செவ்வாய், 20 நவம்பர், 2018

சோளகர் தொட்டி.. ஆதிவாசிக் குடும்பங்கள் மிகவும் கையறு நிலையில்

Savukku :   7 வருடங்கள் சிறையில் கழித்த மகாதேவன். மற்றும் அவர் குடும்பம். படத்தில் பொருளாதாரம் முதுநிலை முதல் ஆண்டு படிக்கும் ரோஜா உள்ளார். சோளகர் தொட்டி – தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், தளவாடி வட்டாரத்தில் ஒரு ஒதுக்குப்புறமான, ஆதிவாசி மக்களின் சின்னஞ்சிறு கிராமம். சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வட்டாரத்தில், தலைமலை வனச் சரகத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் இது. இங்கு 42 குடும்பங்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறிய வனப்பொருள்கள் சேகரிப்பு இவைதான் இவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்கள். மிகப்பெரும்பாலான குடும்பங்கள் நிலமற்றவர்கள்தான். ஆண்களும் பெண்களும் அருகில் உள்ள வயல்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். சுமார் 10 இளைஞர்கள், இந்த மாவட்டத்தின் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்கிறார்கள். வயதானவர்கள் கால்நடைகளை – குறிப்பாக பசுமாடுகள், ஆடுகள், செம்மரியாடுகள் ஆகியவற்றைப் பராமரிக்கிறார்கள்.  இந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் மிகப்பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. மராமத்து செய்தாக வேண்டிய கட்டாய நிலைமையில் இருப்பவை. 15க்கு மேற்பட்ட குடும்பங்கள் எவ்விதப் பாதுகாப்புமின்றி தற்காலிக ஓலைக் குடிசைகளில் வசிக்கிறார்கள்.

வீரப்பன் நாட்களில் சிக்கலில் சிக்கிய மக்கள்
1990களில் வனக்கொள்ளையனாக நாடறிந்த வீரப்பன் செயல்பட்டது சோளகர் தொட்டிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்துதான். சந்தனமரக் கடத்தலிலும், யானைகளைக் கொன்று தந்தங்கள் கடத்தலிலும் ஈடுபட்டிருந்த வீரப்பனால் காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டார்கள். காவல்துறையால் தேடப்பட்ட நிலையில் வீரப்பனின் ஆட்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நடந்துவந்தன. ஒரு கெடுவாய்ப்பாக, பத்தாண்டு காலம் நீடித்த அந்த மோதலில் நடுவில் மாட்டிக்கொண்டவர்கள் சோளகர் தொட்டி மக்கள்தான். கிராமத்தைச் சேர்ந்த 14 கேர் கைது செய்யப்பட்டனர். அநேகமாகக் கிராம மக்கள் அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஏழாண்டு காலம் சிறையில் கழித்தனர். ஐந்தாண்டு காலம் விசாரணைக் கைதிகளாகவே வைக்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் 2004ல் அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. தங்கள் ஆயுளில் பல ஆண்டுகளை நீதிமன்ற வழக்குகளில் இழந்த இந்த ஏழை மக்கள் அடிக்கடி காவல்துறை சோதனைகளுக்கும் வன்முறைக்கும் இலக்காக்கக்கப்பட்டனர். தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடும் துயரங்களுக்கு உள்ளாகினர்.
வீரப்பன் 2004 அக்டோபரில் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இறுதியாக இந்தக் கிராமத்தில் அமைதி திரும்பியது. ஆனால், இந்த மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் சரிப்படுத்த இயலாதாதது. இது இளைஞர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, பல நூறு ஆண்டுகளாக இவர்களது தாயகமாக இருந்து வந்த வனப்பகுதி, புலிகள் வசிப்பிடமாக, மிகுந்த பாதுகாப்புக்கு உரிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது ஆதிவாசி மக்களுக்குக் காட்டுத் தொடர்பைக் கடுமையாக வெட்டிச்சுருக்கியது. சோளகர் மக்கள் தங்களுடைய பாரம்பரியக் குடியிருப்புப் பகுதியாக, தங்களின் வாழ்வுக்கு மைய ஆதாரமாகத் திகழ்ந்த காட்டை இழந்தார்கள். இன்று, கூலித்தொழிலாளர்களாக வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளின் கல்வி – ஒரு வெற்றிக் கதை
2000ஆவது ஆண்டில் சோளகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை கூட பள்ளிக்குச் சென்றதில்லை. இந்நிலையில், அருகாமையில் உள்ள திகினாரே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளியான புனித ஆன் பள்ளி நிர்வாகம், இக்குழந்தைகளின் உடல் நலத்தைப் பராமரிக்கவும், இவர்களைப் பள்ளியில் சேர்க்கவும் முன்முயற்சி மேற்கொண்டது. 2001ல் இங்கிருந்து முதலாவது குழந்தைகள் குழு பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது. அவர்களில் ஒரு குழந்தைதான் மீனா. மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு, மீனாவின் தாத்தா வெறும் காலோடு தன் தோள்களில் தினமும் சுமந்து செல்வார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மீனாவின் தாத்தா ஒரு யானையிடம் சிக்கி உயிரிழந்தார். மீனாவின் தங்கைகள் வெண்ணிலா, சுந்தரி ஆகியோரும் பள்ளியில் சேர்ந்தனர். மூன்று பேரும் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தனர். மூவரும் சிறப்பாகப் படித்தனர். இன்று மீனா இயற்பியல் எம்.பில். படித்து வருகிறார். வெண்ணிலா எம்.ஏ. பொருளாதாரம், சுந்தரி பி.எஸ்சி. தாவரவியல் பயின்று வருகின்றனர்.
இந்தக் கிராமத்தின் மகாதேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அவரது மகள் ரோஜா மூன்று மாதக் குழந்தை. மகாதேவன் ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். புனித ஆன் பள்ளிக்குச் சென்ற ரோஜாவும் இன்று எம்.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார். இதே போல். பெற்றோர்கள் கடந்த காலப் பிரச்சனைகளால் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், பலர் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிற நிலையில், சோளகர் தொட்டியின் பழங்குடிக் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகக் கற்று வருகின்றனர்.
கிராமத்துக்கு வந்தது பள்ளி
பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2016இல் இந்தக் கிராமத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று திறக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தரம்.
தற்போது இந்தப் பள்ளியில் 18 மாணவர்கள் பயில்கிறார்கள். 13 பேர் அருகில் உள்ள புனித ஆன் பள்ளிக்குச் செல்கிறார்கள். பள்ளியில் சிறப்பாகப் பயின்றவர்கள் மாநிலத்தின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் செல்லத் துணையாக, கல்வி உதவித்தொகைக்கு புனித ஆன் பள்ளியின் சகோதரிகள் தனிப்பட்ட முறையில் ஆதரவளித்துள்ளனர்.
பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் சவால்கள்
பல்கலைக்கு முந்தைய பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் இரண்டு சிறுவர்கள் மட்டுமே. மேல்படிப்பில் எப்படியோ சேர்ந்தார்கள் என்றாலும், வீட்டு வறுமையின் காரணமாகவும் பணப் பற்றாக்குறை காரணமாகவும் படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். 7,8,9ஆம் வகுப்புகளோடு பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள், பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளர்களானார்கள். அவர்கள் பள்ளிப் படிப்பிலிருந்து இடையிலேயே நின்றதற்கு வகுப்பறைகளில் அடி, உதை தண்டனை தரப்படுவது, பாடம் சார்ந்த வேலைகளைச் செய்யுமாறு கடுமையாக நிர்ப்பந்திக்கப்படுவது, தாங்கள் ஊக்குவிக்கப்படவில்லை என்ற பொதுவான உணர்வு மேலோங்குவது ஆகிய காரணங்களும் இருக்கின்றன. இந்த இளைஞர்களில் பலர் சாராய போதைக்கு அடிமையாகியுள்ளனர். வழக்கமான பள்ளிக் கல்வி முறை இத்தகைய இளைஞர்களுக்குப் பொருந்தவில்லை. இவர்களுக்கு ஏற்றப் பாடமுறைகள் அதிகமாகத் தேவை. இவர்களது ஆதிவாசி அடையாளத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டதாக அந்தப் பாட முறைகள் உருவாக்கப்பட வேண்டும். தேனீ வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, பழங்குடி சமூக வீடுகளுக்கான கட்டுமானத் திறன் போன்ற தொழில்திறன் பயிற்சிகளோடு இணைந்த அத்தகைய பாட முறைகளை அவர்களுடனேயே கலந்தாலோசித்து உருவாக்கலாம்.
சந்தோஷ் – 9ஆம் வகுப்புடன் பள்ளியிலிருந்து விலகியவர். அருமையான ஓவியர். பள்ளியிறுதி வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வுக்காக மறுபடியும் பள்ளியில் சேரக் கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறார். ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. எஸ்எஸ்எல்சி தேர்ச்சியடைந்த சிலர் இப்போதும் வயல்களில் கூலித்தொழிலாளர்களாகத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
பிளஸ் டூ படித்த ஒரு சிறுமி, தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்துவிட்டார். எப்படியாவது படித்து முடித்துவிட வேண்டும் என்று இப்போது இரவுப் பாடசாலையில் சேர்ந்து தீவிரமாகப் படித்து வருகிறார். வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஏதேனும் தொழில் திறன் பயிற்சி கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்.
இந்த ஆதிவாசிக் குடும்பங்கள் மிகவும் கையறு நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதால், இக்கிராமத்தின் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அரசிடமிருந்து, சமுதாயத்திடமிருந்து சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. இவர்களது மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்துள்ளன. பல்லாண்டு காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.
பொதுமக்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள்
பின்வரும் ஆலோசனைகளைப் பரிசீலியுங்கள்:
  • சோளகர் தொட்டி கிராமம் குறித்த ஒரு சமூகப் பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பங்கேற்புடன் இணைந்த அந்த ஆய்வில், கிராமத்து மக்களின் முன்னேற்றத்திற்குக் கீழிருந்து மேல் நோக்கிக் கட்டப்படுகிற மேம்பாட்டு வழிமுறைகளைக் கண்டறிவதும் புரிந்துகொள்வதுமே அந்த ஆய்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.
  • அரசாங்கமும், முன்னேறிய பிரிவினரும், வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றோரும், கார்ப்பரேட் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் இந்தக் கிராமத்துக்கு மட்டுமல்லாமல், இத்தகைய பல பழங்குடி கிராமங்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சிறப்பாகப் பங்களிக்க முடியும். அதற்காக அந்த மக்களைச் சென்றடைய வேண்டும், அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • அக்கறையுள்ள தனிமனிதர்களும் அமைப்புகளும் இந்த மக்களுக்குத் தொழில் வழிகாட்டல்களை வழங்க முடியும். கண்ணியமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும்.
  • இந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கையை மறுகட்டுமானம் செய்வதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்ட முடியும்.
  • கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) துறைகளை இந்தக் கிராமத்திற்கு அனுப்பிவைக்கலாம். குறிப்பாக வீடு கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்த வைக்கலாம்.
கல்வி உதவிச் செயல்பாடுகள்
சென்னையைச் சேர்ந்த  ஜீவானந்த், தனது நண்பர்களிடமிருந்து நிதி திரட்டி, இது வரையில் 5 பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியிருக்கிறார். சோளகர் கிராமக் குழந்தைகளுக்குக் கல்வியளிக்க தனிமனித உதவிகளும் சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடுகளும் வரவேற்கப்படுகின்றன.
கோவையைச் சேர்ந்த அருளகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதன் மூலம் இந்த முயற்சிக்கு உதவி வருகிறது.
தமிழகப் பழங்குடியினருக்கான ஒரு அமைப்பாகிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சோளகர் தொட்டி மக்களின் வாழ்க்கையோடு ஒருங்கிணைந்த அங்கமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தோடு இணைந்த வி.பி. குணசேகரன், மோகன் குமார், மூத்த மனித உரிமை வழக்குரைஞர் பா.ப. மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சமூகத்தினருக்கு ஆதரவான சட்டப்போராட்டங்களை இடையறாது நடத்தி வருகின்றனர். அவர்களை ஒட்டுமொத்தக் கிராமமும் தன் நினைவில் நிறுத்தியிருக்கிறது. புனித ஆன் பள்ளியின் சகோதரிகளை, குறிப்பாக சகோதரி ஜெப மாலை, சகோதரி ஏஞ்ஜெல் மேரி, சகோதரி லீமா ஆகியோரை, அவர்கள் அளித்து வரும் ஆதரவுக்காகக் கிராம மக்கள் நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்.

சோளகர் தொட்டியின் குழந்தைகள்</

சோளகர் தொட்டியின் முதல் பட்டதாரி மீனா, அப்பகுதி குழந்தைகளுடன். கல்லூரியில் படிக்கும், சோபா, ரேவதி, சுந்தரி மற்றும் வெண்ணிலா கட்டுரையாளர் தென்னிந்திய< வசாயிகள் இயக்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு</>பொதுச்செயலாளரார்</>நாடுகளின்
182 விவசாயி அமைப்புகள் இணைந்துள்ளலா வியா கேம்பசினா அமைப்பின் உறுப்பினர்)
தமிழில்: .குமரேசன்
நன்றி http://kannaiyan.blogspot.com/2018/11/soligar-doddi.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக