செவ்வாய், 11 டிசம்பர், 2018

21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் இணைந்து செயல்பட முடிவு

ஸ்பெல்கோ :அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தின.
இதில், சிபிஐ, ஆர்பிஐ ஆகிய அமைப்புகளை சீர்குலைக்கும் பாஜ அரசுக்கு கண்டனம் தெரிவித்த கட்சி தலைவர்கள், இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் சேர்க்க ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவரது ஏற்பாட்டின் கீழ், எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்திரபாபு நாயுடு தனித்தனியாக சந்தித்து பேசினார்.
பின்னர் மாலை 4 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைப்பதற்கான எதிர்க்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து மாபெரும் சக்தியாக உருவெடுக்க இக்கூட்டம் முதல்படியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதித்தனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இதில் அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய விஷயங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின.
ரபேல் போர் விமானம் மெகா ஊழல் , விவசாயிகள் பிரச்னை, சரியும் பொருளாதாரம் சமீப நாட்களாக அதிகரித்து வருவது உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா விவகாரமும் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த ராகுல் காந்தி, ‘‘பாஜ, ஆர்எஸ்எஸ்சின் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னரே செயல்பட முடியாமல் ராஜினாமா செய்துள்ளார். சட்ட அமைப்புகள் சீர்குலைக்கப்படுகின்றன. பாஜ ஆட்சியில் சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றவர்.,
நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், உள்ளேயும் இந்த கூட்டணி இணைந்து செயல்படும்’’ என்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘எங்களின் எதிர்கால செயல்திட்டம் குறித்து திட்டமிடப்படும். இன்றைய கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. ‘இந்தியாவை காப்போம்; ஜனநாயகத்தை காப்போம்’ என்பதே இக்கூட்டத்தின் கோட்பாடாகும். ஜனநாயகத்தின் கட்டாயத்தால் நாம் ஒன்றிணைவது அவசியமாகி உள்ளது’’ என்றார்.
மம்தா பானர்ஜி கூறுகையில், ‘சிபிஐ, ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. இது முன்எப்போதும் நடந்திராத ஒன்று. அதை நாம் நிச்சயம் காக்க வேண்டும். அரசு அமைப்புகளின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்’’ என்றார்.
இதுவரை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகளுடன் எந்த கூட்டத்திலும் இணைந்து பங்கேற்றதில்லை. அக்கட்சி முதல் முறையாக எதிர்க்கட்சிகளுடன் நேற்று கைகோர்த்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் அழைத்ததின் பேரில் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதேபோல, பாஜ கூட்டணியில் இருந்து நேற்று விலகிய பீகாரின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான உபேந்திரா குஷ்வாகா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவு இன்று வெளியிடப்பட உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரும் தொடங்க உள்ள நிலையில், 21 எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பகிர்வுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக