வியாழன், 20 டிசம்பர், 2018

மூடிய உறைகளின் வில்லங்கத்தைக் காட்டும் ரபேல் தீர்ப்பு’

savukkuonline.com : “உண்மை நிலைமைகளைக் காணத் தவறிய உச்ச நீதிமன்றம், அரசாங்கம்தன்னை நியாயப்படுத்திய வாதங்களைத்தான் திருப்பிச் சொல்லியிருக்கிறது” என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி.
குறிப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 14) அளித்த தீர்ப்பில், 2015 ஏப்ரலில் நரேந்திர மோடி அரசாங்கம் 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்க முடிவு செய்த விவகாரம் பற்றிய விசாரணைக்கு ஆணையிடக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்குரைஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் ஆகியோரும் உள்ளனர்.
ஏமாற்றமளிக்கும் தீர்ப்புதான், ஆனால் பின்னடைவல்ல. உச்ச நீதிமன்றத்தை நாடியது தவறான முடிவுமல்ல,” என்கிறார் ஷோரி.
ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக உங்களின் பொதுவான எதிர்வினை என்ன?

எனக்கு ஏமாற்றம்தான், அதே வேளையில் திகைப்பாகவும் இருக்கிறது.
திகைப்பாகவா? எப்படி?
ஆம்… “பதிவுகளில் உள்ள பிழைகள்” என்று உச்ச நீதிமன்றமே சொல்கிறது, அதிலிருந்தே நாம் தொடங்குவோம்.
உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?
“எங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற ஆவணம் அரசாங்கம் விமானத்தின் அடிப்படை விலையன்றி, விலை நிர்ணயிக்கப்பட்ட விவரங்களை, விலைநிர்ணய விவரங்களின் கூர்நுட்பங்கள் தேசப்பாதுகாப்பைப்  பாதிக்கக்கூடும், அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாகிவிடும் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கே கூட தெரிவிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனாலும், விலைநிர்ணய விவரங்கள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருடன் (சிஏஜி) பகிரப்பட்டுள்ளன, அவருடைய அறிக்கை பொதுக் கணக்குகள் குழுவால் (பிஏசி) பரிசீலிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் ஒரு சீர்ப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, பொதுத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
சிஏஜி அறிக்கை இல்லை, பிஏசி அறிக்கை இல்லை. சீர்ப்படுத்தப்பட்டோ, படாமலோ எந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை.
‘பொதுத்தளத்தில்’ எந்த அறிக்கையும் இல்லை. ஒரே பக்கத்தில் நான்கு பிழைகள்!
ஒரு சிறு குறுக்கீடு… இப்படிப்பட்ட பெரிய பிழையை நீதிமன்றம் செய்யுமானால் அதற்கு என்ன தீர்வு?
அதற்கு நான் பிறகு வருகிறேன். ஆனால், இவையல்லாம் வெறும் “பிழை” மட்டும்தானா? மையமான விவகாரத்தைப் பொறுத்தவரையில் இது ரொம்பவும் வசதியானது. என்ன செய்யலாம் என்ற கேள்வியைப் பொறுத்தவரையில், உச்ச நீதிமன்றம் முதலில் எடுக்கவேண்டிய அடிப்படையான நடவடிக்கை, இந்தத் “தகவல்” நீதிமன்றத்திற்கு யாரால் தரப்பட்டது என்பதை வெளிப்படுத்தியாக வேண்டும். இப்படித் தொடர்ச்சியான போலிகளை அளித்து நீதமன்றத்தைத் தவறாக இட்டுச்சென்றதற்காகச் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட முறையில் – எப்படிச் சொல்லலாம் என்றால் ‘மூடி முத்திரையிடப்பட்ட உறைகள்” மூலமாகத் தகவல்களைப் பெறுவதில் உள்ள அபாயம் எப்படிப்பட்டது என்பதையும் இது காட்டுகிறது. இப்படியொரு தகவல் திறந்த நிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்குமானால், மற்றவர்களால், நாங்கள் உட்பட, நீதிபதிகளுக்கு உண்மையைச் சுட்டிக்காட்டியிருக்க முடியும்.
உண்மையிலேயே, அந்தப் பத்தியைத் தொடர்ந்து வருகிற வாக்கியம் இதே அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
“விமானப் படைத் தலைவர், ஆயுதங்கள் உள்பட, தேசப்பாதுகாப்பை மோசமாகப் பாதிக்கக்கூடிய விலைநிர்ணய விவரங்களை வெளிப்படுத்துவதில் தனக்குள்ள மாறுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். அவர் “யாரிடம் தெரிவித்தார்” என்று “கூறப்பட்டுள்ளது”?இப்படியான கேள்விகள் இருக்கின்றன.
“கூறப்பட்டுள்ளது” என்றால் யாரால்? பிஏசி அறிக்கை இல்லை என்று இவ்வளவு வெட்கக்கேடான, மன்னிக்கத்தகாத முறையில் நீதிமன்றத்திற்குத் தவறான தகவலளித்த அதே வட்டாரத்தால்தானா? பொய் சொல்வதில் ஈடுஇணையற்ற சாதனை செய்துள்ள அதே அரசாங்கத்தால்தானா?
மனுதாரர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு விமானப் படைத் தலைவரின் கடிதத்தில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது? அந்தக் கடிதம் எந்தத் தேதியில் எழுதப்பட்டது என்று தெரிந்தால்கூட, அது “மூடி முத்திரையிடப்பட்ட உறை” நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு முன் எழுதப்பட்டதா அல்லது அதற்குப் பிறகா என்பதைச் சொல்லிவிடுமே… அந்தச் சாதாரணமான உண்மையில் ஒரு சுவையான கதையே இருக்குமே…
விமானத்தின் ஆயுதங்களைப் பொறுத்தவரையில், அந்த விவரங்களை நாங்கள் கேட்கவே இல்லையே! ஆக, ஒரு வைக்கோல் பொம்மையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் – அடித்துக் கீழே தள்ளுவதற்கென்றே!அந்தக் குப்பையில் விலை நிர்ணய விவகாரத்தை மூடி மறைப்பதற்கென்றே!
இதே போன்ற வேறு முன்னுதாரணங்கள் இருக்கின்றனவா?
பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஆனால், இந்த வழக்கில், இது ஏதோ வெளி வட்டாரம் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக, நிதானமான வார்த்தைகளில் சொல்வதானால், நமது முரண்படும் ஞாபகங்கள் சம்பந்தப்பட்டது இது. அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தம், ஆகவே முன்மொழியப்பட்ட எல்லா நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை என்ற வாதம் எப்படி மானத்தை மறைக்கும் இலை போல இருக்கிறது என்று பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டியிருக்கிறார் (மேற்கத்தியப் புராண ஓவியங்களிலும் சிலைகளிலும் கதாபாத்திரங்கள் தங்கள் அந்தரங்க உறுப்பை சிறிய இலையால் மறைத்திருப்பது போன்ற சித்தரிப்பைப் பார்க்கலாம்). இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தம் என்று வருகிறபோது பின்பற்ற வேண்டிய மூன்று அடிப்படை நடைமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
நீதிபதிகள், “ஆவணத்தை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். விமானப் படை அதிகாரிகளுடன் உரையாடியதன் பலனும் எங்களுக்குக் கிடைத்தது. நீதிமன்றத்தின் பல கேள்விகளுக்கு – கொள்முதல் நடைமுறை, விலை நிர்ணய நடைமுறை உள்பட – அவர்கள் பதிலளித்தார்கள்.நடைமுறை குறித்து உண்மையிலேயே சந்தேகம் கொள்வதற்கான சூழல் எதுவும் இல்லை என்று நாங்கள் திருப்தியடைகிறோம்.சிறிய விலகல்கள் நடந்திருக்குமானால் கூட, அது ஒப்பந்தத்தைத் தள்ளுபடி செய்கிற அளவுக்கோ, நீதிமன்ற விசாரணை தேவை என்கிற அளவுக்கோ இல்லை,” என்று கூறியிருக்கிறார்கள்.
அன்று விசாரணை முழுக்க, குறிப்பாக விமானப் படை அதிகாரிகள் அழைக்கப்பட்டபோது, நான் நீதிமன்றத்தில்தான் இருந்தேன்.அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. முதலாவதாக, 1985க்குப் பிறகு புதிய விமானங்கள் படையில் சேர்க்கப்படுதல் நடைபெறவில்லையா என்ற கேள்வி. அந்நேரம் ஏற்பட்ட சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு – “சேர்க்கப்படுதல்” என்ற வார்த்தையை நீதிமன்றம் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியது என்ற சந்தேகத்தால் அந்தத் தயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன் – அதிகாரி தயங்கித் தயங்கி, ஆம் 1985க்குப் பிறகு எந்த விமானமும் “சேர்க்கப்படுதல்” நடைபெறவில்லை என்று கூறினார். இப்போது, நீதிமன்றம் எந்த அர்த்தத்தில் “சேர்க்கப்படுதல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கும் என்று எனக்கும் புரியவில்லை. ஏனென்றால், (இந்திய அரசாங்க நிறுவனமான) எச்ஏஎல் தயாரிக்கும் சுகோய் போன்ற விமானங்கள் விமானப் படையில் இன்றைக்கும்கூடச் சேர்க்கப்பட்டு வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இரண்டாவது கேள்வி – சொல்லப்போனால் சுகோய் பற்றியதுதான். அதை நான்காவது தலைமுறை விமானம் என்பதா அல்லது “மூன்றரையாவது தலைமுறை” என்பதா? இது இரண்டு மூன்று முறை கேட்கப்பட்டது. அதிகாரி தற்காப்போடு “நான்காவது தலைமுறை” என்று சொன்னார், அப்புறம் கடைசியில் நீதிமன்றம் சொல்லிக்கொண்டிருந்தது போல் “மூன்றரையாவது தலைமுறை அல்லது நான்காவது தலைமுறை” என்று முடித்தார்.
அது விமானப் படை சொல்லிக்கொண்டிருப்பதற்கு நேர் மாறானது.இந்திய விமானப் படை நடத்துகிற விமான அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்படுவதற்கு நேர் மாறானது. ஆனால், இந்த இரணடு கேள்விகளும் பதில்களும் சேர்ந்துதான் ரஃபேல் விமானத்தை வாங்குவதற்கான அவசரத்தேவையை ஏற்படுத்தியிருக்கின்றன, அதற்காக முன்மொழியப்பட்ட நடைமுறைகளை மீற வைத்துள்ளன!
ஆனால், நடைமுறை விஷயத்தில் ஏதேனும் விலகல்கள் இருக்குமானால் அவை “சிறியவைதான்” என்று நீதிமன்றம் சொல்கிறதே…
அது நம்மை, இப்போது நான் மேற்கோள் காட்டிய, நீதிமன்றம் சொன்ன “நடைமுறை குறித்து உண்மையிலேயே சந்தேகம் கொள்வதற்கான சூழல் எதுவும் இல்லை என்று நாங்கள் திருப்தியடைகிறோம். சிறிய விலகல்கள் நடந்திருக்குமானால் கூட, அது ஒப்பந்தத்தைத் தள்ளுபடி செய்கிற அளவுக்கோ, நீதிமன்ற விசாரணை தேவை என்கிற அளவுக்கோ இல்லை,” என்ற வாக்கியத்திற்குக் கொண்டுவருகிறது.
மற்றவர்களுக்காக நான் பேச முடியாதுதான், ஆனால் நாங்கள் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று நிச்சயமாகக் கோரவில்லை. கொஞ்சமும் கோரவில்லை. “நீதிமன்றம் விரிவான பரிசீலனையைச் செய்ய வேண்டும்” என்றும் நாங்கள் கோரவில்லை. நாங்கள் கோரியதெல்லாம், லலிதா குமாரி வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு (அதில் நீதிபதி கோகோய் அங்கம் வகித்தார்) அளித்த தீர்ப்பின்படி இதில் சிபிஐ ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும், உரிய விசாரணையை சிபிஐ நடத்த வேண்டும் என்பதுதான்.
சிபிஐ என்ன நிலைமையில் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, அதன் விசாரணை நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். “நீதிமன்றம் விரிவான விசாரணை செய்ய வேண்டும்” என்பதற்கும் இதற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.
அப்புறம், “சிறிய விலகல்களா”? நிச்சயமாக, இந்த ஆண்டின் மிகக் குறைவான மதிப்பீடு இது. பழைய உடன்பாட்டின்படி விமானப் படைக்கு 126 விமானங்கள் கிடைத்திருக்கும். சிதைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தால், அது விலக்கப்பட்டு, 36 விமானங்களை வைத்துக்கொண்டால் போதும் என்று மாற்றப்படுகிறது. இது பாரிஸ் நகரில் இருந்த பிரதமரால் திடீரென்று செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய உடன்பாட்டைத் தூக்கியெறிந்ததில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதை நாங்கள் விதிவாரியாக, நடவடிக்கைவாரியாக, தேதிவாரியாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், பழைய பேச்சுவார்த்தை “மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியிருந்தது” என்றும், இதர விஷயங்களோடு “அந்தத் தேக்கத்தின் விளைவாக ஆர்.எஃப்.பி.(முன்மொழிவு வேண்டுகோள்) விலக்கிக்கொள்ளப்படுவதற்கான நடைமுறை 2015 மார்ச்சில் தொடங்கப்பட்டது,” என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறதே?
இங்கே இரண்டு துணிபுரைகள்! முதலில், “மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியிருந்தது” என்று சொல்வதை, டஸ்ஸால்ட் நிறுவனத்தின் சிஇஓ அப்போது, இந்திய விமானப் படைத் தலைவர், எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் இருவரின் முன்னிலையில், பேச்சுவார்த்தை “95 சதவீதம்” முடிந்துவிட்டதாகவும், விரைவில் உடன்பாடு இறுதிப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அறிவித்தாரே, அதன் பின்னணியில் எப்படிப் பார்ப்பது?
இரண்டாவதாக, ஆர்.எஃப்.பி.விலக்கலுக்கான நடைமுறை 2015 மார்ச்சில் தொடங்கியது என்ற துணிபுரையைப் பார்க்கலாம். எப்பேற்பட்ட கூற்று!
இந்தக் கூற்று, அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அப்போது கோவாவில் மீன்கள் சம்பந்தமான ஒரு விழாவைத் தொடங்கிவைத்தபோது, பாரிஸ் நகரில் மோடி, ஹோலண்டே இருவரது திடீர் அறிவிப்பு பற்றிக் கேட்டதும் என்ன சொன்னார் என்பதோடு பொருந்துகிறதா?
“இது பிரதமரின் முடிவு, இதை நான் வரவேற்கிறேன்,” என்றார் பாரிக்கர். “பிரதமருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையேயான பேச்சில் இது முடிவாகியிருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.
இதெல்லாம், பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயிருந்தன என்பதோ, 2015 மார்ச்சில் ஆர்.எஃப்.பி.விலக்கல் நடைமுறை தொடங்கியது என்பதோ அவருக்குத் தெரியும் என்று காட்டுகிறதா?
பிளாக் எழுத்தாளர் (நிதியமைச்சர் அருண் ஜேட்லி) சொன்னவையும், நீதிமன்றத்தில் அரசாங்கம் அளித்திருக்கிற வாக்குமூலமும், பாரிஸ்சில் பிரதமரின் திடீர் அறிவிப்புக்குப் பிறகுதான், ஆம் அந்த அறிவிப்புக்குப் பிறகுதான், ஒப்புதல் என்பதாகச் சொல்லப்படுகிற விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
ஆனால் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதே பாதுகாப்பு நடைமுறைக் கொள்கையும் வழிகாட்டல்களும்தானே, தேவை ஏற்படுகிறபோது நடைமுறைகள் மீறப்படலாம் என்று அனுமதிக்கின்றன?
இதைப் பற்றி நீங்கள் கேட்டதில் மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த அளவுக்கு ஒரு விதியைச் சார்ந்திருப்பதன் மூலம் நீதிமன்றம், பிரதமரைப் போலவே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிற எல்லோருக்கும் நற்சான்றிதழ் கொடுக்கிற திசையில் அபாயகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
“ஆயினும் நாங்கள் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் – 2013 (டீபிபி 2013) விதி 75 என்ன சொல்கிறது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். அது இவ்வாறு சொல்கிறது:’75. முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையில் ஏற்படக்கூடிய எந்த விலகலும் டீஏசி (பாதுகாப்பு பெறுதல் குழு) ஒப்புதலுக்காக டீபிபீ (பாதுகாப்பு கொள்முதல் வாரியம்) மூலம் அனுப்பப்படும்‘…”
இந்த விதியும் இதே போன்று இதர வழிகாட்டல்களில் உள்ள விதிகளும் சேர்க்கப்பட்டிருப்பது அவசர நிலைமைகளுக்காகத்தான். கார்கில் பிரச்சினை வருகிறது, உங்களுக்குத் தளவாடங்கள் தேவை, அப்போது நீங்கள் முன்மொழிவுக் கோரிக்கைகள், விலைப்புள்ளிகள், விலைப்புள்ளிகளை மதிப்பிடுவது என்றெல்லாம் போய்க்கொண்டிருக்க முடியாது. நீங்கள் அங்கே உடனடியாக முடிவெடுத்தாக வேண்டும், எங்கேயிருந்து முடியுமோ அங்கேயிருந்து தளவாடங்களைப் பெற்றாக வேண்டும், அதற்குப் பிறகு அந்த முடிவுகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அந்த விதிகள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கப்போகிற விமானங்களுக்கானவை அல்ல. அவற்றை ஒப்படைப்பது என்பதே முடிவெடுத்த தேதியிலிருந்து நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொடங்கும்.
இத்தகைய ஒரு விதியைப் பயன்படுத்துவதன் மூலம் நீதிமன்றம் எடுக்கிற முடிவின்படி பார்ப்போமானால், பதவிகளில் இருககிற ஒவ்வொருவருக்கும் தான் விரும்பியதைச் செய்கிற அனுமதி கிடைக்கும். அப்படிச் செய்த பிறகு, ரப்பர் ஸ்டாம்ப் குத்துகிற அமைப்பு ஒன்றை நாடி தனது செயலுக்கு ஒப்புதல் பெற முடியும்.இந்த டீஏசிகளும் மற்ற கமிட்டிகளும், தற்போதைய பிரதமர் போன்ற ஒரு நபரின் கீழ் ரப்பர் ஸ்டாம்பு குத்துகிற அமைப்புகள்தான்.
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பின் அடிநாதமாக உள்ள தலையாய கவலையை நாம் புறக்கணித்துவிடவில்லையே?மூன்றாண்டுத் தேக்கத்தைக் குறிப்பிட்ட பிறகு இரண்டு விஷயங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒன்று, நமது எதிரிகள் நம்மிடம் இல்லாத 4வது தலைமுறை, 5வது தலைமுறை விமானங்களை வைத்திருக்கிறபோது நாம் தயாரிப்பின்றி அல்லது அரைகுறைத் தயாரிப்போடு இருக்க முடியாது…
முதலில் அந்த முதல் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம் – அதாவது மோடி முக்கியமாகச் செய்திருப்பது என்னவென்றால், நம் நாட்டைக் காப்பதற்கு எது தேவைப்படுகிறதோ அதை நமது விமானப் படை பெற்றிருக்க வைப்பதுதான் என்பது பற்றிப் பார்ப்போம். முதன் முதலில் வைக்கப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கையில் மூன்று நோக்கங்கள் இருந்தன. 126 விமானங்களைப் பெறுவது, முழுமையான தொழில்நுட்பத்தைப் பெறுவது, 18 விமானங்களை மட்டுமே உடனே பறப்பதற்குத் தயாராக உள்ள நிலையில் பெற்றுக்கொண்டு மற்றவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பது. இரண்டாவது, மூன்றாவது நோக்கங்கள் முற்றிலும் தேவையானவை.நம்மிடம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அக்கறை கொள்கிற, நம் எதிரிகள் விடுக்கிற சவாலைச் சந்திப்பதற்கான திறனை ஏற்படுத்திக்கொள்வதற்கான நோக்கங்கள் அவை.126 என்ற எண்ணிக்கையை மோடி 36 என்று வெட்டியிருக்கிறார். தொழில்நுட்பத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டார்.மீதியுள்ள108 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அவர் முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டார். ஆக, அவர் நம்மை முழுக்க முழுக்க அந்நிய வணிகர்களின் தயவில் விட்டுவிட்டார்.
ஆனால், நீதிமன்றம் இன்னொன்றையும் கூறுகிறது: விமானத்தை இந்தியாவில் தயாரிக்க மிக அதிகமான காலம் பிடிக்கும் என்று…
கெடுவாய்ப்பாக, அரசாங்கம் முன்வைத்த ஒரு விளக்கத்தைச் சார்ந்தே நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.அரசாங்கத்தின் விளக்கம் சிரிக்கத்தக்கது. அரசாங்கம் தன்னிடம் சொன்னதைத்தான் நீதிமன்றம் திருப்பிச் சொல்லியிருக்கிறது:
“விமானத்தை இந்தியாவில் தயாரிக்கத் தேவைப்படும் மனித நேரங்கள்: ரஃபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்குத் தேவைப்படும் மனித நேரங்கள், பிரெஞ்சுத் தயாரிப்பாளருக்குத் தேவைப்படுவதை விட 2.7 மடங்கு அதிகம்.”
30 – 40 ஆண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய விமானங்கள் பற்றிப் பரிசீலிக்கிறபோது, ஒரு விமானத்தைத் தயாரிக்க இப்போது எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு தகுதிப் பிரச்சனையாக இருககலாமா?
முதல் கட்டத்தில், விமானங்களைத் தயாரிப்பதற்கான உள்கட்டுமானங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட வேண்டும்தான்.ஆனால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்ள வேண்டுமா? நம் சொந்த முயற்சியிலேயே விமானங்களைத் தயாரிப்பதற்கான உள்கட்டுமானம், தொழில்நுட்பம், திறமை எல்லாமே நம்மிடம் இருக்குமே… விமானங்களைத் தயாரிப்பதற்கான திறன் மட்டுமல்ல, நம் தேவையைப் பொறுத்து விமானத் தயாரிப்பை நம்மால் வேகப்படுத்திக்கொள்ள முடியுமே… அவற்றை நம் சொந்தப் பொறுப்பிலேயே பராமரிக்கிற திறனும் நம்மிடம் இருக்குமே…
மோடி எடுத்த முடிவால் ஏற்பட்டுள்ள நிலைமை என்ன?ஒரு அந்நிய நிறுவனத்தைச் சார்ந்திருக்கிற அபாயம் ஒரு புறமிருக்க, நாம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் – டஸ்ஸால்ட் நிறுவனம் ஏற்கெனவே தனக்கு வந்த விற்பனை ஆணைகளை முடித்துவிட்டுத்தான் நம் தேவையைக் கவனிக்கும். எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு விமானப் படையிடமிருந்து அந்த நிறுவனம் பெற்றிருக்கக்கூடிய விற்பனை ஆணைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை…
எச்ஏஎல் நிறுவனத்தின் தகுதியின்மை பற்றி அரசாங்கம் திடீரென்று சொல்கிறது… மோடி தன்னிச்சையாக எடுத்த முடிவை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இப்படிச் சொல்கிறது, அதை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொள்வது எவ்வளவு வருத்தத்திற்குரிய விஷயம். எச்ஏஎல் முன்னாள் தலைவர் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் .அந்த நிறுவனம் தயாரித்து வந்துள்ள, இன்றும் தயாரித்துக்கொண்டிருக்கிற விமானங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதை எப்படி நீதிமன்றம் ஒப்பிட்டுப்பார்க்கிறது? எச்ஏஎல் இன்று தயாரித்துக்கொண்டிருக்கிற சுகோய் விமானங்களின் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி என்ன நினைக்கிறது?
இந்த ஒப்பந்தம் தொடர்பான உங்கள் விமர்சனத்தின் ஒரு முக்கியமான விஷயம் – விமானத்திற்கு மூன்று மடங்கு விலை தரப்படுகிறது என்பது.இதைப் பற்றி நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?
பிஏசி அறிக்கை இல்லை என்பது பற்றிய புனைவை ஏற்றுக்கொண்ட பிறகு, அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட “விலை விவரங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தோம்” என்று நீதிமன்றம் சொல்கிறது.
அப்புறம், அரசாங்கம் சொன்னதை நீதிமன்றம் திருப்பிச் சொல்கிறது – “விலை விவரங்களின்படி, 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதில் வணிகம் சார்ந்த பலன் இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ எதிர்மனுதாரர்கள் கூறுகிறார்கள் என்பதைச் சொல்வது போதுமானதாகும்,” என்கிறது. “பராமரிப்பு, ஆயுத இணைப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஐஜிஏ-யில் (அரசாங்கக்களுக்கு இடையேயான உடன்பாடு) சில சிறப்பான விதிகள் இருக்கின்றன என்று அதிகாரப்பூர்வ எதிர்மனுதாரர்கள் கூறியிருக்கிறார்கள்” என்றும் நீதிமன்றம் சொல்லியுள்ளது.
அரசாங்கத்தின் விளக்கங்களைத் திருப்பிச் சொன்னதன் மூலமாகவும், எங்களைப் போன்ற மனுதாரர்கள் தாக்கல் செய்த தகவல்களைச் சேர்த்துக்கொள்ளாததன் மூலமாகவும், அதிகாரப்பூர்வ விளக்கங்கள் உண்மைதான் என்ற ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ள நீதிமன்றம், “தற்போதையது போன்ற விஷயங்களில் விலை விவரங்களை ஒப்பிட்டுப்பார்ப்பது இந்த நீதிமன்றத்தின் வேலையல்ல. அது ரகசியத் தளத்தில் வைக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் நாங்கள் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை,” என்று கூறுகிறது.
இப்படியான விளக்கங்கள் தொடர்பாக லத்தீன் மொழியில் ஒரு சொலவடை உண்டு, ஆனால் நீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தால் அதை நான் ரகசியத் தளத்தில் வைத்துக்கொள்கிறேன்!
தீர்ப்பின் வகைவடிவத்தை இது காட்டுவதாக நான் அஞ்சுகிறேன் – எனது கவலை அது மட்டுமே அல்ல. ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.ஒரு முக்கியமான கேள்வி – 126 விமானங்களுக்கான தேவை திடீரென்று 36 என வெட்டப்பட்டது ஏன்?
மூன்றாண்டுத் தேக்கம் பற்றிய புனைவு, நாட்டைத் தயாரிப்பற்ற நிலையில் அல்லது அரைகுறைத் தயாரிப்பு நிலையில் வைத்திருக்க முடியாது என்ற வாதம், ஆகியவற்றை எடுத்துக்கொள்கிற நீதிமன்றம், திடீரென்று “126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டதன் அறிவுடைமை பற்றி எங்களால் மதிப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது” என்று கூறுகிறது. “126 விமானங்களை வாங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை சாத்தியப்பூர்வமாகக் கட்டாயப்படுத்த முடியாது,” என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.ஆனால், 126 விமானங்களைத்தான் வாங்க வேண்டும் என அரசாங்கத்தைக் கட்டயாப்படுத்துமாறு நீதிமன்றத்தை யாராவது கேட்டார்களா?மறுபடியும் கீழே தள்ளுவதற்காக ஒரு வைக்கோல் பொம்மை.
விலை நிர்ணய விவரங்களைப் பரிசீலிப்பது தன் வேலையல்ல என்றும், 126 விமானங்கள் தேவை என்பதை 36 ஆகச் சுருங்ககியது சரியா தவறா என்று மதிப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் சொல்கிறது. அதேவேளையில், அரசாங்கம் செய்ததெல்லாம் சரிதான் என்று சான்றளிப்பது போன்ற கருத்துகளையும், ஏதோவொரு முறையில், கூறுகிறது! சரி, உள்நாட்டுக் கூட்டாளியாக அனில் அம்பானி குழுமங்களைத் தேர்ந்தெடுத்தது பற்றிய மூன்றாவது கேள்வி என்ன ஆனது?
தீர்ப்பின் அந்தப் பகுதி புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கிறது.ஒரு உண்மை கூட, ஒரே ஒரு உண்மை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் நன்னடத்தைச் சான்றிதழ் தரப்படுகிறது! உள்நாட்டுக் கூட்டாளி தொடர்பாகப் பின்னனர் தெளிவாகும், இந்தியாவில் அதற்குத் தகுதியான நிறுவனம் எது என்பதை முடிவு செய்வது முற்றிலும் டஸ்ஸால்ட் பொறுப்புதான் என்று அரசாங்கம் சொன்னதை ஏற்கும் வகையில் திரும்பவும் சொல்கிறது நீதிமன்றம்.
உண்மையில், உள்நாட்டுக் கூட்டாளிக்கான வழிகாட்டல்களின் விதிகள், டஸ்ஸால்ட் தனது உள்நாட்டுக் கூட்டாளியின் பெயரைத் தெரிவிக்க வேண்டும், தனது தொழில்நுட்ப முன்மொழிவைத் தாக்கல் செய்கிறபோதே இந்த வேலையை மேற்கொள்வதில் அந்த நிறுவனத்திற்கு உள்ள தகுதகளை வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. உள்நாட்டுக் கூட்டாளி ஏற்பாடு பற்றி பாதுகாப்புத் தளவாடப் பெறுதல் மேலாளரால் பரிசீலிக்கப்பட வேண்டும், பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சரால் நேரடியாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும், உள்நாட்டுக் கூட்டாளியின் பணிகள் பற்றி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கைகள் அளிக்கப்பட வேண்டும், இந்தப் பணியை அந்தக் கூட்டாளியால் மேற்கொள்ள முடியவில்லை அல்லது அதற்கான தகுதியில்லை என்று கண்டறியப்படுமானால் கூட்டாளியை அரசாங்கம் மாற்ற வேண்டும் என்றும், இன்ன பிற ஏற்பாடுகளையும் வழிகாட்டல் விதிகள் கூறுகின்றன.
இந்த விதிகளில் பெரும்பாலானவை, பின் தேதியிட்ட ஒரு திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டன!அரசாங்கம் தனக்கு எதுவும் தெரியாது என்று பம்முவதற்குத் தோதாகவே பின்தேதியிட்டு இந்தத் திருத்தம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். சொல்லப்போனால், இந்த வெட்கக்கேடான திருத்தத்திற்கு அப்பாற்பட்டு, திருத்தப்படாமல் தப்பித்த மற்ற விதிகளின்படி குறிப்பிட்ட தகுதிகள் உள்நாட்டுக்கூட்டாளிக்கு இருந்தாக வேண்டும், அனில் அம்பானி கம்பெனிகள் எதற்குமே அந்தத் தகுதிகள் இல்லை என்றும் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
பதிவுபூர்வமாகவே முன்வைக்கப்பட்ட எந்தவொரு உண்மையையும் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மேலே போகிறது.
முகேஷ் அம்பானியின் வளமிக்க ரிலையன்ஸையும், அனில் அம்பானியின் கடன்மிக்க ரிலையஸையும் ஒன்றாகப் பார்க்கிறது! எச்ஏஎல் நிறுவனத்தின் மீது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகத்தைத் தானும் திருப்பிச் சொல்வதன் மூலம், அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. “….. ஒப்பந்தம் சார்ந்த சில பொறுப்புகள் இருக்கின்றன, அந்தப் பொறுப்புகளை எச்ஏஎல் நிறைவேற்றுமா என்பதில் டஸ்ஸால்ட்டுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்கிறது, முந்தைய ஒப்பந்தம் முடிவடையாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என அரசாங்கத்தின் கருத்திலிருந்து தெரியவருகிறது,” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இப்படிக் கூறியதன் மூலம், எச்ஏஎல் செயல்திறன் பற்றி டஸ்ஸால்ட் சிஇஓவே சொல்லியிருப்பது குறித்துக் கண்ணை மூடிக்கொள்கிறது, உண்மையில் அந்நேரத்தில் எச்ஏஎல்லுடன் ஒரு பணிப்பகிர்வு உடன்பாட்டை டஸ்ஸால்ட் செய்திருந்தது குறித்தும் கண்ணை மூடிக்கொள்கிறது.
கெடுவாய்ப்பாக, இது ஒரு வழிமுறையாகவே இருக்கிறது. பிரான்சிடமிருந்து ஒரு உயர்மட்ட உத்தரவாதத்தைக் கோர வேண்டும் என்று சட்ட அமைச்சகம் தங்களை வலியுறுத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மாறாக, சட்ட வலிமை ஏதுமற்ற “உறுதிக் கடிதம்” ஒன்றே போதும் என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டுவிட்டது.நாட்டின் நலன்கள் எப்படி கைவிடப்படுகின்றன என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக நீதிமன்றத்திடம் தெரிவித்தோம். இதிலும் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டுவிட்டது
பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியில், அனில் அம்பானி “இந்திய அரசாங்கத்தினுடைய புதிய செய்முறையின் அங்கம்” என்றும், (அதை ஏற்பதைத்தவிர) பிரான்ஸ்சுக்கு “வேறு வழியில்லாமல்” போய்விட்டது என்றும் சொன்னார். அவர் அப்படிச் சொன்னார் என்பதையே நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. “பிரெஞ்சு அதிபர் அப்படியொரு பேட்டி கொடுத்ததாகக் கூறப்படுவதற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்ற அடிப்படையில் அது தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
“எல்லாத் தரப்பிலிருந்தும்?” மூன்று கூட்டாளிகளிடமிருந்து மறுப்பு என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும் – இந்திய அரசாங்கம், டஸ்ஸால்ட், அனில் அம்பானி.
ஹோலண்டே என்னவோ தான் சொன்னதை உறுதிப்படுத்தவே செய்தார்.
இதற்கு என்னதான் தீர்வு? நீங்ளெல்லோருமாகச் சேர்ந்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய முறையீடு செய்வீர்களா? இத்தகைய நிலைமைகளில் என்ன வேண்டியது என்ன?
மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா என்பதில், முக்கியமாக பிரசாந்த் பூஷண் எப்படி இதை மதிப்பிடுகிறார் என்பதன் அடிப்படையில் நாங்கள் வழிகாட்டப்படுவோம்.
இதில் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது: அதே மூன்று நீதிபதிகளிடம்தான் அந்த மனு போகும். ஆனால் என் கண்ணோட்டத்தில் உண்மையான தீர்வு என்பது மாறுபட்டது: இப்படிப்பட்ட தீர்ப்புகளை நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும், அவற்றை ஆராய வேண்டும், நமது ஆராய்ச்சியின் முடிவுகளை விரிவாகப் பரப்ப வேண்டும்.
ஆனாலும் இது இப்போதைக்கு ஒரு பின்னடைவுதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? பின்னோக்கிப் பார்க்கிறபோது, நீதிமன்றத்தை நாடியது பிழையா?
ஆம், தீர்ப்பு ஒரு ஏமாற்றம்தான். (நீதிபதிகள் எடுத்த) முடிவல்ல, அதற்கான காரணங்கள் ஏமாற்றமளிப்பவைதான். ஆனால், “பின்னடைவு”, “தோல்வி” போன்ற சொற்களையும், நாங்கள் நீதிமன்றத்திற்குப் போயிருக்கலாமா கூடாதா என்பதையும் பொறுத்தவரையில், எனக்கு வேறொரு கண்ணோட்டம் இருக்கிறது. உண்மைகள் இவ்வளவு தெளிவாக இருக்கிற நிலையில், நீங்கள் பிரச்சினையை எடுத்துச் செல்கிறீர்கள் – அதாவது நீதிமன்றத்திற்கு – என்றால் இரண்டு முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நீதிமன்றம் உங்கள் வாதங்களை ஒப்புக்கொண்டு உங்கள் கோரிக்கையை ஏற்குமானால், மோசடிக்குச் சமாதிகட்ட நீங்கள் அடுத்த கட்டத்திற்குப் போகலாம். உண்மை நிலவரங்களை ஒதுக்கிவிட்டு நீதிமன்றம் உங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்குமானால், ஒரு வகையில் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை நிறுவுகிறீர்கள்: நமது அமைப்புகளின் நிலைமை என்ன என்பதை மக்கள் பார்ப்பதற்கு மறுபடியும் நீங்கள் வாய்ப்பளிக்கிறீர்கள்.
ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் – விசாரணயில் இருப்பது நாங்கள் மட்டுமே அல்ல, நீதிமன்றமும்தான்!
(பேட்டியில் புதுப்பிப்பு – 2018 டிசம்பர் 16, பகல் 12.30 மணி)
நாம் பேசி முடித்த பிறகு ஒரு புதிய விஷயம் நடந்திருக்கிறது. “திருத்தம் கோரும் மனு” ஒன்றை அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. மூடி முத்திரையிட்ட உறையில் தரப்பட்ட ஆவணத்தில் அரசாங்கம் கூறியிருப்பதை நீதிமன்றம் தவறாகப் படித்துள்ளது என்றும், ஆகவே அந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் தீர்ப்பில் “திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று அரசாங்கம் கோரியிருக்கிறது. முன்னெப்போதும் நடந்திராத இந்த நிகழ்ச்சிப் போக்கு குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
இந்த மனு பிரச்சினைக்கு மேலும் விறுவிறுப்பூட்டுகிறது! முதலில் அந்த ஆவணத்தில் தான் சொல்லியிருப்பது என்ன என்று அரசாங்கம் கூறுகிறது பார்ப்போம். இதுதான் அந்தப் பத்தி:
“அரசாங்கம் விலை நிர்ணய விவரங்களை சிஏஜி–யிடம் பகிர்ந்துள்ளது. சிஏஜி அறிக்கையை பிஏசி பரிசீலித்துள்ளது.அறிக்கையின் ஒரு சீர்ப்படுத்தப்பட்ட வடிவம்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, பொதுத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.”
சிஏஜி இந்த விவகாரத்தைப் பரிசீலித்துள்ளதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று இப்போது அரசாங்கம் சொல்கிறது. சிஏஜி அறிக்கை இருப்பதாக ஒருபோதும் சொல்லவில்லை என்கிறது. பொதுக் கணக்குக் குழு அறிக்கை அளித்திருப்பதாகவும் தான் ஒருபோதும் சொல்லவில்லை என்கிறது.பிஏசி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றோ, பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றோ ஒருபோதும் கூறவில்லை என்றும் அரசாங்கம் சொல்கிறது. சாதாரணமான வழக்கில் என்ன நடக்கிறது என்பதைத்தான் விவரித்திருந்தார்களாம்!
மூன்று விஷயங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன:
முதலாவது – (சிஏஜி) ஆய்வு முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு நீதிபதிகளை வரவைக்கிற விதத்தில் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் இருந்திருக்கலாம்.அல்லது, அவ்வாறு அமைக்கப்பட்டிருந்திருக்கலாம்.அல்லது, நம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளாலும் சாதாரண ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம்.அல்லது, ஒரு நீதிபதி அந்தப் பத்தியைத் “தவறாகப் படித்துவிட்டார்”, மற்ற இருவரும் அவர் சொன்னதை அப்படியே எடுத்துக்கொண்டுவிட்டார்கள் போல.
இரண்டாவது – ஆவணத்தில் இரண்டு இடங்களில் “இருக்கிறது” என்ற சொல் “இருந்துள்ளது” என மாற்றப்பட்டிருப்பது உண்மைதான். இதன் அர்த்தம் என்னவென்றால், உச்ச நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் இருக்கிறார் – ஒருவேளை அவர் நீதிபதிகளுக்கு உதவுகிற அல்லது அடிப்படைவரைவுகளைத் தயாரித்துக்கொடுக்கிற பணியாளர்களில் ஒருவராக இருக்கலாமோ? – அவர் அரசாங்கத்தை விடவும் அரசாங்கத்திற்கு மிகுந்த விசுவாசம் உள்ளவர் போல. இவ்வாறு மாற்றி எழுதப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பதை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியாக வேண்டும்.
ஆனால், கூடுதலாக ஒரு மூன்றாவது விஷயம் இருக்கிறது. அது உண்மையான கதையைச் சொல்கிறது. தீர்ப்பின் தன்மை பற்றி நான் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது. பேட்டியைத் தொடங்கும்போது தீர்ப்பில் உள்ள அந்தப் பத்தியைப் பார்த்தோம் அல்லவா, தயவுசெய்து அதை மறுபடியும் படியுங்கள். இப்போது, அரசாங்கம் நிதிமன்றத்திற்கு அனுப்பியது இதுதான் என்று சொல்கிற பத்தியைப் படியுங்கள். “இருக்கிறது” என்ற சொல் “இருந்துள்ளது” என்று மாற்றப்பட்டிருப்பதற்கு அப்பால், தீர்ப்பில் உள்ள அந்தப் பத்தி ஆகப் பெரும்பாலும் அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அனுப்பியதைத் திருப்பிச் சொல்வதாகத்தான் இருக்கிறது. இது, அரசாங்கம் தன்னிடம் சொன்னது பற்றி நீதிமன்றம் ஏதாவது பரிசீலனை செய்ததாகக் காட்டுகிறதா? அரசாங்கம் சொன்னதைச் சரிபார்ப்பதற்கு ஏதாவது முயற்சி நடந்தாகக் காட்டுகிறதா? நீதிமன்றம் மற்றவர்களிடம் எப்போதும் ஒன்றை எதிர்பார்க்கிறதே – “மனதைச் செலுத்தி ஆராய்வது” என்பதை – அதை நீதிமன்றமே செய்திருப்பதாகக் காட்டுகிறதா? மொத்தத் தீர்ப்பின் தன்மையே இதுதானோ என்று நான் அஞ்சுகிறேன்.
தீர்ப்பின் இந்தத் தன்மைக்கான ஒரு காட்சியை நமக்குத் தந்ததற்காக நாம் அரசாங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் – ‘கட் அன் பேஸ்ட்’ (வெட்டி ஒட்டுதல்) வேலைதான் நடந்திருக்கிறது. அரசாங்கம் சொன்னது திருப்பிச் சொல்லப்பட்டிருக்கிறது – சில இடங்களில் சுருக்கமான வடிவிலும், சில இடங்களில் இதைப் போல சில திருத்தங்களோடும். அது விவகாரத்தை அரசாங்கத்திற்கு மேலும் வசதியானதாக்குகிறது. நாங்கள் முன்வைத்த விவரங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது நான் நமது உரையாடலின் முடிவில் சொன்னதில் ஒரு திருத்தம் செய்துகொள்ளட்டுமா? “விசாரணையில் இருப்பது நாங்கள் மட்டுமல்ல, நீதிமன்றமும்தான் என்று சொன்னேன் அல்லவா? இப்போது நான், “விசாரணையில் இருப்பது நாங்கள் அல்ல நீதிமன்றம்தான்” என்று சொல்கிறேன்.
எம்.கே. வேணு
நன்றி: தி வயர்
https://thewire.in/government/rafale-verdict-shows-us-the-peril-of-sealed-covers-arun-shourie
தமிழில்: அ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக