வெள்ளி, 7 டிசம்பர், 2018

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!
மின்னம்பலம் :ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ்
டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடிக்கலாம். சத்தீஸ்கரில் பாஜக - 46, காங்கிரஸ் - 35, பகுஜன் சமாஜ் கூட்டணி - 7, மற்றவை - 2 என்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமையும். தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் - 66, காங்கிரஸ் கூட்டணி - 37, பாஜக - 7, மற்றவை - 2 என்றும் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக- 85, காங்கிரஸ் கூட்டணி - 105, பகுஜன் சமாஜ் கூட்டணி - 2, மற்றவை – 7 என்ற வகையில் அமையும் என்று கணித்திருக்கிறது டைம்ஸ் நவ்.
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இண்டியா

இந்தியா டுடே, ஆக்சிஸ்ட் மை இண்டியா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பில் வேறு மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளன.
அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் 55 முதல் 65 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், பாஜக 21 முதல் 31 இடங்கள் பிடித்து ஆட்சியை இழக்கும் என்றும் கூறியுள்ளது இந்தியா டுடே. .
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது என்று கணிக்கிறது இந்தியா டுடே. இதன்படி ம.பி.யில் காங்கிரஸ் 104 முதல் 122 இடங்களைப் பெறக் கூடும் என்றும், பாஜக 102 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றக் கூடும் என்றும் தெரிகிறது. ம.பி.யில் தனியாக நின்ற பகுஜசன் சமாஜ் கட்சி மூன்று இடங்கள் வரைப் பிடிக்கலாம் என்கிறது இந்தியா டுடே.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை டைம்ஸ் நவ் போலவே காங்கிரஸே ஆட்சியைப் பிடிக்கும் என்றே இந்தியா டுடே வாக்குக் கணிப்பும் தெரிவிக்கிறது. இதன்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 119 முதல் 141 இடங்களைப் பிடிக்கும் எனவும், பாஜக 55 முதல் 72 வரை பிடித்து ஆட்சியை இழக்கும் எனவும், இந்தியா டுடே வாக்குக் கணிப்பு தெரிவிக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தியா டுடே வாக்குக் கணிப்பு கூறுகிறது. டி.ஆர்.எஸ். 71 முதல் 93 இடங்கள் வரை பிடித்து ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், காங்கிரஸ் 33 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
மிசோரத்தைப் பொறுத்தவரை ஆளும் மிசோரம்தேசிய முன்னணிக்கே மீண்டும் வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக