செவ்வாய், 27 நவம்பர், 2018

நேருவின் மீது மோடி எறியும் பாம்புகள்!

சவுக்கு : அபிமன்யூவின் மகனான பரீட்சித்து மன்னன், ஒரு நாள் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, காட்டில் வெகு தொலைவில் சென்றுவிட்டார். அவருக்கு எப்படித் திரும்பி வருவது எனத்தெரியவில்லை. நீண்ட நேரம் அலைந்து திரிந்து, தாகம் எடுத்துக் களைத்த நிலையில், ஒரு சமவெளியில் தனது குதிரையை நிறுத்தினார். அங்கு முனிவர் ஒருவர் தியானம் செய்வதை பார்த்தார். முனிவரை மன்னர் அழைத்தார். பதில் வரவில்லை. அவரது தியானத்தை கலைக்க முயற்சித்தார், ஆனால் முனிவர் கண்களைத் திறக்கவில்லை.
அலட்சியம் செய்யப்பட்டதாக உணர்ந்த மன்னர், முனிவரைக் கடுமையாக பேசினார். அப்போதும் பதில் இல்லை. விரக்தியும் ஆவேசமும் அடைந்த மன்னர், அருகே இருந்த செத்த பாம்பு ஒன்றைத் தனது வாளால் எடுத்து முனிவர் தோளில் போட்டுவிட்டுக் கேலியாக நகைத்தார்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த முனிவரின் மாணவர், ஆவேசம் கொண்டு, “மன்னா, ஏழு நாட்களுக்குள் நீ பாம்பு கடித்து மரணம் அடைவாய்’ என சபித்துவிட்டார். இந்த கதையில் அடுத்து என்ன நடந்தது என நமக்குத்தெரியும். ஆப்பிள் பழத்தில் இருந்து வந்த சிறிய புழு ஒன்று, தட்சன் என்னும் விஷப் பாம்பாக மாறி பரீட்சித்து மன்னர் முகத்தில் கடிக்கவே அவர் இறந்துபோனார்.
திரு.பிரதமர் அவர்களே, கடந்த நான்கு ஆண்டுகளாக ஜவகர்லால் நேருவை நோக்கி நீங்கள் சத்தமிட்டுவந்த நிலையில், இறுதியாக அவர் தோள் மீது, இறந்த பாம்பை எடுத்து வீசியபோது, இந்தக் கதைதான் எனக்கு நினைவில் வந்தது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்.எம்.எம்.எல்) வாரியத்தில் அர்ணாப் கோஸ்வாமி, வினய் ஷாஸ்ரபுத்தே, நாம் பகதூர் ராயை நியமித்தது இப்படித்தான் இருந்தது.
உங்களுக்கும், உங்கள் கொள்கைப் பயணத்தின் சசாக்களுக்கும் நேருவை அவமானப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ராஷ்ட்ரோட்டனா பரிஷத்தின் பாரத பாரதி புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். அந்த வரிசையில் நேர் வாழ்க்கை வரலாறு இருக்கும். ஆனால் இப்போது ஆங்கில வரிசையிலிருந்து நேரு வாழ்க்கை வரலாறு காணாமல் போய்விட்டது.மோதிலால் நேரு வாழ்க்கை வரலாறு இருக்கிரது. நேரு சிறையில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள் காசநோயால் பாதிக்கப்பட்டு மறைந்த மனைவி கமலா நேருவின் வாழ்க்கை வரலாறுகூட இருக்கிறது. ஆனால் நேரு வாழ்க்கை வரலாறு இல்லை. சங் பரிவாரம் இப்படித்தான் செயல்படுகிறது. அந்த வரிசையை என் பிள்ளைகளுக்காக வாங்க விரும்பினேன், ஆனால் வாங்கவில்லை. நேருவின் கதை ஏற்கனவே என 8 வயது மகனுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்கு, இந்தியா பற்றிய அவரது சிந்தனைகள் ஆகியவை அவனுக்குத்தெரியும்.
2015ல், உங்கள் அரசு, நேரு நூலகத்தில் தீன தயாள் உபாத்யாயா மையத்தை அமைத்தது. அதன் பிறகு நேரு நினைவகத்தில் உபாத்யாயா பெயரில் நிகழ்சிகள் நடக்கின்றன. நேருவின் படம்கூட அங்கு இல்லை. உபாத்யாயா படம்தான்உள்ளது. சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் எண்ணற்ற இடங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என நீங்கள் புலம்பிக்கொண்டிருந்தீர்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்கு ஆண்டுகளில் நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பரம்பரையை மிஞ்சும் வகையில்,. சாலைகள், ரெயில் நிலையங்கள், திட்டங்கள் என எல்லாவற்றுக்கும் உபாத்யாயா பெயர் வைத்துள்ளீர்கள்.
இந்தியாவுக்கு உபாத்யாயாவின் பங்கு என்ன? இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய விமர்சனத்தை அவர் வைத்தா? அல்லது ஒருங்கிணைந்த மனிதநேயம் எனும் வாசகத்தை உருவாக்கினாரா? பசுக்களைக் காப்பதற்காக சக மனிதர்களைக் கொல்லலாம் என நினைக்கும் மனிதர்களால் எந்த வகையான மனிதநேயத்தை முன்வைக்க முடியும்?
அதன் பிறகு, நாடாளுமன்றத்தில் பிரதமராக நின்றபடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய உங்கள் பேச்சு வருகிறது. “பட்டேல் பிரதமராக வந்திருந்தால் …”, என்று நீங்கள் முழங்கினீர்கள். இப்படிச் சொல்லும்போது வரலாற்றின் முக்கிய தகவல்களை நீங்கள் மறந்துவிடவில்லையா? அதாவது காந்தியின் ஆலோசனையின் பேரில் பட்டேல்தான் நேருவுக்கு வழிவிட்டார். தேசத்தின் எதிர்காலத்திற்கான நேருவின் தொலைநோக்கை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லையா என்ன? இன்று ஐஐடிகள் அல்லது அணுசக்தித் திட்டம், ஐஎன்எஸ் அரிஹந்த்,மங்கள்யான் ஆகியவற்றுக்காக நமது விஞ்ஞானிகளை நீங்கள் பாராட்டும்போது மறைமுகமாக நேருவின் தொலைநோக்கைத்தான் புகழ்கிறீர்கள்- இது, பட்டேலுடைய, காந்தியுடைய தொலைநோக்கைவிடச் சிறந்ததாக இருக்கவில்லையா என்ன? இடது – வலது, தாராளவாதம்- மரபுவாதம், மதச்சார்பு- இந்து ஆதரவு வேறுபாடுகளை மீறி நேருவும் பட்டேலும் சிறந்த கூட்டணியாக செயல்படவில்லையா? ஏனெனில் இருவரும் பரஸ்பரம் மதிப்பு கொண்டிருந்தனர், இந்தியா எனும் பெரிய கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்- இந்து இந்தியா மீது மட்டும் அல்ல.
வி.பி.மேனன் திட்டப்படி பட்டேல் இந்திய சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தினார், அந்த ஒன்றுபட்ட இந்தியாவில் நேரு ஆன்மாவைப் புகுத்தி, இந்திய இதயங்களை ஒன்றாக்கினார். மேலும் 1947இல் பட்டேலுக்கு, நீங்கள் அவரை மார்க்க தர்சக் மண்டலில் இடம்பெற வைக்கும் வயது வந்துவிடவில்லையா? பட்டேல் இன்று உயிருடன் இருந்து, தனது நண்பரும் தலைவருமான நேருவை நீங்கள் அவமானப்படுத்துவதைக் கண்டால் என்ன சொல்லியிருப்பார்?
காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திர போஸை வெளியேற்றியவர், ஆங்கிலேயர்களுடன் இணைந்து நேதாஜிக்கு எதிராகச் சதி செய்தார், சுததிரத்திற்கு பின் நேதாஜியின் குடும்பத்தினர் மீது உளவு பார்த்தார் என்றும்கூட நேருவைச் சித்தரிக்க முயன்றீர்கள். போஸ் தொடர்பான ஆவணங்களைத் திறப்பது என அறிவித்த பிறகு நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? தனது நண்பர் மற்றும் சக தேசப்பற்றாளர் மீதான கடமை உணர்வால், போஸ் மனைவி எமிலி ஷென்கல், மகள் அனிதா போஸ் ஆகியோரின் நலனுக்காக நேரு மிகவும் பாடுபட்டதையா?
போஸிடம் மோசமாக நடந்துகொண்டார் என்று வெளிப்படையாக நேரு மீது அவதூறு கூறிய நீங்கள் ஏன் உண்மை என்னவெனக் கூறவில்லை? அதோடு, நீங்கள் அவதூறு கூறுவதுபோல நேரு அல்ல, பட்டேலும் காங்கிரசின் வலதுசாரிகளும்தான், போஸின் இடதுசாரிப் போக்கு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவரை வெளியேற்ற காந்தியை நிர்பந்திக்கவில்லை? சுபாஷ் சந்திர போஸ் தனது கொரில்லா படைக்கு காந்தி, நேரு பெயர் வைத்தார். ஏன் பட்டேல் பெயரை வைக்கவில்லை? செங்கோட்டை வழக்கில் 1945-46இல் ஆசாத் ஹிந்த் படை வீரர்களுக்காக வழக்கறிஞராக வாதாடியது நேருவா, பட்டேலா?நேருவுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் வெளியிடாமல்,நீங்களும் சங் பரிவாரமும், 54 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒருவர் மீது பொய்த் தகவல்களையும் அவதூறுகளையும் கூறிக்கொண்டிருப்பது ஏன்?
இது பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: சுதந்திரம் கிடைத்தபோது, புதிய தேசத்தின் முன் உரை நிகழ்த்தி, அதன் அடக்கி வைக்கப்பட்ட ஆன்மாவைத் தனது தொலைநோக்கான பார்வையால் தூக்கி நிறுத்தும் புத்தாயிரமாண்டின் பொறுப்பை உங்கள் கடவுகள்கூட நேருவிடம்தான் வழங்கினர். நேரு நூலகத்திலும் மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் நேரு மீது நீங்கள் எத்தனை செத்த பாம்புகளை வீசினாலும், நேருவின் பெருமையையோ அல்லது இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கையோ சிதைத்துவிட முடியாது.
நேருவின் வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், நம்முடைய நேசத்திற்குரிய தாய்நாடான, என்றும் நிலைத்திருக்கும், எப்போதும் புதியதான இந்தியா,ஒருபோதும் தன் மகத்தான புதல்வர்களை மறக்காது.
எஸ்.ரகோத்தம்
நன்றி: டெக்கான் ஹெரால்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக