சனி, 29 டிசம்பர், 2018

சிலோன் ரேடியோ .. இந்திய அரசின் திரையிசை தடையை உடைத்த வரலாறு... மயில்வாகனனும் இலங்கை வானொலியும்

1950- 70 கள்வரை  ஒவ்வொரு திரைப்படமும்
வெளியாகும் வேளையில் தயாரிப்பாளர்கள்
மயில்வாகனனின் தயவை நாடினார்கள். காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைவந்து, பாட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, சென்னையில் மதிய போசனத்தை முடித்து, மாலை 4 மணிக்கு மீண்டும்
கொழும்பு திரும்புவார் மயில்வாகனன். மாலை 6 மணிக்கு அந்த புதிய பாடல்கள் அன்றைய தினம் ஒலிபரப்பாகும். இது, அந்தக் காலத்தில் மயில்வாகனனின் மாமூலான
செயல்பாடாகவிருந்தது. விளைவு, புதிய திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதும். பாடல்கள் மூலமாகமட்டுமல்லாமல், நடிகர்கள், பின்னணி கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றவர்களுடன் பல்வேறுவிதமான நேரடி நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியும் இலங்கை வானொலி தன் செல்வாக்கைப் பெருக்கியது.
உலகில் எந்த வானொலி நிலையத்திலுமே இல்லாத அளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கில பாடல்களின் இசைத்தட்டுக்களை இலங்கை வானொலி பொக்கிஷமாகக்கொண்டுள்ளது. 1920-30களில் வெளியான, மிகவும் அரிதான 78 rpm இசைத்தட்டுக்கள் உள்பட! ,
Subramaniam Mahalingasivam :   திருமதி ஞானம் இரத்தினம், இலங்கை வானொலியிலே நீண்டகாலம் அதன் கல்விச் சேவையில் பணியாற்றி, பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.
`Green Light' என்று, அவர் தன்னுடைய வானொலி அநுபவங்களை - அக்காலத்து நினைவுகளை, நூலாக வெளியிட்டிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்துக்கு தாம் சென்றதை அவர் அந்த நூலிலே குறிப்பிடுகிறார்.

‘சாஸ்திரீய சங்கீதத்தின் உன்னதம் வாய்ந்த மரபை ஆர்வத்தோடு ரசிக்கவைக்கும் விதத்தில் பொதுமக்களின் ரசனையை மேம்படுத்த நாம்
வி,என் ,மதியழகன்
கடினமாகப் போராடிக்கொண்டிருக்கையில், இலங்கை வானொலி மலினமான இசையில், இளைய தலைமுறையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது’ என்று, சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநர், தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திய அந்த மாத்திரத்தேயே, மிகுந்த கோபத்தோடு தன்னிடம் கூறியதாக அவர் அந்த நூலிலே குறிப்பிடுகிறார்.
50 - 60 களிலும், அதற்குப் பின்னரும்கூட வெகுகாலம்வரை, இலங்கை வானொலியினுடைய வர்த்தக சேவை தொடர்பில் இந்த ஓர் எண்ணம் அகில இந்திய வானொலி அதிகாரிகளிடம் மாத்திரமல்ல, கணிசமான ஒரு மக்கள் மட்டத்தில், ஒரு மக்கள் கருத்தாகவுமிருந்தது. இந்த எண்ணம் இலங்கையிலுங்கூட மிகப் பரவலாக இருந்தது.
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
ஆனால், இலங்கை வானொலி எதைத் தெரிந்து, எதற்காக செய்ததோ, இன்று, கர்நாடக இசை யைப்போல, தாம் பெற்ற ஓர் அரும் செல்வம் ‘தமிழ்த் திரை இசை’ என்று, தமிழ் உலகம் பெருமையோடு கொண்டாட, அந்தச் செழிப்புக்கு வளம் சேர்த்த தனிப் பெருமை இலங்கை வானொலிக்கே உரியது.
தமிழ்த் திரை உலகின் பொற்காலத்து மன்னர்களாக சிவாஜி கணேசனும், எம். ஜி. இராமச் சந்திரனும் திகழ்கையில், இலங்கை வானொலியின் எஸ், பி. மயில்வாகனனும் அப் பொற்காலத்தில் இவர்களோடு இணையாக, ஒரு முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார்.
இங்கிலாந்தில், பிபிஸி ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், ஆசிய பிராந்தியத்தின் முதல் வானொலியாக இலங்கை வானொலி தொடங்கப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட transmitter உதிரி பாகங்களை மீள் இணைத்து, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போது இலங்கையில் தந்தி சேவையின் தலைமைப் பொறியியலாளராகவிருந்த Edward Harper என்பவரும், அவரோடு அங்கு பொயியலாளராகவிருந்த நடராஜா என்பவரும் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சி அளித்த வெற்றியில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ‘கொழும்பு வானொலி’ உதயமானது. 1kw வலுகொண்ட, மத்திய அலை வரிசையில் அது ஒலிபரப்பை மேற்கொண்டது.
அந்தவேளையில், இலங்கை அமைந்த கேந்திர முக்கியத்துவம், இரண்டாம் உலக யுத்தத்தின் போது, தெற்காசிய பிராந்தியம் முழுவதிலுமுள்ள நேசநாட்டு படைகளுக்கான ஒலிபரப்புக்கு மிக உகந்த வானொலியாக கொழும்பு வானொலியைத் தேர்ந்தெடுக்கவைத்தது. அப்படி, தெற்காசிய படைகளுக்கான ஒலிபரப்புக்காக கொழும்பு வானொலி தென்கிழக்காசிய படைப்பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டு, பின்னர் மீண்டும் அது கையளிக்கப்பட்டபோது, மேலும் நன்கு நவீன மயப் படுத்தப்பட்ட ஒரு பாக்கியத்தை அந்த வானொலி பெற்றது.
அதன் பின்னர் 1949இல் அது ‘இலங்கை வானொலி‘ என்ற பெயரைப் பெற்றது. அப்போது இந்தியாவில், அகில இந்திய வானொலி - ஆகாஷ்வாணி, 1930இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, 1923இல் பம்பாயில் Radio Club என்ற ஒன்று, வானொலி ஒலிபரப்பை இந்தியாவில் முதன்முதலாக ஆரம்பித்திருந்தது. அதன்பின்னர், India Broadcasting Company என்ற ஒரு நிறுவனமும் 1927இல் பம்பாயிலும் கல்கத்தாவிலும் ஒலிபரப்பைத் தொடங்கியது.
அரசின் தந்தி திணைக்களத்தின் நிர்வாகத்தில், இலங்கையில் ‘கொழும்பு வானொலி’ 1925இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோது, இந்தியாவில் Indian State Broadcasting Service 1930 ஏப்ரல் முதலாம் தேதி ஆரம்பமானது. 1936இல் இது ‘அகில இந்திய வானொலி’யாக பின்னர் மறுபெயர் சூட்டப்பட்டது.
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் எழுந்த இப்புதிய தொடர்பு சாதன வடிவில், தெற்கு ஆசிய வானலையின் ‘அரசி’ என்ற கீர்த்தியோடு, இலங்கை வானொலி ஒலிபரப்புக் கலைக்கான செம்மையான ஓர் இலக்கண நெறியை வகுத்து, ஒலிபரப்புத் துறையை வளப்படுத்தியது. ஒலிபரப்புக்கு இலங்கை வானொலி ஒரு ‘மாதிரி’ (model) என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கவில்லை.
இலங்கை வானொலியில் முதல் தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமனம்பெற்ற சோ. சிவபாத சுந்தரம்தான் தமிழ் ஒலிபரப்பின் பிதாமகர். ‘ஒலிபரப்புக் கலை’ என்ற நூலை அவர் எழுதினார். 1955இல் அது வெளிந்தபோது, ‘இந்திய மொழிகள் அனைத்துள்ளும் ஒலிபரப்பு பற்றி வெளியான முதல் நூல் என்று, ‘இந்து’ அந் நூல்பற்றி குறிப்பிட்டது. ஒலிபரப்புக்கான ‘பைபிள்’ அவர் எழுதிய 'ஒலிபரப்புக் கலை'.
சிவபாதசுந்தரத்தினுடைய இந்த நூல் அமுத நிலையம் வெளியீடாக வெளிவந்தது. ஒவ்வோராண்டிலும் வெளியான சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கும் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம், 1955இல் வெளியான சிறந்த நூலாக இந் நூலைத் தேர்ந்தது.
அப்போது, அங்கு அதில் ஒரு சர்ச்சை எழுந்தது. நூலை எழுதிய சிவபாதசுந்தரம் இந்தியரல்லர். இந்திய எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கே தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசளித்து, கௌரவித்து ஊக்குவிப்பதென்பதுதான் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினுடைய அமைப்பு விதி.
செயலாளராகவிருந்த பெரியசாமி தூரன், எந்த நாட்டவராகவிருந்தாலும் தமிழ் நூல் என்றால் அதற்கு அப் பரிசு வழங்கப்படாலம் என்று, அதுவரை தொடர்ந்த வழக்கத்தை மாற்றியதில், ஆயிரம் ரூபா பரிசு சிவபாதசுந்தரம் அவர்களுக்கு அந் நூலுக்காக வழங்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இப் பரிசளிப்பு வைபவத்தில் நூலை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, பல்கலைக் கழகத்தில் எம். ஏ. பட்டதாரிகளுக்கு இந் நூலைத் தாம் சிபாரிசுசெய்திருப்பதாக தெரிவித்தார்.
இப்படி, இலங்கை வானொலியின் ஆரம்ப நாள்களில் அங்கு பணியாற்றிய சோ. சிவபாதசுந்தரம், எஸ். குஞ்சிதபாதம், வி. என். பாலசுப்பிரமணியம், கே. எஸ். நடராஜா, ‘சானா’ சண்முகநாதன், ‘வானொலி மாமா’ என்று பெயர்பெற்ற எஸ். சரவணமுத்து, மோனி எலியாஸ் போன்ற இவர்கள்தான் இலங்கை வானொலியின் உன்னதமான இலக்கண மரபுக்கு வரப்பிட்டவர்கள். இவர்கள் தவிர, பிபிஸியிலிருந்து இலங்கை வானொலிக்கு Director Generalஆக நியமிக்கப்பட்ட John Lampson, Pascoe Thornton ( Director of programmes) ஆகியயோரின் பங்கும் உண்டு.
ஆக, இந்த பின்னணியில் இலங்கை வானொலியினுடைய வர்த்தக சேவை 1950 செப்ரெம்பர் 30இல் ஆரம்பமானது. வானொலியின் ஒரு பெரும் அதிர்வை இதுதான் இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தியது; அது, இமயம்வரை சென்றது. இமயத்தின் உச்சியில் கால்பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் அங்கு வானலைகளில் முதலில் கேட்டார்கள்.
Clifford Dodd என்ற அவுஸ்திரேலியர் இயக்குநராக நியமிக்கப்பட்டு, இலங்கை வானொலியின் இந்த வர்த்தக சேவை ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த சாதனங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவை, சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் மாத்திரமன்றி, அதன் ஆசிய சேவை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் விரிவடைந்து, துணைக்கண்டத்தை ஆக்கிரமித்தது.
புதியதான இந்த வர்த்தக ஒலிபரப்பு வடிவத்தில், ஒலிபரப்புத் துறைக்கே புதியவரான மயில்வாகனன், தமிழில் அதற்கான ஒரு பரிமாணத்தை அற்புதமான விதத்தில் நிர்ணயித்தார்.
இலங்கை வானொலியின் இந்த வர்த்தக சேவை ஆரம்பமான காலகட்டம், தமிழ் சினிமாவிலும் ஒரு திருப்புமுனைக் காலமாக இருந்தது. சிவாஜி, எம். ஜி. ஆர். ஆகியோர் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முனைந்த காலம் அது.
புது வளர்ச்சிபெற்ற தமிழ்த் திரைப்படத்தின் கிராமப்புற கவர்ச்சிக்கும் நகர்ப்புற கவர்ச்சிக்கும் உதவ, அப்போது அதற்கு இன்னொரு தொடர்பு சாதனத்தின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. கர்நாடக சங்கீதமும், செய்தியும், பேச்சுக்களும் என்றிருந்த வானொலி ஒலிபரப்பு வழக்கில் தொடங்கப்பட்ட புதிய வர்த்தக சேவைக்கு, அதன் பரவலுக்கு, தமிழ் சினிமா பாடல்கள் பெருவாய்ப்பாகின.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்கள் ஒலிபரப்புக்கு இந்திய அரசு விதித்திருந்த தடை இதற்கு மேலும் வாய்ப்பாகியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சராகவிருந்த B K Kesakar, 1952இல் இத் தடையை விதித்தார்.
ஆக, சினிமா, ஒலிபரப்பு ஆகிய இந்த இரு தொடர்புசாதனங்களினதும் முதல் இணைப்பு, மயில்வாகனன் என்ற அறிவிப்பாளரின் ஆளுமை வழியாகவே ஏற்பட்டதென்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. வர்த்தக ஒலிபரப்பின் நியமங்கள் பல, ‘மயில்வாகனன் யுகம்’ வழியாகவே வருகின்றன.
இந்த மயில்வாகனன் யுகம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலமுமாகிறது.
Transistor Radioக்களும் அறிமுகமாக ஆரம்பித்த அக் காலத்தில், இந்தியாவின் கிராமப்புறங்களிலெல்லாம் ‘சிலோன் ரேடியோ இதில் கேட்குமா?’ என்பதை உறுதிப்படுத்தியே அவர்கள் அந்த ரேடியோக்களை வாங்கினார்கள். இலங்கை வானொலியைக் கேட்காமல் இந்திய நேயர் ஒருவருடைய நாள் அப்போது கழிவதில்லை.
பாடல்களின் இசைத்தட்டுக்களை வைத்துக்கொண்டு, அவற்றில் மயில்வாகனன் காண்பித்த சுழற்றல் வேலைகளும், அவரின் தனித்த, கணீரென்ற அந்தக் குரலின் ஜொலிப்பும், இந்திய இல்லங்களில் அவருக்கோர் உறவை ஏற்படுத்தின. ‘இலங்கை வானொலி என்றால் மயில்வாகனன்; மயில்வாகனன் என்றால் இலங்கை வானொலி’; இப்படித்தான் அறியப்பட்டது.
1981ஆம் ஆண்டு டாக்டர் பத்மா சுப்ரமண்யம் இலங்கை வந்திருந்தபோது, ஒரு பேட்டிக்காக அவரை இலங்கை வானொலிக்கு அழைத்துச்சென்றேன். ஒலிப்பதிவின்போது நானும் அங்கு இருந்தேன். பேட்டியின் நடுவே, ‘இலங்கை வானொலி என்றால் மயில்வாகனன் என்றுதான் அறிந்திருக்கிறோம்’ என்று பத்மா கூறினார். பத்மாவைப் பேட்டிகண்டவர் பேட்டி முடிந்த பின்னர், ‘மன்னிக்கவேண்டும்; மயில்வாகனன் தொடர்பாக நீங்கள் கூறியவற்றை ஒலிபரப்பின்போது நாங்கள் நீக்கவேண்டியிருக்கும்’ என்றார். அதற்கு பத்மா, ‘உங்கள் கடமை அதுவானால் அதனை நீங்கள் செய்யுங்கள். ஆனால், அதனைச் சொல்லவேண்டியது எனது கடமை; அதனால் நான் அதனைச் சொன்னேன்’ என்றார்.
‘திருப்பிப்பார்’, ‘ஜோடி மாற்றம்’, ‘இருகுரலிசை’, ‘ஒருபடப் பாட்டு’, என்று இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை மயில்வாகனன் கவர்ச்சிகரமான வடிவில் அமைத்தார். அப்படி, மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்த பாடல்கள், அவற்றைக் கேட்ட நெஞ்சங்களிலெல்லாம் நீங்காத இடத்தைப் பிடித்தன. அவற்றில் பொதிந்திருந்த பொருள் நயம், இசை நயத்தை மக்கள் உணர்ந்தார்கள்.
தமிழ் மொழிபற்றி, அது கையாளப்படும் முறைபற்றி, பிற மொழிகளைப்பற்றி, உச்சரிப்பு முறைமைபற்றி, வாக்கிய அமைதி மரபுகள்பற்றி எவ்வித முற்கருத்தும் கொண்டிராத மயில்வாகனன், வர்த்தக ஒலிபரப்புக்கான ஓர் உச்சரிப்பு மரபை, வாக்கிய அமைதி நெறியை, நிகழ்ச்சியமைப்புப் பாணியை உருவாக்கினார். அந்தப் பாணி இந்திய நேயர்களுக்கு மகிழ்வையூட்டியதோடல்லாமல், இந்திய சினிமாவின் வெற்றிப்போக்குக்கும் பெருமளவில் துணையானது.
ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் வேளையில் தயாரிப்பாளர்கள் மயில்வாகனனின் தயவை நாடினார்கள். காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைவந்து, பாட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, சென்னையில் மதிய போசனத்தை முடித்து, மாலை 4 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்புவார் மயில்வாகனன். மாலை 6 மணிக்கு அந்த புதிய பாடல்கள் அன்றைய தினம் ஒலிபரப்பாகும். இது, அந்தக் காலத்தில் மயில்வாகனனின் மாமூலான செயல்பாடாகவிருந்தது.
விளைவு, புதிய திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதும்.
பாடல்கள் மூலமாகமட்டுமல்லாமல், நடிகர்கள், பின்னணி கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றவர்களுடன் பல்வேறுவிதமான நேரடி நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியும் இலங்கை வானொலி தன் செல்வாக்கைப் பெருக்கியது.
ஒருமுறை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பல்லாயிக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மயில்வாகனன் பேட்டிகண்டார். அப்போது, ‘சிவாஜி’ என்ற பெயர் உங்களுடன் ஒட்டிக்கொண்டது எப்படி என்று கேட்டார் மயில்வாகனன். அதற்கு சிவாஜி கணேசன், ‘அதில் நிறைய ‘பசை’ இருக்கிறது; அதனால் தான்’ என்றார்.
மதுரைப் பகுதியில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அளித்த ஓர் இசை நிகழ்ச்சியில் மயில்வாகனனும் கலந்துகொண்டார். ‘எங்களுடன் ஒரு விருந்தினர் இங்கே இருக்கிறார். அவர் யார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்; அவரே தன்னை அறிமுகம் செய்து கொள்வார்’ என்று விஸ்வநாதன் அந்த விருந்தினரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தார். ‘வணக்கம்’ என்று ஒரு வார்த்தைதான் சொன்னார் அவர். உடனே, ‘மயில்வாகனன்’ என்ற மக்களோசை வானைப்பிளந்தது.
எம். ஜி. ஆரும் சிவாஜியும் மயில்வாகனனின் இல்லத்து விருந்தாளிகளாகவே இருந்தார்கள். ‘நான்கண்ட சொர்க்கம்’ திரைபடத்தில் சொர்க்கத்துக்கு செல்லும் தங்கவேல், அங்கே வானொலியைத் திருப்புவார்; உடனே அதில் மயில்வாகனனின் குரல் கேட்கும். ‘இந்த மயில்வாகனன் சொர்க்கம் வந்தாலும் விடமாட்டேனென்கிறாரே’ என்பார்.
இப்படியொரு பெருந் தாக்கத்தை இந்த ஒலிபரப்பின்மூலம் எப்டுத்திய மயில்வாகனன் எப்படி இத் துறைக்கு வந்தார் என்பதும் சுவாரஷ்யமானது.
இரண்டு தலைமுறைகளாக கொழும்பில் புகையிலை, எண்ணெய் வியாபாரம் செய்துவந்த குடும்பத்தில் பிறந்தவர் மயில்வாகனன். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்று, குடும்ப வியாபாரத்தையே கொழும்பில் கவனித்துவந்தார்.
கோடானுகோடி ரசிகர்களைத் தன் குரலால் கவர்ந்தவரை, அப்போது வானொலியில் கேட்கும் குரல் ஒன்று கவர்ந்தது. இலங்கை வானொலியில் பிரபலமான செய்தி அறிவிப்பாளராகவிருந்த செந்திமணியின் குரல் அது. அந்தக் குரலையும் தனக்கு சொந்தமாக்கினார். திருமணத்துக்குப் பின்னர், அப்போதுதான் ஆரம்பமான வார்த்தக சேவைக்கு அறிவிப்பாளர்கள் தேவைப்பட, ‘குரல் சோதனை’க்காக அவரை அழைத்துச் சென்றார் செந்திமணி.
அது பின்னர், ஒரு யுகம் சமைத்த குரலானது!
மயில்வாகனனின் அந்த வியாபார சிந்தையின் எண்ணமும் அணுகுதலுமே இந்த வெளிப்பாடென்றும் கொள்ளமுடியும்.
ஆக, இந்தியாவில் மக்கள் மத்தியிலும் சினிமா துறையிலும் வானொலி எற்படுத்திய இந்தத் தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ‘விவித் பாரதி’ வார்த்தக ஒலிபரப்பை 1957 ஒக்ரோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் ஆரம்பித்தது.
தமிழில் மயில்வாகனன்போல், இலங்கை வானொலி வானலைகளை ஆட்சிசெய்த இக் காலப்பகுதியில் ஹிந்தியில் அமீன் சையானி, ஆங்கில ஒலிபரப்பில் ஜிம்மி பரூச்சா போன்றவர்களும் புகழின் உச்சியில் திகழ்ந்தார்கள்.
மயில்வாகனனுக்குப் பின்னரும், வெகுகாலமாகவே ஆளுமைகொண்டிலங்கிய இலங்கை வானொலி, சினிமா பாடல்களை மையமாக வைத்தே வாழ்வியலின் எல்லாக் கூறுகளிலும் அதன் வியாபகத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை அளித்தது. ‘பாட்டும் பதமும்’, ‘இசையும் கதையும்’, ‘இசை மாலை’, ‘திரை தந்த இசை’, ‘ஒரே ராகம்’, ‘கவி உள்ளம்’... இப்படி பல.
மயில்வாகனனுக்குப் பின்னர் இலங்கை வானொலியிலிருந்து உலகளாவிய ஒரு புகழோடு சிறப்பவர் இப்போது அப்துல் ஹமீத். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்று அவர் ஆரம்பித்த அவரின் நிகழ்ச்சியும் உலகப் புகழ் பெற்றது.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளிலும், தொடர்புசாதனங்களில் எற்பட்ட உலகளாவிய மாற்றங்களிலும் இலங்கை வானொலி அது செலுத்திய ஆட்சியை இப்பொழுது இழந்தேவிட்டது. ஆனாலும், உலகில் எந்த வானொலி நிலையத்திலுமே இல்லாத அளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கில பாடல்களின் இசைத்தட்டுக்களை இலங்கை வானொலி பொக்கிஷமாகக்கொண்டுள்ளது.
1920-30களில் வெளியான, மிகவும் அரிதான 78 rpm இசைத்தட்டுக்கள் உள்ளிட்ட, அசலான தேட்டங்கள் இவை.
1967 ஜனவரி 5இல் இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்றது.
(கு-பு: மயில்வாகனன் ஓய்வுபெற்று வெகு காலத்துக்குப்பின்னர் அவருடன் நிகழ்த்திய ஒரு செவ்வியைத்தவிர, மயில்வாகனனின் எந்தவொரு ஒலிப்பதிவுமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இல்லை.)


 ஆசிரியர் குறிப்பு :  தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும்
இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான வி. என். மதியழகனின் நூல் வெளியீடொன்று நாளை மாலை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத் தலைவி பேராசிரியை பிரமீளா குருமூர்த்தியின் ஏற்பாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் ‘நினைவிலகலாத பொற்கால தமிழ் சினிமா பாடல்கள்’ என்ற கருத்தரங்கொன்று, 2014 ஒக்ரோபர் 5இல் நடைபெற்றது. கிருஷ்ணகான சபா செயலாளர் பிரபு, டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ. வே. சுப்பிரமணியம், ‘இசைக்கவி’ ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு, இதில், இலங்கை வானொலியும், எஸ். பி. மயில்வாகனனும் பற்றி பேசினேன். அதில், சில பகுதிகளை இவவேளை பகிர்ந்துகொள்ள நினைந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக