வெள்ளி, 14 டிசம்பர், 2018

சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!

சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!மின்னம்பலம்: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நேற்று காலை 11 மணி முதல் மாலை 7.30 மணி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகம் என 189 இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். ஐந்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சசிகலாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென, பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு, வருமான வரித் துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், டிசம்பர் 13, 14 தேதிகளில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று (டிசம்பர் 13) காலை வருகை தந்த வீரராகராவ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கினர். சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஐந்து பைகளில் எடுத்து வந்து அவர்கள் விசாரித்தனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையானது 8.30 மணி நேரம் நடைபெற்று மாலை 7.30 மணியளவில் நிறைவுற்றது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சசிகலாவிடம் பல்வேறு கேள்விகளை வருமான வரி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
விசாரணைக்காகச் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் சசிகலாவிடம் விசாரணை தொடரவுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நிய செலாவணி வழக்கு: சசிகலா தரப்புக்கு உத்தரவு
ஜெ.ஜெ. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, அவரது சகோதரி மகன் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதுதொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடும் நடைமுறை பின்பற்றப்படாததால் மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறைத் துறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், காணொளி காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டைப் பதிவு செய்து வழக்கு விசாரணையை நான்கு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர். அதற்கு நீதிபதி, இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் உத்தரவு நகலை நாளை (இன்று) தாக்கல் செய்யும்படி சசிகலா தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்ததும் எந்தத் தேதியில் காணொளி காட்சி மூலம் சசிகலாவிடம் மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக