சனி, 3 நவம்பர், 2018

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கறுப்பு பண மோசடி வழக்கு கைவிடப்பட்டது

tamil.thehindu.com:  வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்தில் ரூ. 5.37 கோடி மதிப்புள்ள சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துகளை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக கறுப்பு பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நவ.2- வரை மூவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘ நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக கறுப்புபணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவழக்கு தொடர வருமான வரித்துறை இயக்குநர் அனுமதி வழங்கி பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நளினிசிதம்பரம் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையும் ரத்துசெய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக