சனி, 29 டிசம்பர், 2018

சமத்துவ நெறி நோக்கி சமூகநீதிப் பயணம்

உள்ளிருந்து எழும் எதிர்ப்புக் குரல்! - அ.குமரேசன்மின்னம்பலம் : சமத்துவ நெறி நோக்கி சமூகநீதிப் பயணம் - 2
இந்து என்று இன்று சொல்லப்படுகிற மதத்தின் அன்றைய வடிவமாகிய வைதீக சமயத்தில் நிலவிய இரக்கமற்ற பாகுபாடுகளை எதிர்த்துதான் சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து மட்டுமல்லாமல், சமயத்திலிருந்தும் வெளியேறி தனி இயக்கமாகப் புறப்பட்டார், கௌதம புத்தரானார். சமயத்திற்குள் நிலவிய பாகுபாடுகளை, உள்ளிருந்தே சரி செய்ய முடியாமல் சமண இயக்கத்தைத் தொடங்கினார்கள் தீர்த்தங்கரர்கள்.
“சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசலொன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ…“
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சி தோலெலும்பினும் இலக்கமிட்டிருக்கிதோ…”
என்று சிவவாக்கியச் சித்தர் வாடா போடாவென வம்புக்கிழுத்தது அப்போது சாதிய அநீதிகளை உயர்த்திப் பிடித்தவர்களைத்தான் என்று ஊகிப்பது கடினமல்ல.
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆதிக்குடிகளின் மண்ணைக் காப்பதற்காகப் போராடியதற்காகக் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட நரகன் கதை, பின்னர் கொடுமைக்கார நரகாசுர வதம் என்ற புராணமாக்கப்பட்டது. மண்ணுரிமைக்காகப் போராடித் தோற்கடிக்கப்பட்ட அந்த ஆதிக்குடிகளுக்கெல்லாம் அசுரர்கள், அரக்கர்கள் என்ற பெயர் சூட்டப்பட்டதே ஒரு சமூக அநீதிதான். இந்தப் புரிதல் ஏற்பட்ட பிறகு நான் எனது பேச்சிலும் எழுத்திலும் ஏதேனுமொரு கொடுஞ்செயலைக் குறிப்பிடுகையில் “அரக்கத்தனமான” என்ற சொல்லைக் கையாளுவதில்லை.

விலங்கு முகங்கள்
இதிகாசங்களில், விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நாடுகளின் அரசர்களும் அவர்களது குடிகளும் விலங்கு முகங்களோடு சித்தரிக்கப்பட்டது, திராவிட இனத்தவரின் எதிர்ப்புகளை ஆரியர்கள் வென்றதைக் காட்டும் குறியீடுதான் என்பார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.
விசாரித்தால், எதிர்த்து நின்ற இனங்களை விரட்டியடித்து ஒடுக்கிய ஆதிக்கவாதக் கொடுமைகளைப் புனிதப்படுத்தும் கதைகள் பெரும்பாலான சமய நூல்களிலும் கிடைக்கக்கூடும். இஸ்ரேலியர்களுக்காகக் கடலைப் பிளந்து எகிப்தியர்களை மூழ்கடித்த பைபிள் கதை போல. ஷியா – சன்னி மோதல்களையும் வன்முறைகளையும் நியாயப்படுத்தும் குரான் கதைகள் போல.
இவ்வாறு மதங்களில் இருந்து வரும் பாகுபாடுகளை எதிர்த்து மதங்களுக்கு உள்ளேயே நடந்த போராட்ட வரலாறுகளும் உண்டு. கர்நாடகத்தில் பசவன்னா சைவத்துக்கு உள்ளேயே நடத்திய, பொதுக் கிணறுகள் உண்மையிலேயே எல்லோருக்கும் பொதுவான கிணறுகளாக இருக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் கழுத்தில் கட்டித் தொங்கவிடக் கட்டாயப்படுத்தப்பட்ட மண் கலயம் அகற்றப்பட வேண்டும் என்ற லிங்காயத்துகள் போராட்டம் அத்தகைய ஒன்றுதான். கேரளத்தில் நாராயண குரு, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர், வடலூரில் ‘மதமாகிய பேய் பிடியாதிருக்க’ வாதாடி, என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய்விட்ட வள்ளலார்… இவர்கள் கண்ட மகத்தான இயக்கங்களும் மதத்திற்கு உள்ளேயே சீர்திருத்தங்களைக் கோரியவைதான்.
கணவனின் உடைமைப் பொருளாகிய மனைவியின் உடல், அவன் இறந்த பின் அவனுடைய சடலத்தோடு சிதையில் வைத்து எரிக்கப்பட்டுவிட வேண்டும் என்றிருந்த ஸதி கொடுமையை எதிர்த்து சமயத்திற்கு உள்ளேயே போராடி வென்றவர் வங்காளத்தின் ராம் மோகன் ராய். இரண்டாம் அக்பர் என்றழைக்கப்பட்ட முகலாய மன்னர் அவருக்கு ‘ராஜா’ பட்டம் சூட்டி மகிழ்ந்தார். தனது ஆட்சிப் பரப்பிற்குள் ஸதிக் கொலைச் சடங்கிற்குத் தடை விதித்தார். ராய் கோரிக்கையை ஏற்ற கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிக். ஸதி ஒழிப்புச் சட்டமியற்றினார், ராஜா ராம் மோகன் ராய் ஏற்படுத்திய ‘பிரம்ம சமாஜம்’ இந்து சமயத்திற்கு உள்ளேயே சமூக நீதிக்கு வாதாடிய அமைப்பேயாகும்.
கத்தோலிக்க மதத்தில் தேவாலய ஆசிகளோடு கடைப்பிடிக்கப்பட்ட சமூகப் பாகுபாடுகளை எதிர்த்து (ப்ரொட்டெஸ்ட்) வெடித்த பெரும் கிளர்ச்சி, பின்னர் ப்ராட்டஸ்டன்ட் என்ற புதிய கிறிஸ்துவப் பிரிவு உருவாக இட்டுச் சென்றது. கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நடந்த சமூகநீதிப் போராட்டங்கள் அந்த நாடுகளில் பல மாற்றங்களுக்கு அடிகோலின.
வர்க்கப் போராட்டத் தடத்தில்
“இதுவரையில் இருந்துவரும் உலகத்தின் வரலாறே வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான்,” என்றார் கார்ல் மார்க்ஸ். மானுட சமுதாயத்தின் தொடர்ச்சியான விடுதலைப் போராட்டப் பயணத்தில் அடிப்படையான வர்க்கச் சுரண்டலுக்கு முடிவு, பொருளாதார சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாப்பு, சமூகச் சரிநிகர் நிலை, இன ஒடுக்கலிலிருந்து விடுதலை, நாடுகளின் சுதந்திரம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான். ஏன், மொழி உரிமை, கருத்து வெளிப்பாட்டு உரிமை, கருத்தை அறியும் உரிமை, குழந்தைகளின் உரிமை, பாலினப் பாகுபாடின்மை, மாறிய பாலினத்தவருக்கான அங்கீகாரம், ஓர் பாலின ஈர்ப்பாளர்களின் தேர்வுச் சுதந்திரம், மாற்றுத் திறனாளிகளின் ஏற்றம் உள்ளிட்டவையும் இருக்கின்றன. மேனியின் நிற வேற்றுமை சார்ந்த பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும் இலக்கும் இருக்கிறது.
இவற்றைத் தவிர்த்துவிட்டோ, அல்லது இவற்றை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று நிகழ்ச்சி நிரல் வகுத்து வைத்துக்கொண்டோ நடப்பதல்ல வர்க்கப் போராட்டம். நுட்பமாகச் சொல்வதானால், இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வர்க்கப் போராட்டங்கள்தான்.
சமூக உழைப்பைத் தனியார் உறிஞ்சுவது சுரண்டல். ஒரு சமூகமாகவே இன்னொரு சமூகத்தைப் புறந்தள்ளுவது சமூக அநீதி. ஒரு சமூகத்தின் மொழியை, பண்பாட்டு அடையாளத்தை, சுயமரியாதையை அழிப்பதும் அவமதிப்பதும் சமூக அநீதிதான். இதற்கு எதிரான போராட்டத்தில் முதல், இரண்டாவது என்று நிகழ்ச்சிநிரல் தயாரிக்க முடியாது. முதலில் சாதியொழிப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டு வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கலாம் என்றோ, வர்க்கப் போராட்டத்தில் வெற்றிபெற்ற பின் சாதியொழிப்பைக் கையில் எடுப்போம் என்றோ, இப்போது பகுத்தறிவுப் பரப்பியக்கம் அப்புறம் பொருளாதார சமத்துவம் என்றோ, பாலினச் சமநிலையை நிலைநாட்டிவிட்டு பின்னர் மொழியுரிமையைப் பாதுகாப்போம் என்றோ வரிசைப்படுத்த முடியாது. அப்படித் தனித்தனியாகப் பிரிக்கிறவர்கள் மற்ற பிரச்சினைகளுக்கான தீர்வைத் தடுக்கிறார்கள் என்றும் சொல்வேன்.
சரி, எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த போராட்ட இயக்கம் சாத்தியமா? அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை உருவாக்குவது எப்படி? அது எல்லாக் கோரிக்கைகளையும் நீர்த்துப்போகச் செய்துவிடாதா? ஏராளமான இயக்கங்கள், அமைப்புகள் என்று இருக்கிற நிலைமையில் எல்லாப் பிரச்சினைகளுக்குமான ஒரே இயக்கம் சாத்தியமில்லை, இதை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டியதுமில்லை.
ஆனால் ஒருமைப்பாடு சாத்தியம். எடுத்துக்காட்டாக, இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு இயக்கம் நடைபெறுகிறது என்றால், அதில் தொழிற்சங்கத்தினரும் மற்றவர்களும் தங்களுடைய பதாகைகளோடு பங்கேற்கலாமே? தொழிலாளர் உரிமைகள் முழங்கப்படுகிற இடத்தில் பகுத்தறிவாளர்களும் மற்றவர்களும் போய் நிற்கலாமே? சாதி ஆணவக் கொலைகளைக் கண்டித்து நடைபெறுகிற போராட்டத்தில் கருத்துரிமைப் போராளிகளும் மற்றவர்களும் கலந்துகொள்ளலாமே?
இந்தப் பெருங்கனவை விரிக்கிறபோதே, “மற்றவர்களின்” கோரிக்கைக்கு ஆதரவாகத் திரளத் தயாராக இல்லை என்பதோடு, அந்தப் போராட்டங்களுக்கு எதிராகப் போகவும் தயாராக இருக்கிறார்கள் என்ற காட்சியும் கண்ணில் படுகிறது. “ஆண்களுக்கே இன்னும் சம உரிமை கிடைக்கவில்லை, இதிலே பெண்களின் சம உரிமைக்கு எங்கே போவது” என்று கேட்பது அந்தக் காட்சியோடு சேர்ந்ததுதான். ”பெண்களுக்கே இன்னும் முழு உரிமைகள் உறுதியாகவில்லை, இதிலே திருநங்கையர், திருநம்பியர், ஓர்பாலின உறவாளர்கள் இவர்களுடைய உரிமைப் பிரச்சினைகளுக்கு எப்படி முன்னுரிமை கொடுப்பது” என்று கேட்பதும் அதே காட்சிதான்.
(தொடர்ந்து அலசுவோம்...)
முந்தைய கட்டுரை : இன்றைய கேள்வியை அன்றே எழுப்பிய ஏகலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக