ஞாயிறு, 18 நவம்பர், 2018

கஜா ... குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் அவதி: டெல்டா மாவட்டங்களில் மக்கள் கடும் கோபம் .. போராட்டம் வலுக்கிறது

குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் அவதி: டெல்டா மாவட்டங்களில் கிராம மக்கள் போராட்டம் வலுக்கிறது
அமைச்சர் மணியனின் காரை அடித்து நொறுக்கிய மக்கள்
மாலைமலர் : மரங்கள் முறிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே கிராம மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிராம்பட்டினம் பகுதியில் அதிகாரிகள் வந்து நிவாரண உதவிகள் வழங்காததால் மக்கள் மறியல் செய்தபோது எடுத்த படம்</ நாகப்பட்டினம்: வங்க கடலில் உருவான கஜா புயல் நேற்றுமுன்தினம் அதிகாலை நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையை கரையை கடந்தது. கஜா புயல் 120 கிலோ மீட்டர் பலத்த காற்றுடன் வீசியதால் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு சென்றது. குறிப்பாக நாகை, வேதாரண்யம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. மேலும் தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலைக்கொடி, சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமானது. மேலும் செல்போன் டவர்கள் விழுந்து சேதமானதில் தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்ததால் டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் கிடக்கிறது.


கஜா புயலால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரோட்டில் வசிக்கும் நிலை உள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுமார் 90 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் எதுவுமே கிடைக்காததால் கிராம மக்கள் அதிகளவில் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் கிராமங்களுக்கு செல்லும் எல்லா வழிகளிலும் மரங்கள் முறிந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே கிராம மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக நாகை, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், விழுந்தமாவடி, திருவோணம், மன்னார்குடி ஆகிய இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகை சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாகை பகுதியில் உள்ள அன்னை சத்யா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் இவர்களுக்கு உணவு, குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என கிராம மக்கள் கூறினர்.

இந்த நிலையில் உணவு, குடிநீர் கிடைக்காத விரக்தியில் மீனவ கிராம மக்கள் நாகை- காரைக்கால் சாலையில் தெற்குபால் பண்ணைச்சேரி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் தாலுகாவில் 54 ஊராட்சிகளில் 60 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காஜ புயலால் சுமார் 25 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனி தீவுபோல் காட்சியளிக்கும் வேதாரண்யத்தில் இன்று வரை எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் குடிநீர், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். குழந்தைகளும், பெண்களும் பட்டினியால் தவித்து வருகின்றனர். மேலும் விறகுகளும் ஈரமாக இருப்பதால் சமையல் செய்யவும் வழியில்லாமல் உள்ளனர்.


நாகை-  காரைக்கால் சாலையில் மீனவ கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்

வேதாரண்யம், வேட்டை காரனிருப்பு, தலைஞாயிறு, வானவன் மகாதேவி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் நடப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. மேலும் சாப்பாடு இல்லாமல் பசி பட்டினியால் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். எந்த உதவியும் கிடைக்காமல் கடந்த 3 நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். கடும் குளிரிலும் சாலைகளிலும் படுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

பட்டுக்கோட்டை நகரில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் 3-வது நாளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டையில்தான் கஜா புயலால் சேதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக 4 லட்சத்தும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதேபோல் அதிராம் பட்டினம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரூராட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ எந்த உதவியும் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் மீனவ கிராம மக்கள் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மேலப்பாலம் பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களும் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மேலப்பாலம் அருகே கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை சேதமாகி உள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நாகை, திருவாரூர், தஞ்சை மாவட் டங்களில் எங்கு பார்த்தாலும் திடீரென மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீட்பு பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்தாலும், அதிகமாக பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். சில இடங்களில் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தும் நிலையும் இருந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக