புதன், 5 டிசம்பர், 2018

சபரிமலை பாஜகவின் வழக்கு தள்ளுபடி ...25 ஆயிரம் ரூபாய் அபராதம்

சபரிமலை: பாஜக தலைவரின் மனு தள்ளுபடி!மின்னம்பலம் : சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அங்கு பாஜக அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்படி போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய் வழக்கு தொடருவதாக போலீஸாருக்கு எதிராக பாஜக தலைவர் ஷோபா சுரேந்திரன் தொடர்ந்த வழக்கானது கேரள உயர் நீதிமன்றத்தினால் இன்று (டிச-4) தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அவர் வழக்கு செலவினங்களுக்காக 25,000 ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக. கேரள உயர்நீதிமன்றத்தில் ஷோபா சுரேந்திரன் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ஷோபா தனது மனுவில், உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் அனுமதி அளித்ததை எதிர்த்து ஐயயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப்போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான வழக்குகளை தொடருகிறார்கள். அவர்களை யாரும் கேட்க முடியாது என்ற அதிகார தோரணையில் நடந்து கொள்கிறார்கள். ஒரு ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி உயர் நீதிமன்ற நீதிபதியையே துணிச்சலாக கேள்வி கேட்கிறார். எனவே போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடந்த 2014லிருந்து போலீஸார் தொடர்ந்த வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் அந்த வழக்குகளை விசாரி்த்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் அளிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். மேலும் அந்த வழக்குகளை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று கண்டனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மனுதாரா் ஷோபா மன்னிப்புக் கோரினார். அவரின் மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரைக் கண்டித்ததோடு, வழக்குச் செலவினங்களுக்காக 25,000 ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக