வியாழன், 29 நவம்பர், 2018

சமூகப் புரட்சியாளர் - மகாத்மா ஜோதிபா பூலே மராட்டிய பார்ப்பனர்களுக்கு எதிராக போர்க்கொடி....

க.ம. மணிவண்ணன் : மராட்டிய மண்ணில் தீண்டத் தகாதவர்களுக்காகவும்,
பெண்களுக்காகவும் முதலில் செயல்வடிவப் போராட்டத்தைத் தொடங்கியவர் ஜோதிபா பூலேதான். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்ற அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியக் களம் புகுந்தவர் பூலே.
முதன்முதலில் சனாதனிகள் கொடி கட்டிப் பறந்த பூனேவில், சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து அதற்கு சவால் விடுவதுபோல் அடித்தள மக்களுக்கும், பெண்களுக்கும் பள்ளியைத் திறந்தவர் பூலே. சமூக சமத்துவம், நீதி, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக ஒழுங்கை நிறுவச்செய்வதே அவரது இலட்சியமாக இருந்தது.
ஜோதிபா பூலேவின் காலச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் அவரது பணி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அது பேஷ்வாக்கள் ஆட்சி செய்த காலம், மக்கள் அனைத்து தார்மீக நெறிகளையும் இழந்து நின்றனர்.
சித்பவன் பார்ப்பனர்களே அனைத்துப் பதவிகளையும் பிடித்துக் கொண்டனர். பிற சாதியினர் அமர்த்தப்பட்டிருந்தாலும், எவ்வளவு திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருந்தாலும், சூழ்ச்சியால் விரட்டப்பட்டனர்.
அறநெறியில் ஒரு தேக்கம்,கலாச்சாரத்தில் ஒரு சீரழிவு, மதவிசயங்களில் ஒரு இறுக்கம். அறிவு, உழைப்பு ஆகிய செயல்பாடுகளில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியானது வீழ்ச்சியையும், சீரழிவையும் கொண்டு வந்தது. இதுவே அன்றைய நிலை.

ஜோதிபா பூலே வாழ்க்கைப்பாதையை மாற்றியது அவர் கலந்து கொண்ட ஒரு பார்ப்பனத் திருமணம். அதில் அவர் அழைக்கப்பட்டே கலந்து கொண்டிருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கடுமையாக அவமதிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். இந்தச் சமூக இழிவுக்கெதிராகக் கலகம் செய்யவும், அடிமைச் சங்கிலியை உடைக்கவும், மதத்தின் பெயரால் வளர்க்கப்பட்டு, இந்துச் சமூகத்தின் மீது மோசமான பாதிப்புக்களை செலுத்தி வந்த கீழ்த்தரமான தீய ஒழுக்கங்களுக்கு எதிராகப் போராடவும் ஜோதிபா பூலே உறுதி பூண்டார். மாட்டு வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்டது எப்படி அண்ணல் அம்பேத்காரை உருவாக்கியதோ, அதேபோல் மகாத்மா ஜோதிபா பூலேவை உருவாக்கியது இந்த அவமதிப்பு.
ஜோதிபா மராட்டியத்தில் சமூக சீர்திருத்தப் பணியைத் தொடங்கினார். பெண்கள் படிக்கவே கூடாது என்ற சனாதன தர்மத்தை உடைத்து முதன்முதலில் பெண்கள் பள்ளியை அமைத்தார் ஜோதிபா. தமது மனைவி சாவித்திரிபாய் பூலேவுக்குக் கல்வி கற்பித்து அவரையே ஆசிரியராகவும் ஆக்கினார். பொது வேலைகளுக்கு வரும் இந்தியப் பெண்களுக்கு சாவித்திரிபாய் முன்னோடி. இதற்கெதிராக சனாதனிகள் தாக்குதல் தொடுத்தனர். சாவித்திரிபாய் தெருவில் நடக்கும்போது கற்களாலும், சேற்றாலும் தாக்கப்பட்டார். அமைதியாகப் பொறுத்துக் கொண்ட அவர் தனது கணவரின் கொள்கையை சிறிதும் கைவிடாது உடன் பணியாற்றினார். ஜோதிபாவை சிறிதும் அசைக்க முடியாத சனாதனிகள் அவரது தந்தையை மிரட்டி அவரையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்ற வைத்து விட்டனர். ஆறு மாதங்கள் மட்டுமே அவரால் பள்ளியை நடத்த முடிந்தது. எனினும் தளராத அவர் சிறிது நிலைமை மேம்பட்டதும் தம் நண்பர் சதாசிவ கோவந்தே கொடுத்த இடத்தில் மீண்டும் பள்ளியைத் தொடங்கி விட்டார். மிகச்சிறந்த பெயரை இந்தப்பள்ளி பெற்றது.
பூலே செய்த இன்னொரு செயல் வார்த்தைகளால் பாராட்ட இயலாதது. அவர் தாழ்த்தப்பட்டவர்கள்மேல் மட்டும் தனது கருணையைக் காட்டவில்லை. அனைத்து சாதியினரும், பார்ப்பனர்கள் உட்பட சகோதரர்களாகவே கருதி வந்தார். அந்தக் காலத்தில் பார்ப்பன விதவைப் பெண்கள் கடும் துன்பத்தில் உழன்றனர். அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வீட்டுக்குள் அடைக்கப்பட்டனர். சிலரது காம விளையாட்டுக்களில் சிக்கி சின்னாபின்னமாயினர். எனவே அவர்கள் யாருக்கும் தெரியாமல் பிள்ளை பெற்று விட்டுச் செல்வது வழக்கமாகிப் போனது. பார்த்தார் ஜோதிபா. தன் பொறுப்பிலேயே ஒரு அமைப்பைத் தொடங்கி, இது போல் வழியற்று வரும் பார்ப்பனப் பெண்களை தம் வீட்டிலேயே வந்து தங்கிப் பிள்ளை பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்ல, இப்படி ஒரு பார்ப்பனப் பெண் பெற்றெடுத்த பிள்ளையைத் தன் பிள்ளையாக தத்தெடுத்து வாரிசாக்கிக் கொண்டார்.
விதவைகளாகும் பார்ப்பனப் பெண்களுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்ற உன்னத லட்சியத்தை முன்வைத்து நாவிதர்களின் உதவியுடன் பெரும் போராட்டத்தைத் தூண்டி அதற்கும் பெருமளவில் மராட்டியத்தில் முடிவு கட்டினார் ஜோதிபா.
உண்மை நாடுவோர் சங்கம் என்ற சங்கத்தை அமைத்து அதன் மூலம் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொண்டு பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார் ஜோதிபா. அவரைப் பின்பற்றி ஏராளமானோர் அவரது சீடர்களாயினர். அவரது இயக்கம் மராட்டியத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. பூனே நகராட்சி உறுப்பினராக பூலே சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
“மகாத்மா” என்ற பட்டத்தை முதலில் பெற்றவர் ஜோதிபா. ஆனால் அதை அவரது அறுபதாவது பிறந்தநாளில் ஆயிரக்கணக்கில் கூடி “மக்களே அளித்தனர்” என்பதில்தான் அவரது மேன்மை அடங்கியுள்ளது. சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும் என்ற கோஷம் பூலேவால் உபயோகிப்பட்டதேயாகும்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகவும், தம் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணித்தவருமான மகாத்மா பூலேவின் சமூகப் புரட்சியை நினைவில் ஏற்றுவோம்.
க.ம.மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக