ஞாயிறு, 25 நவம்பர், 2018

மதுரையில் தமிழ் பேசும் ரஷ்ய பெண் விளாதிமிர்ரொவ்னா kravets zoya vladimirovna

என்.சன்னாசி tamilthehindu : மதுரை
மண்ணுக்குச் சிறிதும் தொடர்பில்லாத
முகம்,  ஆனால் இன்று மதுரையின் மருமகள்!   அப்படிச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம்கொள்கிறார் கிராவட்ஸ் ஜோயா விளாதிமிர்ரொவ்னா. தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுத் தமிழரை மணந்து கொண்டவர் இவர்.
ஜோயா, மேலூரில் கணவர் மணவாளனுடன் வசிக்கிறார். இவர்களது மகன் பிரின்ஸ், மகள் விக்டோரியா இருவரும் ரஷ்ய நாட்டின் கல்வி உதவித்தொகையைப் பெற்று மருத்துவம் பயில்கின்றனர். ரஷ்ய தூதரகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் கலாச்சார மைய ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஜோயா.
இங்கிருப்பவர்களுக்கு ரஷ்ய மொழியைக் கற்றுத்தருவதோடு, ரஷ்யாவில் உயர் கல்வி பயிலவும் அந்நாட்டில் வேலை கிடைக்கவும் வழிகாட்டுகிறார். ஜோயா மேடையேறி மைக் பிடித்துப் பேசினால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தன்னம்பிக்கைப் பேச்சு மடைதிறந்த வெள்ளமெனப் பாயும்.

இந்தியா மீது ஈர்ப்பு
ஜோயாவுக்கு இந்தியாவும் தமிழும் அறிமுகமானது தனிக் கதை. பத்து வயதில் இந்தியப் படங்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை இந்தியாவின் ராணி எனப் பேசக் கேட்டிருக்கிறார். பகவத்கீதை, மகாபாரதம், ரவீந்திரநாத் தாகூர், ஆர்.கே.நாராயணன், புதுமைப்பித்தன் என இவரது வாசிப்புப் பட்டியல் நீண்டது.
தமிழ் எழுத்தாளர்களின் கதைகளைப் படித்துத் தென்னிந்தியப் பண்பாடு குறித்துத் தெரிந்துகொண்டார். அந்தத் தூண்டுதலால் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலமாக இருக்க, தூதரக வேலைக்கு முயன்றார். அதற்காக ரஷ்ய பல்கலை.யில் படித்தபோது, 17-வது வயதில் மதுரை மேலூர் லட்சுமிபுரம் சொக்கரீஸ்வரி என்பவரது நட்பு கிடைத்தது. இந்திய, தமிழ் கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ளும் ஜோயாவின் ஆர்வம் அவர்கள் இருவருக்குமான நட்பை வலுப்படுத்தியது.
ரஷ்ய நாட்டுத் தோழியைத் தங்கள் ஊர் மருமகளாக்கிக்கொள்ள சொக்கரீஸ்வரி விரும்பினார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த தன் சகோதரர் மணவாளன் பற்றி ஜோயாவிடம் கூறினார்.  “என்னை அவருக்குத் திருமணம் செய்துவைக்க, எனக்கே தெரியாமல் என் பெற்றோரிடம் சொக்கரீஸ்வரி பேசினார்.
அப்போது ஒரு மாதப் பயணமாகத் தமிழகம் வந்தேன். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தேன். மேலூர் லட்சுமிபுரத்தில் பத்து நாட்கள் தங்கினேன். கிராமத்துப் பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு ரஷ்யா திரும்பினேன்” என்று சொல்லும் ஜோயா, தனது படிப்பு முடிந்ததும் சொக்கரீஸ்வரியின் சகோதரரை மணந்துகொள்ள முடிவெடுத்து மேலூர் வந்தார். இருதரப்புப் பெற்றோர் சம்மதத்தின் பேரில் புதுக்கோட்டையில் 1993-ல் சிறப்புத் திருமணச் சட்டப்படி திருமணம் நடந்தது.
“என் மூத்த நாத்தனாரின் மூன்று வயது மகளிடமும் லட்சுமிபுரத்திலுள்ள குழந்தைகளிடமும் தமிழ் பேசக் கற்றேன். அவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்றுத்தந்தேன். லட்சுமிபுரம் மருமகளாகவே மாறினேன்” என்று புன்னகைக்கிறார் ஜோயா.
மொழிப் பயிற்சி மையம்
புகுந்த மண்ணில் பிறருக்குப் பயன்படும் வகையில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என ஜோயா நினைத்தார். மதுரை உட்பட தென்மாவட்டத்தினர் ரஷ்ய மொழியைக் கற்க சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு செல்வதைத் தவிர்க்க, ரஷ்யத் தூதரக உதவியோடு மதுரையில் ரஷ்ய மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2012-ல் மதுரை லீசாட்லியர் மெட்ரிக் பள்ளியில் ‘ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம்’ தொடங்கி, அதன்மூலம் ரஷ்ய மொழிப் பயிற்சி அளித்துவருகிறார்.
“இங்கே மாணவ மாணவியர் மட்டுமின்றி 13 வயது முதல் தொடங்கி அனைவருக்கும் பயிற்சி தருகிறோம். சில தனியார் நிறுவனங்களில் இருந்து வருவோருக்கும் பயிற்சி அளிக்கிறோம். தூதரகம் மூலம் சான்றிதழும் வழங்குகிறோம். ரஷ்யாவில் மருத்துவக் கல்வி, வேலைவாய்ப்பு, கலை கலாச்சாரப் பயணத்துக்கும் உதவுகிறோம்.
ஆங்கிலத்தைவிட ரஷ்ய மொழியைக் கற்பது எளிது. 60 மணி நேரம் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான பயிற்சிகளை அளிக்கிறோம். பள்ளிப் பருவத்திலேயே ரஷ்ய மொழியைக் கற்ற சிலர் அந்நாட்டில் உதவித்தொகையுடன் மருத்துவம், உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்று சொல்லும் ஜோயா ஐ.நா. சபையின் மூலம் சுகாதாரப் பணிகளை எடுத்துச் செய்யும் கனவுத் திட்டங்களை லட்சியமாகக் கொண்டுள்ளார்.
படம்: ஆர்.அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக