ஞாயிறு, 30 டிசம்பர், 2018

எகிப்து பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதல் : பதில் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் உயிரிழப்பு


BBC :எகிப்தில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் அவர்களின் பதுங்கிடங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் போலீசாரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலையில் கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் சுற்றுலா தலங்கள், தேவாலயங்கள் மற்றும் ராணுவ அலுவலகங்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று கிஸா பிரமிட் வளாக பகுதியில் ஒரு சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து மேற்கூறிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இதுவரை கிஸா பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை இந்த தாக்குதலில் வியட்நாமை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக கிஸாவில் அதிகாலையில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த உள்துறை அமைச்சகம், மேலும் 10 பேர் வடக்கு சினாய் மாகாணத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் இறந்ததாக கூறினர்.
எகிப்தின் பொருளாதாரத்தை பாதிக்கும் தீவிரவாதம்
எகிப்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பெரும்பங்கு வகித்து வருகிறது. 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டிற்கு மிக அதிகமாக 14 மில்லியன் சுற்றுலாவாசிகள் வருகை புரிந்தனர். ஆனால், அதன்பிறகு அரபு உலகில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல அரசு கவிழ்ப்புகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை தொடர்ந்து எகிப்தில் சுற்றுலாத்துறை நலிவடைய தொடங்கியது.
2015-ஆம் ஆண்டில் எகிப்து நகரம் ஒன்றை விட்டு கிளம்பிய ரஷ்ய பயணிகள் ஜெட் விமானம் ஒன்றின் மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு 224 பேர் இறந்தனர்
இதற்கு அடுத்த ஆண்டு 5 மில்லியன் சுற்றுலாவாசிகள் மட்டுமே அந்நாட்டுக்கு வந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக