒரு கருவியாக சாதி ஹிந்துக்களுக்கு சாதி பயன்படுகிறது. இதன் பொருட்டுதான் சாதி ஹிந்துக்கள் சாதியை பேணி பாதுகாக்கிறார்கள். in nutshell caste holds a brilliant reward system. so the caste hindus wants to practice and protect it. அண்ணனின் இந்த விளக்கம் நூறுசதவிகிதம் சரி.
இப்பொழுது “மைய நீரோட்டம் (mainstream)” என்றால் என்ன ? இந்திய சூழலில் மைய நீரோட்டம் என்பதும் அதிகாரத்தோடு தொடர்புடையது. உதாரணத்திற்கு எந்த கிராமத்திற்கு நீங்கள் சென்றாலும் ஊர் மந்தையும் அதனை சுற்றிய வீதிகளும் சாதி ஹிந்துக்கள் புழங்கும் பகுதிகளாக இருப்பதாய் பார்க்கலாம். தலித்துகளின் குடியிருப்புகள் ஊரின் மையத்திலிருந்தும, சாதி ஹிந்துக்களின் சமூக பொருளாதார கலாச்சார மையத்திலிருந்தும் விலகியிருக்கும்.



காரைக்குடி சிக்கன் செட்டிநாடு என்பது 5 நட்சத்திர உணவக மெனுக்களிலிருக்கும் mainstream பதார்த்தம். அதுபோன்றதொரு அங்கீகாரத்தை தெக்கத்தி பறையர் மாட்டின் நாக்கு கறி வறுவல் அடையாது.
இன்னொரு உதாரணம் சொல்வதென்றால் சென்னையின் மையத்தில் மியூசிக் அகாடெமி அமைந்து அதில் சாஸ்திரிய சங்கீத இசை நிகழ்ச்சிகள் நடப்பது ஒரு mainstream நிகழ்ச்சியாக நமது சமூகத்தால் உள்வாங்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் casteless collective போன்ற முயற்சிகள் ஒரு alternate இசையாக, “கலக” இசையாக, “வித்தியாசமான” இசை நிகழ்ச்சியாக முன்னிறுத்தப்படும். காரைக்குடி சிக்கன் செட்டிநாடு என்பது 5 நட்சத்திர உணவக மெனுக்களிலிருக்கும் mainstream பதார்த்தம். அதுபோன்றதொரு அங்கீகாரத்தை தெக்கத்தி பறையர் மாட்டின் நாக்கு கறி வறுவல் அடையாது. இன்னும் எளிமையாக சொன்னால் தேவர்மகன் mainstream படமாக மாறும். கபாலி எடுத்தால் தலித் சாதி(தலித்திய படமாக அல்ல) படமாக சுருங்கும். so being mainstream is a privilege. in other words mainstream itself is a matter controlling power.
இப்படி அதிகாரத்தோடு தொடர்புடைய மைய நீரோட்டத்தில் எப்படி கலப்பது? உண்மையில் மைய நீரோட்டத்தில் கலந்தே ஆக வேண்டுமா? குறிப்பாக தேர்தல் அரசியல் “மைய நீரோட்டத்தில்” கலந்தே ஆக வேண்டுமா? போன்றவற்றில் எனக்கு தீவிரமான கேள்விகள் உள்ளன. இந்த புள்ளியில் அண்ணன் திருமாவளவனின் பார்வையோடு நான் முரண்படுகிறேன். தலித்துகள் பன்னெடும்காலமாக சாதி ஹிந்துக்களோடு ஒரு பேரத்தை(negotiation) நடத்தி கொண்டிருக்கிறார்கள். பேரத்தின் அடிப்படை நான் இதை தருகிறேன் நீ அதை தா என்பதுதான். சாதியின் பொருட்டு நடக்கும் பேரத்தில் தலித்துகள் சாதி ஹிந்துக்களுக்கு தருவதாய் offer செய்வது சமத்துவமும், சகோதரத்துவமும் நிரம்பிய ஒரு அமைதியான, ஒற்றுமையான ஜனநாயக சமூகத்தையும் அதன் மூலம் எல்லோரும் அடையும் அமைதியையும், மகிழ்ச்சியையும். இதற்கு பிரதிபலனாக தலித்துகள் சாதி ஹிந்துக்களிடம் கேட்பது சாதியொழிப்பையும், சாதிய அடக்குமுறையை கைவிடுவதையும்.
இந்த பேரம் ஒரு நல்ல negotiation அல்ல. ஏனென்றால் இந்த பேரத்தில் தலித்துகள் பெரும் அனுகூலமடைவார்கள் என்று சாதி ஹிந்துக்கள் நினைக்கிறார்கள். மற்றும் சாதியை பயின்று, தலித்துகளின் மீது அடக்குமுறைகளை ஏவி தாங்கள் வாழும் சமூக சூழல் அவர்களுக்கு ஒரு அதிகாரத்தையும், திமிரையும் தரும்பொழுது, தலித்துகளை சமூக கலையிலக்கிய பொருளாதார தளத்தில் விலக்கி வைத்து தாங்கள் வாழும் வாழ்வே ஜாலியாக இருக்கையில் என்னா மயித்துக்கு தலித்துகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட because it makes lot of sense.
இந்நிலையில் தலித்துகள் தங்களது negotiation யுக்தியை மாற்றவேண்டிய தேவையிருக்கிறது. அதாவது தலித்துகளின் bargaining powerயை அவர்கள் பெருக்கி கொள்ள வேண்டும், இரண்டாவது அவர்கள் negotiation மேடையில் தங்களது offerயை சாதி ஹிந்துக்கள் தட்ட முடியாத வகையில் வலுவான ஒன்றாக வைக்க வேண்டும். இவை எல்லாம் அண்ணன் திருமாவளவனின் மைய நீரோட்ட கனவுக்கும் பொருந்தும். அதிகாரத்தோடு தொடர்புடைய மைய அரசியலில் பேர வலிமையையும் இல்லாமல் அவர்களால் தட்டி கழிக்க முடியாதா ஒரு offerம் செய்யாமல் “நாடார் குல சொந்தங்களே” என்று பேசினால் மைய நீரோட்டத்தில் கலக்க முடியாது.
இத்தனை வருட மைய அரசியல் நீச்சலுக்கு பின்பும் ஒரே ஒரு சதவிகித ஏன் .5 சதவிகித சாதி ஹிந்துக்கள் ஓட்டுக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று அண்ணனால் சொல்ல முடியுமா? தான் போட்டியிடும் சொந்த தொகுதியில் கூட தன்னால் பிரச்சாரம் பண்ண எல்லா தெருக்களுக்குள்ளும் போக முடியவில்லை என்று அண்ணன் சொல்லும்பொழுது நீரில்லாத இடத்தில நீச்சலடித்து பழகும் குழந்தைகள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

அம்பேத்கரை ஆழ படித்த அண்ணன் சாதி ஹிந்துக்களின் மடைமைத்தனத்தை, சில்லறைத்தனத்தை, சாதிவெறியை குறைத்து மதிப்பிடுவது என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மைய நீரோட்டத்தில் அவர்கள் நம்மை இணைத்துக்கொள்வார்கள் என்று நாம் நம்புவதை விட ஒரு அப்பாவித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அமைதியை விரும்புபவர்கள் வலிமையானவர்களாகவும் இருக்கவேண்டும்.
மூன்றாவது ஓயாத அலைகள் சமரில் இலங்கை ராணுவத்துக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வலுவாக இருந்த விடுதலை புலிகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போது இலங்கையரசு அவர்கள் முன் மண்டியிட்டது. அதே புலிகள் இறுதி போரில் தோல்வியின் விளிம்பில் தங்களது துப்பாக்கிகளை மௌனிக்கிறோம் என்று அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்தபோது இலங்கை ராணுவம் கொஞ்சமும் தயங்காமல் அவர்களை அழித்தொழித்தது. இதுதான் உலக நியதி.
வலுவான ஒருவன் சமாதானத்திற்கு விடுக்கும் அழைப்பே மதிப்புக்குரியதாக இருக்கும். அடிவாங்கி கொண்டிருப்பவனின் சமாதான அழைப்பு கேலிக்குறிதாக மாறும். உதாசீனப்படுத்தப்படும். அண்ணன் திருமாவளவனின் மைய நீரோட்ட விருப்பமும் சாதி ஹிந்துக்களால் உதாசீன படுத்தப்படும், கேலிக்குரியதாகத்தான் பார்க்கப்படும்.
வலிமையையும் இல்லாமல், வலிமையடைவதற்கான முயற்சியிலும் ஈடுபடாமல், பேர வலிமையையும் இல்லாமல், சாதி ஹிந்துக்களால் தட்ட முடியாத offerம் இல்லாமல் மைய நீரோட்டத்தில் கலப்பேன் மைய கலப்பேன் என்றால் எப்படி? மைய நீரோட்டத்தில் கலக்கிறேன் என்று ராக்கெட் ராஜா ஏவுகணை ராஜா போன்றவர்கள் புழங்கும் மேடையில் அவர்களுக்கு வணக்கம் சொல்லி உரையாற்றுவதுதான் வழியா? நூற்றுக்கணக்கான கணக்கான இளைஞர்கள் அண்ணனின் வழிநடத்தலில் அவருக்காகவும் கட்சிக்காகவும் உயிர் தியாகம் செய்தது இதற்காகத்தான?
தொடரும்…
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக