செவ்வாய், 13 நவம்பர், 2018

அரசுப்பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்கக்கூடாது?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

tamil.thehindu.com : போட்டித்தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றிப்பெற ஏன் அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி அளிக்கக்கூடாது, என்று கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளது. இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் 80 லட்சம் மாணவர்கள் தமிழ் வழிக்கல்வியில் பயில்கின்றனர்.

தமிழக அரசு கல்விக்காக ஆண்டு தோறும், 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வரும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்வி களில் சேர முடியாத நிலையும், நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர், என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகள் துவங்க வேண்டும், இதுகுறித்து அக்டோபர் மாதம் 15-ம் தேதி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது பதிலளித்த அரசுத்தரப்பில், ஆங்கிலவழி வகுப்புகளை துவங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக தமிழ் வழி வகுப்புகள் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி (spoken english) வகுப்புகளை நடத்துவதே சிறந்தது என்று தெரிவித்துடன், போட்டித் தேர்வுகளில் ஆந்திர, கேரள மாநிலங்களே முன்னிலை வகிக்கும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தீர்களா? என கேள்வி எழுப்பினர்.
வழக்கு தொடர்ந்த மனுதாரர் அப்பாவு பிரதான எதிர்க்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், அவரது நோக்கம் முழுக்க முழுக்க பொது நலனுன் சார்ந்ததாக உள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அரசு பார்க்கக்கூடாது என்று கூறினர். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த எப்போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
தமிழ் மட்டுமே கல்வி என சொல்லும் பலரின் பிள்ளைகள் ஆங்கில, ஹிந்தி மீடியங்களில் தான் படிப்பதை காண முடிகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆரம்ப, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சிகளை நடத்துவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக