வெள்ளி, 2 நவம்பர், 2018

சிலை செலவில் வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?



சவுக்கு.காம் :ஒற்றுமைச் சிலை ரூ.2989 கோடி செலவில்
நிறுவப்பட்டிருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தில் இரண்டு புதிய இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (ஐஐடி) ஏற்படுத்தியிருக்கலாம்,
ஐந்து இந்திய நிர்வாகவியல் கல்வி வளாகங்களை (ஐஐஎம்) உருவாக்கியிருக்கலாம்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து (ISRO) ஆறு முறை செவ்வாய்க் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கலாம்.
பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக என குஜராத் மாநில அரசு பல்வேறு முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. அதற்கு ஒதுக்கக்கூடிய நிதியில் இரண்டு மடங்குக்கும் அதிகமான செலவில் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
அந்தச் செலவில் 40,192 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தியிருக்க முடியும், 162 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மறுபடி இயங்கவைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டிருக்க முடியும். 425 புதிய தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும்.

இந்த ஒற்றுமைச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி 2018 அக்டோபர் 31ல் திறந்துவைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிற இந்தச் சிலை, சர்தார் வல்லபபாய் படேல் 143ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது. 182 மீட்டர் (597 அடி) உயரமுள்ள (6 அடி உயரமுள்ள ஒருவரைவிடச் சுமார் 100 மடங்கு அதிக உயரம்) இந்தச் சிலை உலகத்திலேயே மிக உயரமானதாகும்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று பரவலாக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்குப் பிறகு, மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதிகளை இந்தியாவோடு இணைப்பதில் அவருக்கு இருந்த பங்கிற்காக இந்தப் பெயர்.
விவசாயிகள், உள்ளூர் மக்கள் ஆவேசம்
இந்தச் சிலைத் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் குஜராத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களும் விவசாயிகளும் பெருந்திரள் போராட்டத்திற்குத் திட்டமிட்டு வருகிறார்கள். சிலைக்காகச் செலவிடப்பட்ட தொகை, அது நிறுவப்பட்டுள்ள வட்டாரத்தின் குடிநீர்ப் பற்றாக்குறை, மறுவாழ்வுப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியற்ற மனநிலையில்தான் அந்தப் போராட்டத்திற்குத் தயாராகிவருகிறார்கள்.
சிலை நிறுவப்பட்டதால் குஜராத்தின் நர்மதைப் பள்ளத்தாக்குப் பகுதியில் 72 கிராமங்களின் 75,000 பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் 32 கிராமங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக என்டீடிவி தொலைக்காட்சியின் 2018 அக்டோபர் 20 செய்தித் தொகுப்பு தெரிவிக்கிறது.
19 கிராமங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் எதுவும் நிறைவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இழப்புகளுக்கான ஈடாகப் பணம் தரப்பட்டிருக்கிறது என்றாலும், நிலம் வழங்கப்படும், வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற இதர வாக்குறுதிகள் 13 கிராமங்களில் நிறைவேற்றப்படவில்லை.
சிலை திறக்கப்படும் நாளில் “நர்மதை ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்வோம்” என்று விவசாயிகள் அச்சுறுத்தியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் 2018 அக்டோர் 29 செய்தி கூறுகிறது.
சோட்டா உதேப்பூர், பாஞ்ச்மஹால்ஸ், வதோத்ரா, நர்மதா ஆகிய நான்கு மாவட்டங்களைச்  சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தி அதிகரித்து வருகிறது. சங்கேடா பகுதியில் உள்ள சர்தார் சர்க்கரை ஆலைக்கு 2,62,000 டன் கரும்பு விநியோகித்தவர்கள் அவர்கள். தற்போது, நிர்வாகக் குழுவினரின் நிதி முறைகேடுகளால் அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. விவசாயிகள் தங்களுக்கு வர வேண்டிய சுமார் 12 கோடி ரூபாய் நிலுவைக்காகக் காத்திருக்கிறார்கள்.
“நர்மதா அணையில் தண்ணீர் மிகக்குறைவாகவே இருக்கிறது. இதனால் குஜராத் மாநிலமே ஒரு தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிலை திறப்பைக் குறைந்தது ஓராண்டுக்காவது தள்ளிப்போட்டிருக்கலாம்,” என்கிறார் குஜராத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் கன்ஷ்யாம் ஷா (மின்ட், 2018, அக்டோபர் 30).
விஜேந்திர தாத்வி ஒரு விவசாயி. தனது மூன்று ஏக்கர் வயலுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் தவிப்பவர். “ஒரு ராட்சச சிலைக்குச் செலவு செய்வதற்கு பதிலாக அந்தப் பணத்தை அரசாங்கம் இந்த மாவட்ட விவசாயிகளுக்காகச் செலவிட்டிருக்கலாம்,” என்று அவர் கூறியதாக 2018 அக்டோபர் 28 பிபிசி செய்தி கூறுகிறது.
சிலைக்காகச் செலவிடப்பட்ட ரூ.2989 கோடி எதற்கு ஈடான தொகை என்று இதோ ஒரு சிறு பட்டியல்:
. 2017-18இல் குஜராத்துக்கு மத்திய அரசு தேசிய வேளான் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கிய (ரூ.365 கோடி) நிதியை விட இது எட்டு மடங்கு அதிகம். அதே திட்டத்தின் கீழ் 56 புதிய பணித் திட்டங்களுக்கும், ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் திட்டங்களின் தொடர்ச்சிக்கும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகையை விட (ரூ.602 கோடி) ஐந்து மடங்கு அதிகம்.
. அதே மாநிலத்தின் இரண்டு தண்ணீர்க் குழாய்த் திட்டங்களுக்கு மதிப்பிடப்பட்ட தொகையை விட (ரூ.1,090 கோடி) இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகை இது. முதலாவது குழாய்த் திட்டம் கடானா அணையைச் சார்ந்தது. தாஹோத், மஹிசாகர் ஆகிய இரு மாவட்டங்களில் சுமார் 10,000 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் செய்வதற்கான திட்டம் அது. இரண்டாவது திட்டம், தினோத்-போரிட்ரா கணவாய் பாசனம். இது சூரத் மாவட்டத்தில் 1,800 ஹெக்டேர் நிலத்திற்கு நீர் வழங்கக்கூடியது.
. பிரதமரின் வேளான் பாசனத் திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக என குஜராத் மாநில அரசு பல்வேறு முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. சிலைக்குச் செய்யப்பட்டுள்ள செலவு அதற்கு ஒதுக்கக்கூடிய நிதியில் இரண்டு மடங்குக்கும் அதிகம். 40,192 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தியிருக்கக்கூடிய தொகை அது. 162 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மறுபடி இயங்கவைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டிருக்கக் கூடிய, 425 புதிய தடுப்பணைகளைக் கட்டியிருக்கக்கூடிய தொகை அது.
சிலைக்குச் செய்யப்பட்ட செலவில் இதையெல்லாம் உருவாக்கியிருக்க முடியும்:
  1. இரண்டு புதிய ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்க முடியும் (ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த ரூ.1,167 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்).
  2. இரண்டு ஏஐஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஏற்படுத்தியிருக்க முடியும் (ஒரு ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்கு ரூ.1,167 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்).
  3. ஐந்து புதிய நிரந்தர ஐஐஎம் கல்வி நிறுவனங்களைக் கட்டியிருக்க முடியும் (ஒரு ஐஐஎம் நிறுவனத்தைக் கட்டுவதற்கு ரூ.539 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்).
  4. 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய ஐந்து புதிய சூரிய சக்தி மின் திட்டங்களை ஏற்படுத்தியிருக்க முடியும் (ஒரு சூரிய மின்சாரத் திட்டத்திற்கு ரூ.528 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்).
  5. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மூலம் செவ்வாய்க் கோளுக்கு ஆறு விண்கலப் பயணங்களை மேற்கொண்டிருக்க முடியும் (ஒரு பயணத்திற்கு ரூ.450 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின்படி), நிலவுக்கு மூன்று சந்திரயான்-2 பயணங்களை மேற்கொண்டிருக்க முடியும் (ஒரு சந்திரயான் திட்டத்திற்கு ரூ.800 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டின்படி).
நவீன தொழில்நுட்பங்களுடன் உலகின் மிக உயரமான சிலை
சீனாவில் உள்ள வசந்த ஆலய புத்தர் சிலையை விட இந்த ஒற்றுமைச் சிலை 29 மீட்டர் அதிகம். நேற்று வரையில் 153 மீட்டர் உயரமுள்ள அந்தச் சிலைதான் உலகின் மிக உயரமான சிலை என்று கருதப்பட்டுவந்தது. அமெரிக்காவின் சுதந்திரச் சிலையை (93 மீட்டர்) விட இரண்டு மடங்கு அதிக உயரம் படேல் சிலை.
இந்தியாவில் இது வரையில் மிக உயரமான சிலை என்ற இடத்தில் இருந்து வந்தது, ஆந்திராவின் விஜயவாடா நகரில் உள்ள வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சிலைதான் (41 மீட்டர் / 135 அடி).
“இந்த ஒற்றுமைச் சிலை நமது மகத்தான சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு தனிமனிதரையும் நினைவூட்டும் என்பது மட்டுமல்ல, சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குச் சித்தாந்தங்களாகிய ஒற்றுமை, தேசப்பற்று, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு நம் நாட்டு மக்களை ஈர்த்துக்கொண்டும் இருக்கும்.” – சிலைத்திட்ட வலைப்பக்கத்தின் ‘திட்ட நோக்கங்கள்’ பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் இது.
(மூலக் கட்டுரை இந்தியாஸ்பெண்ட் இணைய இதழில் வெளியானது)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/statue-of-unity-cost-narendra-modi
தமிழில்: அ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக