செவ்வாய், 20 நவம்பர், 2018

இலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் !

Ajeevan Veer : கடந்த அக்டோபர் 26ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதி வரை திரைக்கு பின்னால் நடந்தவை ....
கடந்த அக்டோபர் 26ம் திகதி மாலைப் பொழுதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன முன் பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்தார். அதுவரை ஐதேகவின் பிரதமராக இருந்த ரணில் அல்லது அக் கட்சியின் முக்கிய தரப்புகள் இது குறித்து அறிந்தே இருக்கவில்லை.
சிரிசேன , மகிந்த , பசில் ஆகியோரது தொடர்பாளராக ஈடுபட்ட லக்ஸ்மன் பெரேரா ஆகியோர் மட்டுமே இதை அறிந்திருந்தனர். அதைத் தவிர மகிந்த மற்றும் சிரிசேன ஆகியோரது நெருக்கமானவர்கள் ஏதோ ஒரு மாற்றம் நடக்கப் போகிறது என மட்டும் ஊகித்திருந்தினர். ஆனால் அது என்னவென்பது உறுதியாக தெரியாதிருந்தது.
அதனால்தான் அவர்கள் மகிந்த - மைத்ரி ஒற்றுமை குறித்து பரப்புரைகளை மேற் கொண்டனர். அத்தோடு தேசாபிமான சுலோகங்களையும் முன் வைக்கத் தொடங்கியிருந்தனர்.
மகிந்தவின் அவசர தேவை , கோட்டாபய மற்றும் காமினி செனரத் ஆகியரது வழக்குகளிலிருந்து மீள்வதேயாகும். ஏனைய வழக்குகளை விட இவை பார தூரமானவை. அத்தோடு ஏனைய அவரது வழக்குகளும்தான்.
ஆனால் மைத்ரியின் இலக்கோ 2019 சனவரி 08ம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி எப்படியாவது இன்னொருமுறை வெற்றி பெற்று ஜனாதிபதியாக வேண்டும் என்பதேயாகும்.
மகிந்த பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததும் ரணில் 1994 மற்றும் 2003 காலப் பகுதியில் தலையணை படுக்கைகளை சுருட்டிக் கொண்டு போனது போல வீட்டுக்கு போவார் என அவர்கள் எண்ணியிருந்தனர். அதன்பின் ஐதேவுக்குள் உள்ள ரணில் விரோதிகளையும் , தம்மோடு முன்னர் நெருக்கமாக இருந்த முஸ்லீம் கட்சிகளையும் வளைத்துப் போட்டுக் கொள்வது பெரிய பிரச்சனையில்லை என மகிந்த மற்றும் பசில் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

இதற்கு ரவி கருணாநாயக்கா, அண்மைக் காலமாக ரணில் மேல் கொண்ட கசப்பும் காரணமாக இருந்தது.
தனக்கு நிதியமைச்சு பதவியைத் தந்தால் ஐதேகவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களோடு வரத் தயார் என மைத்ரி மற்றும் பசிலிடம் ரவி தெரிவித்திருந்தார். பசில் மற்றும் ரவியின் நட்பு நெடுங்கால உறவாகும். ரவி கருணாநாயக்க 2007ம் ஆண்டு கெலியன் முதலீட்டு ஊழலில் சிக்கிக் கொண்ட போது அஜித் கப்ராலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பசில், ரவியை காப்பாற்றினார். அந்த நன்றிக் கடனாக உருவான நட்பு அரசியல் குரோதங்களைத் தாண்டி தொடர்ந்து வந்தது.
அதன்பின் ரவி கருணாநாயக்கவுக்கு சொந்தமாக டார்லி வீதியில் இருந்த பழைய கட்டிடத்தை 660 மிலியன் ரூபாயில் திருத்தியமைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கட்டிடமாக பசில் பாவிக்கவும் தொடங்கினார்.
தவிர சஜித் மற்றும் சஜித்தின் மனைவியும் , ரிசாட் பதியுதீனும் கூட தன்னோடு இணைவார்கள் என்ற நம்பிக்கை பசிலிடம் இருந்தது. ரிசாட் வந்து விட்டால் , பின்னர் ரவூப் ஹகீமும் அந்த அலையோடு இணைவார் என பசில் எண்ணியிருந்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற கேம் நகர்வுகள் பசிலுக்கு அத்துப்படி என ராஜபக்சக்களும், சிரிசேனாக்களும் ( மைத்ரி மற்றும் டட்லி) நம்பினார்கள். இதனியடையே மைத்ரியிடம் ஒரு துருப்பு சீட்டாக சஜித் பிரேமதாச இருப்பதாக மைத்ரி பெரு நம்பிக்கையோடு இருந்தார். அடிக்கடி பெஜட் வீதியில் அமைந்திருந்த ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இரவு உணவு விருந்துகளில் சஜித் பிரேமதாச , சஜித்தின் மனைவி மற்றும் ஹேமா பிரேமதாச (பிரேமதாசவின் மனைவி /சஜித்தின் தாய் ) ஆகியோர் வந்து போவது வழமையான ஒரு நிகழ்வாக இருந்தது. இது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சஜித்தின் பின் பலமாக மைத்ரியின் பிரசார இயந்திரமாக செயல்பட்ட கிளிமகராசாவின் சிரச (சக்தி/ newsfirst) மற்றும் டிரான் அலசின் மவ்பிம தினசரியும் இருந்தன. டிரான் அலசின் மவ்பிம , ஐதேகவின் மங்கள கம்பெரலியவின் நாயகனாக சஜித்தையே தூக்கி வைத்து புகழத் தொடங்கியிருந்தது. அதன் வீரன் சஜித் என்றே தலைப்புகள் வெளியாகின.
அதோடு கடந்த 6 மாதங்களாக கம் உதாவ எனும் நிகழ்ச்சி நிரலுக்காக, 2000 மிலியன் ரூபாய் பணத்தை ஜனாதிபதி சிரிசேனவின் பணிப்பின் பேரில் பெற , மங்கள சமரவீர இடமளித்தார். சிரிசேனவின் பிபிதெமு பொலன்னறுவை நீர் வீழ்ச்சி திட்டத்தை திறந்து வைக்கும் போதும் சிரிசேன , சஜித்துக்கு முதன்மைளித்தார். சஜித் அந்நிகழ்வில் சிரிசேனவுக்கு நிகரான கௌரவத்தோடு மதிப்பளிக்கப்பட்டார்.
தன் தந்தையைப் போலவே ஏழை மக்களுக்காக உதவுவதில், மைத்ரி முன்னின்று உழைக்கிறார் என சஜித் தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார். மேடைகளில் அதிகமாக ரணிலை விட, மைத்ரியையே சஜித் புகழ்ந்து வந்தார். அதேபோல ஐதேகவினர் மைத்ரியை வசைபாடும் போது, அவர்களது கருத்துகளை எதிர்த்து மைத்ரி சார்பாக பேசி வந்தார்.
சஜித் - மைத்ரி இருவரிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக, ஐதேவின் ரணில் இல்லாத , சஜித்தை பிரதமராக்கும் ஒரு பிம்பத்தை திரை மறைவில் மைத்ரி உருவாக்கி வந்தார்.
ரணிலை பதவி விலக்கிய தின இரவில் , ரணில் காலியில் உள்ள உல்லாச பயண விடுதியொன்றில் வார விடுமுறையைக் கழித்துக் கொண்டு இருந்தார். வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்னாயக்கவும் ரணிலோடு அப்போது உரையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போதுதான் ரணிலை பதவியை விட்டு மைத்ரி அகற்றிய செய்தியை கேள்விப்பட்டனர்.
செய்தியறிந்ததும் இரண்டாம் கட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு வரத் தொடங்கினர். அப்போது இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்போதே முக்கியமான ஐதேகவினர் அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் , அத்தனை கட்சிக்காரர்களும் அலரி மாளிகையை நோக்கி குழுமிய போதும் பிரதித் தலைவரான சஜித் மற்றும் உப தலைவரான ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வருகை தராமையாகும்.
சஜித் அம்பாந்தோட்டையில் இருப்பதாக தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் சஜித் அந்நேரம் மைத்ரியின் ஜனாதிபதி மாளிகையில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. சஜித் மைத்ரியை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததான விபரங்கள் பின்னர் தெரியவந்தன.
ரவி கருணாநாயக்கவோ , பசில் மற்றும் மைத்ரியை மாறி மாறி சந்தித்து தனக்கு நிதியமைச்சை அல்லது முதலீட்டு ஊக்குவிப்பு அல்லது சுற்றுலா அல்லது மெகாபோலிஸ் அமைச்சுகளில் ஒன்றைத் தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்.
அன்றைய இரவு ரணிலோடு ஹரின் பெர்னாண்டோ,அஜித் பி. பெரேரா, நளின் பண்டார,முஜிபூர் ரகுமான், ருவான் விஜேவர்த்தன, அகில விராஜ், மங்கள சமரவீர, ராஜித சேனாரட்னே, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த சிலருமே அலரி மாளிகையில் இருந்தனர்.
27ம் திகதி ரணிலை அலரி மாளிகையை விட்டு துரத்தப் போவதாக விமல் வீரவங்ச சூழுரைத்த பின்னர்தான் , அங்கிருந்தோர் வெளியேறுவதில்லை என முடிவுக்கு வந்தனர். அதற்கு எதிராக முகம் கொடுப்பதென்றும் தூதுவராலயங்களினூடாக சர்வதேசத்துக்கு தெரிவிப்பதென்றும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதென்றும் முடிவுக்கு வந்தனர்.
அன்றே பிரதமர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து, சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் கையெழுத்துகள் வாங்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐதேகவின் பலவீனம் எந்த அளவு என்றால்? அந்த காரியத்தை நிறைவேற்ற விஜேதாச ராஜபக்சவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்கள். அன்று இரவு மட்டும் அங்கிருந்த விஜேதாச ராஜபக்ச, அடுத்த நாள் முதல் தனக்கு உடல் நலமில்லை என வீட்டில் தங்கி வஜிர அபேவர்தனவுடன், ஐதேகவுக்கு எதிரான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். பின்னர் விஜேதாச ராஜபக்சவின் சத்தியக் கடதாசிக்கான கையெழுத்தை தயா கமகேயும் அவரது மனைவியும் அவரது வீட்டுக்குச் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்கள். அப்படி கையெழுத்திட்ட விஜேதாச ராஜபக்ச ,அடுத்த நாளே மகிந்த அரசியல் ஒரு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
27ம் திகதி காலையில் ஜனாதிபதி மைத்ரி பிரதமரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்காவை பதவி நீக்கம் செய்திருந்தார். அவருக்கு பதிலாக அமரசேகர என்பவரை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரணில் அமரசேகரவை அழைத்து அலரி மாளிகையினதும் பிரதமர் காரியாலயத்தினதும் சாவிகளைக் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்தார்.
அவரது அந்த முடிவை சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அஜித் பி. பெரேரா மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து தடுத்தார்கள். அங்கு குழுமியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வெல்லும் வரை எவரும் அலரி மாளிகையை விட்டு அகல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.
அதன் பின்னர் அலரி மாளிகையின் நடைமுறைகளை கையாழ்வது குறித்து சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன சில கமிட்டிகள் நியமித்தார்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னேடுப்பதற்கு சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அகில காரியவசம் ஆகியோர் முன்வந்தனர்.
அலரி மாளிகையின் அடிப்படை தேவைகளை கவனிப்பது, சாகல ரத்னாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேசத்துக்கான பரப்புரைகளை கொண்டு செல்லும் பொறுப்பு, மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கரு ஜயசூரிய தலைமையின் மூலமே சர்வதேசத்துக்கு அதிக விடயங்கள் பகிரப்பட்டன.
இந்த நேரத்தில் ஐதேகவின் நவீன திசாநாயக்க , அர்ஜூன ரணதுங்க ஆகியோர் உட்பட பலர் வெளிநாடு சென்றிருந்தனர்.
27ம் திகதி அலரி மாளிகைக்கு வந்த சஜித்தும், துலாஞ்சலியும் சுற்றி வளைத்து நிலமைகளை அவதானித்தனர். அதன் பின் தலை முடி வெட்டப் போவதாக , சஜித் லக்ஸ்மன் கிரியேல்லவிடம் சொல்லி விட்டு வெளியேறினார். அந்நேரம் துலாஞ்சலியை அங்கு இருக்குமாறு சஜித் விட்டுச் சென்றார்.
அன்று முதல் இரு நாட்கள் தங்கியிருந்த துலாஞ்சலி முக்கியமான சந்திப்புகளில் கலந்து கெண்டார். அதிகமாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் , தனது மொபைல் போனில் ஒளிப்பதிவு செய்த துலாஞ்சலி, ரொஸ்மிட் பிளேசிலுள்ள டிரான் அலசின் காரியாலத்துக்கு அனுப்பினார். அது எப்படியோ கசிய வரவே , ஆள் இல்லாமல் தலை மறைவானார்.
அக்டோபர் 26 முதல் 29 வரை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் எடுத்ததோடு, விசேடமாக நிதியமைச்சையும் மகிந்த கையிலெடுத்துக் கொண்டார். அதன்பின் தனது கனவு நியைவேறாது என உணர்ந்த ரவி கருணாநாயக்க அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். தயாசிரி ஜயசேகர மற்றும் சிலர், ரவி கருணாநாயக்கவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என கடுமையாக இருந்தனர். அப்படியான எதிர்ப்புக்கு பின்னரே, ரவி கருணாநாயக்க , திரும்பிஅலரி மாளிகைக்கு வந்தார்.
அக்டோபர் 30ம் திகதி கொள்ளுப்பிட்டியில் நடந்த ஐதேகவின் ஆர்ப்பாட்டத்துக்கு கூட , கொழும்பு வடக்கிலிருந்து ஒருவரையும் கலந்து கொள்ளாதபடி ரவி கருணாநாயக்க செயல்பட்டார். ஆனால் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துகாக மக்களை திரட்டிக் கொண்டு வந்த பெருமை , முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் மற்றும் கித்சிரி ராசபக்ச ஆகியோரையே சாரும். அன்றைய அத்தனை பலமும் அவர்களுடையதாகும்.
அம்பாந்தோட்டை பகுதியிலிருந்தும் , எவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற விடாது சஜித் பார்த்துக் கொண்டார். இப்படி பிரச்சனைகள் உக்கிரமான போது, சஜித், டிரான் அலசின் ரொஸ்மிட் பிளேசிலுள்ள காரியாலயத்துக்கும் , கிளி மகராசாவின் பேபுறூக் காரியாலயத்துக்கும் , பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கும் போய் வந்து கொண்டிருந்தார்.
ஆர்ப்பாட்டத்துக்காக மக்கள் நிறைந்து வழிந்த பகல் 2 மணியளவில், சஜித் மற்றும் ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வந்து , மக்கள் முன் கைகளை உயர்த்தி முன் வரிசையில் நின்று கொண்டு ஐதேக ஆதரவாளர்களை ஏமாற்றினர்கள். அப்பாவிகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் அன்று அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவை, அகில மற்றும் சாகல ரணிலிடம் சொன்ன போது, ரணில் எதிர்கால அரசில், மீண்டும் நிதியமைச்சை ரவிக்கு தருவதாக சொன்னார். இதனால் மங்கள பின் தள்ளப்படதாக பலர் உணர்ந்தார்கள்.
பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும், ஊடகங்களிலும், எந்த பலமும் இல்லாத நிலையை கொண்ட ஐதேக, ராஜபக்சவினரது தாக்குதலுக்கு உள்ளாகி மைத்ரியின் அதிகாரத்தை வெல்வதற்கு முகம் கொடுத்தவர்கள் என்றால் , அவர்கள் இளம் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். விசேடமாக ரவூப் ஹகீம் மற்றும் ரிசாட் பதியுதீன் போன்றவர்களை , தக்க வைத்துக் கொள்ள , சூரா கவுன்சில் என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பு பெரும் பங்கு வகித்தது. அவர்கள் மெக்காவுக்கு பயணமானதும் அவர்களது அழுத்தத்தின் காரணமேயாகும்.
சபாநாயகர் கேமை கையிலெடுத்தார். ஆர்ப்பாட்டத்தின் பலத்தை பார்த்த மகிந்த அஞ்சத் தொடங்கினார். தன்னால் பெரும்பான்மையை பெற முடியாது என உணரத் தொடங்கினார். ரணிலோடு டீல் ஒன்றை செய்ய கோட்டாபயவை அனுப்பினார்.
ஆரம்பத்தில் இசினி விக்ரமசிங்க மூலம் திலித் ஜயவீர ( தெரண உரிமையாளர்) , ரணிலை சந்தித்தார். அதன் பின்னர் கோட்டாபய ரணிலை சந்தித்தார். அதன்பின் ரணில் தொடர்ந்து அலரி மாளிகையில் தங்குவதற்கும் , மகிந்த பிரதமராக தொடர்வதும் என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என ரணில் தெரிவித்தார். அதைக் கேட்டு பலர் குமுறி எழுந்தனர். சிலர் எக்காளமிட்டு சிரித்தனர்.
எது எப்படியோ சபாநாயகர் இவை எதையும் உணராத நிலையில் உள்ளக - வெளிநாட்டு அமைப்புகளோடும், லக்ஸ்மன் கிரியல்ல, சம்பிக்க ரணவக்க , ரரஜித்த சேனாரத்ன, ரவூப் ஹகீம், ரிசாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசனோடு ஒரு புறமாகவும் , அடுத்த பக்கத்தில் தமிழ் கூட்டமைப்போடும், ஜேவீபீயோடும் இணைந்து , பாராளுமன்றத்தில் ராஜபக்ச ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்பட வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார்.
அத்தோடு வெளிநாட்டு தூதுவர்களை பாராளுமன்றத்துக்கு வரச் செய்தும், தனியாக சந்தித்தும் , சர்வதேச ரீதியாக மகிந்தவை தனிமைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். அதற்குள் மூக்கை நுழைக்க முற்பட்ட ரணிலை, வாய் திறக்க வேண்டாம் எனக் கடுமையானார். ரணில தாண்டி செயல்பாடுகள் நகரத் தொடங்கியிருந்தன. மெது மெதுவாக சபாநாயகர் , சிரிசேன மற்றும் மகிந்தவை அரசியலமைப்பினூடாக இறுக்க சாமர்த்தயமானார்.
கடைசியில் , நவம்பர் 2ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டப் போவதாகத் தெரிவித்தார். அதன்போது 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த தரப்புக்கு எதிராக இருப்பதை அறிவுறுத்தினார். அதைக் கேட்டு கலங்கிப் போன மகிந்தவின் சூழ்ச்சி நீதி ஆலோசகர்களான , டிரிபல் சில்வாக்கள் என அழைக்கப்படும் சரத் சில்வா, மனோகர த சில்வா மற்றும் யூ. ஆர் . சில்வா பாராளுமன்றத்தை சட்டத்துக்கு முரணான விதத்தில் நீடிக்கவும் , கடைசியாக பாராளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையான சட்ட ஓட்டைகளை காட்டி நடைமுறைப்படுத்த முயன்றனர்.
இதேவேளை கரு ஜயசூரியவின் முயற்சியின் பலனாக, அமெரிக்க தூதுவராலயம் கோட்டா - பசில் ஆகியோரின் சொத்துகளையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கப் போவதாக தெரிவித்தனர். அதைக் கேட்ட பசில் - கோட்டா இருவரும் ஆடிப் போயினர்.
இதுபோல ரசியாவின் பூட்டினின் நண்பர்களது சொத்துகளையும், வங்கி கணக்குகளையும் , அமெரிக்கா அண்மையில் முடக்கி உள்ளது. அதோடு கோட்டாவின் தேசாபிமான பேச்சுக்கள் நின்று போயின. வியத்மக , எலிய ஆகிய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. பசில் மெதுவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து, மொட்டு கட்சியை பலமாக்க ஆலோசனை வழங்கினார். தேவைப்படும் பட்சத்தில் ஐதேவுடன் இணைந்து மைத்ரிக்கு எதிராக , கண்டன தீர்மானம் ஒன்றையும் கொண்டு வர ஆலோசனை செய்தார்.
பாராளுமன்றத்தை கலைப்பதாக தெரிவித்ததோடு, வெளிநாடுகளில் வாழும் பிரசைகளின் கடும் கண்டனங்கள் பரவலாக வெளியாகத் தொடங்கியது.
தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய, மகிந்தவின் பழைய நண்பர். அவரும் பசிலின் தாளத்துக்கு ஆடத் தொடங்கினார். ஐதேகவினர் அவரை சந்தித்த போது தான், பழைய கொமியூனிஸ்ட்வாதி என்றார். ஆனாலும் பாராளுமன்றத்தை கலைப்பதிலும் புதிய தேர்தலை கொண்டு வருவதற்குமான கெசட்டை தயாரிப்பதிலும் மகிந்த தேசப்பிரிய திரை மறைவில் கடும் பணியொன்றை செய்தார்.
எது எப்படியோ சிவில் அமைப்புகளும் சபாநாயரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் இருந்த ஏனைய இரு அங்கத்தவர்களுமான ராஜன் ஹூல் மற்றும் அனில் ஆபசேகர ஆகியோரின் பிடிக்குள் இறுகிப் போனார். அதனால் உடனடி தேர்தல் ஒன்றை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ராஜன் ஹூல் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கு எதிராக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவை அனைத்தும் உச்ச நீதிபதிகளுக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்தது.
உச்ச நீதிமன்ற விசாரணை 12ம் திகதி ஆரம்பமானது. பெரும்பாலும் 15ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என ஐதேவினரால் நம்பப்பட்டது. கடும் சட்ட விவாதங்கள் நடந்தன. 13ம் திகதி இடைக்கால தடையுத்தரவு கிடைத்தால் 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதியின் கெசட் அறிவிப்பு செல்லுபடியாகும் என்பது மகிந்த எதிர்பாளர்களது , எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனடிப்படையில் பாராளுமன்ற அடுத்து கட்ட திட்டவாக்கங்களில் ஈடுபட்டனர். 13ம் திகதி தீர்ப்புசாதகமானால், 14ம் திகதி பாராளுமன்றம் செல்வதென்றும் இடைக்கால உத்தரவின் போது, மகிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 13ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதெனக் கனவோடு இருந்த பசில் தரப்புக்கு , உச்ச நீதியரசர் நளின் பெரேரா உட்பட ஏனை இருவரதும் கருத்துக்கமைய கொடுக்கப்பட்ட தீர்ப்பு பேயறையாக வீழ்ந்தது.
பாராளுமன்றம் 7ம் திகதி முதல் உயிர் பெற்றதோடு, பாராளுமன்றத்தை மீண்டும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் , ஒரு நாளாவது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனிடையே சர்வதேச அழுத்தங்கள் மைத்ரியின் குரல்வளையை இறுக்கத் தொடங்கியது. தனக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர, ரணில் - மகிந்த தரப்பினர் ஈடுபடுவதாக மைத்ரி உணரவும் தொடங்கினார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நீர்க்கச் செய்து மொட்டு கட்சியை பலமாக்கிய பசிலின் முயற்சிக்கு பின், மைத்ரியின், ஜனாதிபதி கனவு இல்லாமலே போனது.
எனவே 13ம் திகதி பாராளுமன்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருந்த, அவரது முயற்சியை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டடிய போது மகிந்தவின் அனைத்து எதிர்பார்ப்பும் தினேஸ் கையிலிருந்தது. தினேசுக்கு தனிப்பட்ட ரீதியாக ஒரு கறை இருக்கிறது. 2005 - 2010 வரையான காலப்பகுதியில், நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 15 மிலியன் பணத்தைக் கையாடிய பைலை , மகிந்த கையில் வைத்துக் கொண்டு, தினேஸிடம் பாராளுமன்றத்தை சிதைக்கும் சதியை செயல்படுத்த தள்ளிவிட்டார்.
ஆனால் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒரு சிங்கத்தைப் போல சபையில் செயல்பட்டதோடு, ஐதேகவின் டீல்களுக்கு அடிமையாகாத இளம் உறுப்பினர்கள் அவருக்கு அன்று கவசமானார்கள். அதன் பிரதிபலனாக அனுரகுமார திசாநாயக்க கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேணைக்கு 122 - 0 என வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முன் முகம் கொடுக்க முடியாத, மகிந்த மற்றும் நாமல் பாராளுமன்றத்தை விட்டு பின் கதவால் வெளியேறினர்.
இருப்பினும் நீதிக்கு தலை வணங்காது பேராசையோடு தனக்கு கிடைத்த பிரதமர் பதவியிலிருந்து விலக மகிந்த இன்னமும் தயாராக இல்லை. அதிரடிப் படையினரை தமது அமைச்சுகளுக்கு அனுப்பி , பாராளுமன்றத்தில் பிரதமராக தொடர்ந்து நிற்பதென 14ம் திகதி முடிவு செய்தார்.
சிங்களத்தில் : பீ. எம். சந்திரகீர்த்தி
தமிழில் : அஜீவன்
தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக