சனி, 1 டிசம்பர், 2018

கேரளா உள்ளாட்சி .. இடது ஜனநாயக முன்னணி வெற்றி!..

கேரளா: இடது ஜனநாயக முன்னணி வெற்றி!மின்னம்பலம் : கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 39 இடங்களில் 21 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் கேரளாவில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. எனினும் பாஜகவுக்கு ஆதரவாகப் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை பிரச்சினை மூலம் அங்குத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள
பாஜக தீவிரமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும், பாஜகவின் முயற்சிகளைத் தடுக்கும் விதமாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் , “சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. அது ஒரு போதும் நடக்காது” என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் கடந்த மாதம் கேரளாவில், பத்தனம் திட்டா, பந்தளம், ஆழப்புழா , எர்ணாக்குளம் உட்பட 39 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்திட பாஜகவும், காங்கிரசும் முயற்சி செய்தன.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 30) உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 21 இடங்களைப் பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பாஜக தலைமையிலான கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தது.
குறிப்பாக சபரிமலை விவகாரத்தைக் கையில் எடுத்த பத்தினம் திட்டா, பந்தளம் ஆகிய இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக