சனி, 1 டிசம்பர், 2018

திராவிடத்தால் மீண்டோம் . திராவிடத்தால் எழுந்தோம்... நாம் 50 வருடங்கள் முன்னே சென்று கொண்டிருக்கிறோம்

Sumathi Vijayakumar : திராவிடத்தால் வீழ்ந்தோம் . ஆனால் நாம் நினைப்பது
போல் 1967ல் இருந்து வீழவில்லை. அதற்கும் 47 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடத்தால் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்? அந்த வரலாறை ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள் என்பதை அறிய நாம் வரலாறை பின் நோக்கி பார்த்தே ஆக வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பலர் நினைப்பதை போல் ஆங்கிலேய அரசை எதிர்க்க போராட துவங்கப்படவில்லை. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசின் ஆட்சியில் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்த துவங்க பட்ட கட்சி. அதாவது ஆங்கிலேய அரசுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்வது. அதன் பிறகாக இந்தியர்களும் உயர் பதவிகளில் பங்கு பெற்றார்கள். ஆனால் அதில் அநேக பேரும் பார்ப்பனர்களே. பதவிகளில் மட்டுமல்லாது வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்விகளிலும் அவர்களே இருந்தார்கள். குறிப்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியில் பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் பயிலவில்லை. இதனை அடுத்து சசுப்ரமணியம் மற்றும் புருஷோத்தம நாயுடு என்ற இரண்டு வழக்கறிஞர்கள் 1909ஆம் ஆண்டு 'Non - Brahmin Association' என்ற அமைப்பை துவங்கினார்கள். இது தான் திராவிடத்தின் துவக்கம்.

அந்த அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருந்ததின் தொடர்ச்சியால் இரண்டே ஆண்டுகளில் அந்த அமைப்பு முடக்கப்பட்டது. இந்த அமைப்பை எதிர்த்தவர்களில் பாரதியாரும் அடக்கம். அடுத்த ஓரிரு வருடங்களில், அதாவது 1912ல் நடேச முதலியரால் சென்னை ஐக்கிய கழகம் துவங்கப்பட்டு 1912ல் சென்னை திராவிடர் சங்கமாக மாறியது. இதன் நான்கு தூண்களாக கருதப்படுபவர்கள் நடேச முதலியார், T M நாயர், பனகல் அரசர், பிட்டி தியாகராய செட்டியார்.
(இடை குறிப்பு : இதில் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்த வேண்டும். 1.அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உருவாகவில்லை. சென்னை மாகாணம் தான் இருந்தது. அதாவது தற்பொழுதைய தமிழ்நாடு, கேரளா,கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்களின் பகுதிகளும் அடக்கம். 2. எல்லார் பெயரின் கூடவே ஜாதியின் பெயரையும் இணைந்திருப்பதை தெரிந்தே எழுதுகிறேன். பெயருக்கு பின்னலான ஜாதி 1925கு பிறகு தான் மெல்ல மெல்ல உபயோக படுத்துவதை தவிர்த்தார்கள் தமிழர்கள். திராவிடத்தால் நாம் அடைந்த முக்கியமான வீழ்ச்சி)
1916ல் South Indian Liberal Federationஐ துவங்கி மூன்று மொழிகளில் பத்திரிக்கை நடத்தினார்கள். தெலுங்கில் ஆந்திரா பிரகாசிக்கா, தமிழில் திராவிடன் , ஆங்கிலத்தில் justice. இதன் பெயர் காரணமாகத்தான் தேர்தலில் போட்டி இடும் பொழுது நீதி கட்சியாக மாறியது. செய்தி தாள்களில் மட்டுமில்லாமல் சென்னை மாகாணம் எங்கும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். 1919ல் Montagu - Chemlsford reformஐ தொடர்ந்து இந்தியாவில் முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. 98 இடங்களில் 63 இடங்களில் பெரும் வெற்றி பெற்றது நீதி கட்சி. அதாவது முதல் திராவிட ஆட்சி. தமிழகத்தின் முதல் வீழ்ச்சி.
அமைச்சரவைக்கு தலைவராக சர் பிட்டி தியாகராயரை அனைவரும் முன்மொழிய அவர் அதை மறுத்துவிட்டார். நீதிக்கட்சியின் முதன் முதலமைச்சராக சுப்புராயலு பதவி ஏற்று கொண்டார்.1920 துவங்கி 1937 வரை 14 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி புரிந்தது. இடையில் மூன்று ஆண்டுகள் ஸ்வராஜ்ய கட்சியின் ஆட்சி. பனகல் அரசர், குருசாமியை தொடர்ந்து பொப்பிலி அரசர் வரை ஆட்சி நடத்துகிறார்கள். கட்சி உட்பூசலால் அதன் பிறகான தேர்தலில் தோல்வியை தழுவியது.
நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாத அமைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்த சமயம், காங்கிரஸ் அவர்களை வீழ்த்த பார்ப்பனர் அல்லாதவர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. இதன் காரணமாக தான் பெரியாரை காங்கிரஸில் இணைத்தார் ராஜாஜி. 1924ல் காங்கிரஸுடனான கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் தலைவர் பதவியை உதறி தள்ளி வெளியேறி 1925ல் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் பெரியார். பின்னாளில் நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதை திராவிடர் கழகமாக மாற்றினார்.
திராவிட கட்சிகளின் ஆரம்ப புள்ளியாகிய நீதிக்கட்சியின் ஆட்சியில் எப்படி எல்லாம் வீழ்ந்தோம் என்று பார்ப்போம் :
கட்டணம் இல்லாத கட்டாய கல்வி அதிலும் தொடக்க கல்விக்கு முன்னுரிமை . 7 ஆண்டுகளில் 19095 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வியில் அரை கட்டணம். பள்ளர்,பறையர் என்று அழைக்கபட்ட மக்களை இனி ஆதிதிராவிடர் என்று குறிப்பிட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார்கள். எல்லா பள்ளிகளிலும் தனியாக ஒதுக்கிவைக்கப்பட்ட ஆதிதிராவிட குழந்தைகளை, இனி அப்படி ஒதுக்கி வைத்தால் அரசு மானியம் கிடையாது என்று அறிவித்தார்கள். ஆதிதிராவிட நல விடுதிகளை துவங்கி இலவசமாக தங்கி படிக்கும் வசதிகளை செய்து கொடுத்தார்கள்.
மருத்துவம் மட்டுமில்லை தமிழில் முதுகலை பட்டம் பெறக்கூட சமஸ்க்ருதத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி அமைத்தார்கள். அதன் பின்னர் தான் பார்ப்பனர் அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் பலரும் பெரிய அளவில் மருத்துவம் பயில துவங்கினார்கள்.
கர்ம வீரர் காமராஜர் கல்வி கண் திறந்தவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. பெரிய அதிகாரிகள் எல்லாரும் எள்ளி நகையாடிய பொழுதும், மிக பிடிவாதமாய் மத்திய உணவு திட்டத்தை தமிழகமெங்கும் கொண்டு வந்து சாதித்து காட்டியவர். கவனிக்க, தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தவர். ஏன் என்றால் அவருக்கு முன்பே நீதிக்கட்சி சென்னை பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டார்கள்.
இந்தியாவில் முதல் மாகாணமாக சென்னையில் தான் பெண்களுக்கு முதல் வாக்குரிமையை பெற்று தந்தது நீதிக்கட்சி. முதல் சட்டமன்ற உறுப்பினராக முத்துலட்சுமி சென்றார். நீதிக்கட்சியின் ஆட்சியில் தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை, பெண் கல்வி ஊக்கம், வகுப்புரிமை (இட ஒதுக்கீடு), பொது பணி துறை தேர்வாணையம் (TNPSC) என இந்தியாவிற்கு முன்னோடியாய் விளங்கியது நீதிக்கட்சி.
1937கு பிறகு மீண்டும் 1967ல் தமிழகத்தில் நீதிக்கட்சியின் மறு வடிவமான திராவிட கட்சிககள் தொடர்ந்து ஆட்சி புரிகிறது. திராவிடத்தால் வீழ்ந்த தமிழ்நாடு தான் இந்தியாவில் சிறந்து விளங்கும் பல துறைகளிலும் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தையாவது பிடித்துவிடுகிறது. திராவிடம் இல்லையென்றால் இதெல்லாம் நடந்தே இருந்திருக்காதா என்றால் , அப்படி எல்லாம் இல்லை. இப்போதிருக்கும் நிலையை அடைய நாம் இன்னும் 50 வருடங்கள் காத்திருக்க வேண்டும். திராவிட கட்சிகள் அறிமுக படுத்தி வெற்றி கண்ட பல திட்டங்களை இந்தியா இப்பொழுதுதான் மற்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் மற்ற மாநிலங்களை விட (ஒரு சிலவற்றை தவிர) 50 வருடங்கள் முன்னே சென்று கொண்டிருக்கிறோம் என்றால் அது திராவிடத்தால் தான்.
திராவிடத்தால் மீண்டோம் . திராவிடத்தால் எழுந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக