வெள்ளி, 23 நவம்பர், 2018

நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!

நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!மின்னம்பலம் : நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடன் இருந்த ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். மிக மோசமான கொலைத் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண்ணும் அவரது நண்பரும், அந்த நபர்களால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
அடுத்த நாள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொடூரமான முறையில் அந்த பெண் தாக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்குச் சிகிச்சை அளிப்பதால் மருத்துவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி, நாடெங்கும் பலத்த அதிர்வை உண்டாக்கியது.
நிர்பயா எனும் பெயர்
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதால் அவரது மாண்பு சிதையக்கூடாது எனும் நோக்கில், அந்த பெண் டாமினி, அமானத், நிர்பயா என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார். நிர்பயா எனும் பெயர் நாடெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய்குமார் சிங் தாகூர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். 2013 மார்ச் 11ஆம் தேதி, ராம்சிங் திகார் சிறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டார். 2015 டிசம்பர் 20 அன்று விடுதலை செய்யப்பட்டார். இவர், அரசு சாரா அமைப்பொன்றில் ஒப்படைக்கப்பட்டார்.
உறுதி செய்யப்பட்ட தண்டனை
இந்த வழக்கில், 2013 செப்டம்பர் 13ஆம் தேதியன்று கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நான்கு பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 2014ஆம் ஆண்டு அதனைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. 2017 மே 5ஆம் தேதியன்று, கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் நான்கு குற்றவாளிகளுக்கும் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். கடந்த ஜூலை மாதம், இதனை மீண்டும் உறுதிப்படுத்தியது.

தண்டனை வழங்காதது ஏன்?
தண்டனையை உறுதி செய்தபின்னரும், நான்கு குற்றவாளிகளுக்கும் இதுவரை மரண தண்டனை வழங்கப்படவில்லை. இதனைக் குறிப்பிட்டு, நேற்று (நவம்பர் 22) உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார் வழக்கறிஞர் அலாஹ் அலோக் ஸ்ரீவஸ்தவா.
“மூன்று குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு நான்கரை மாதங்கள் ஆன பின்பும், இதுவரை அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு விதிக்கப்பட்டவருக்கு 8 மாத காலத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனை வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதமானது, மோசமான முன்னுதாரணமாகி விடும். இதனால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகமாகி வருகிறது” என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழமை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பின்னரும் தண்டனையைச் செயல்படுத்தாமல் இருப்பது, இதுபோன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டால் நாமும் தண்டனை பெறுவதில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தை பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவர்களிடையே தோற்றுவிக்கும் என்று அலோக் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்
“கீழமை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, எட்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் முறையீடு, மேல் முறையீடு, பகுப்பாய்வு, உச்ச நீதிமன்ற முறையீடு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு உள்ளிட்ட செயல்முறைகள் இந்த எட்டு மாத காலத்துக்குள் நடைபெறுமாறு உத்தரவிட வேண்டும்” என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் பதிவு அதிகரிப்பு
நிர்பயா வழக்கு பதிவான பின்னர், தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தாக்குதல்கள் குறித்த குற்றங்களைப் பதிவு செய்வது அதிகமாகியுள்ளது. இது குறித்து லைவ்மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 2012-13 காலகட்டத்தில் பாலியல் வல்லுறவு குறித்த குற்றப் பதிவுகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. தாக்குதல்களைப் பொறுத்தவரை, இது 58 சதவிகிதம் அதிகம். பாலியல் வல்லுறவு தவிர்த்து பாலியல் சீண்டல், பாலியல் செய்கையினால் அவமதிப்பது, உறவு கொள்ளும் நோக்கில் தாக்குவது போன்றவையும் இதில் அடங்கும்.
2013ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வுப்படி, டெல்லியிலுள்ள ஒரு லட்சம் பெண்களில் 43 பெண்கள் இதுபோன்ற துன்பத்துக்கு ஆளாவது தெரிய வந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 18 ஆக இருந்தது. நிர்பயா வழக்கானது டெல்லி மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 4, 3, 7, 3, 3, 7 பெண்கள் இப்பாதிப்புக்கு ஆளாகினர். 2012ஆம் ஆண்டு வெளியான கணக்கீடு இது. 2013ஆம் ஆண்டு குற்றப் பதிவுகளின்படி, ஹரியானாவில் 12, பஞ்சாப்பில் 8, ராஜஸ்தானில் 14, உத்தரப் பிரதேசத்தில் 7, உத்தராகண்டில் 6, இமாச்சலப் பிரதேசத்தில் 14 பெண்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
நிர்பயா வழக்கு பதிவானதால் ஏற்பட்ட மாற்றம் இது என்று பெண்கள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக