சனி, 17 நவம்பர், 2018

ஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .. விளைவுகள் மிகவும் ஆபத்தானது

savukku - Jeevanand Rajendran" : ஆதாரை மையமாக கொண்டு நடந்து வரும் மோசடிகளை அதனால்  ஏற்படும் விளைவுகளை பற்றி சவுக்கு தளம் தொடர்ந்து விவாதித்து  வந்துள்ளது , அதன் தொடர்ச்சியாக ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பினால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம். Wire இணையதளத்தில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் இது நிறுவப்பட்டுள்ளது.
2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை திருத்துவதற்கும், போலிகளை களைவதற்கும் National Electoral Roll Purification and Authentication Programme (NERPA) என்ற திட்டத்தை துவங்கியது இணைப்பு . இந்த திட்டத்தை செயல்படுத்த ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை (EPIC) எண்ணை இணைத்து அதன் மூலம் விபரங்களை சரி பார்த்து, போலிகளை களையலாம் என்பது தான் திட்டம். இந்த திட்டம் துடங்கிய உடனே தேர்தல் ஆணையம்  பெரும் எதிர்ப்பினை சந்தித்தது , இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு 3 மாதத்தில் ஆதார் இணைப்புக்கு தடை விதிக்கப்பட்டது இணைப்பு. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் மிக குறுகிய காலமான 3 மாதத்தில் சுமார் 30 கோடி நபர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது

இணைப்பு  3 மாதத்தில் 30 கோடி தனிநபரின் ஒப்புதலை பெற்று இணைப்பது என்பது சாத்தியமற்றது, பின் எப்படி அவர்கள் இதனை செய்திருப்பார்கள்? இந்த திட்டம் துடங்கியவுடன் National Voters Service Portal (NVSP) என்ற இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது . இதில் உங்கள் ஆதார் எண்ணையும், EPIC  எண்ணையும் பதிவேற்றினால்,ஆதாருடன்  இணைக்கப்பட்ட உங்கள் கைபேசி எண்ணுக்கு OTP  வரும் அதனை கொடுத்து உங்கள் இணைப்பை பூர்த்தி செய்யலாம் . இப்படி ஒரு வசதி இருப்பதே பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாது , DNA நாளிதழ் வெளியிட்ட செய்தியில் வெறும் 3 கோடி நபர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்தி உள்ளது தெரியவருகிறது இணைப்பு 
பின் எப்படி மீதம் உள்ள நபர்களின் வாக்காளர் அட்டையை இணைத்திருப்பார்கள் என்ற கேள்விக்கு இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் விடை அளிக்கிறது

நேரடி மானியம் பெறுபவர்களின் விபரங்களை சரி பார்த்து அதன் மூலம் மற்ற சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க (seeding ) UIDAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயலி DSDV (Direct Benefit Transfer Seeding Data Viewer), அதை பயன்படுத்தி தனி நபர் அனுமதி இல்லாமல் தானியங்கி வழிமுறையின் (Algortihm ) மூலம் சுமார் 28 கோடி நபர்களின் விபரங்களை இணைத்துள்ளனர்.

இந்த DSDV பயன்படுத்த அரசாங்கம் மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த முடியும்.
இது தவிர தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம் போன்ற மாநில தேர்தல் ஆணையங்கள் தேசிய ஜனத்தொகை பதிவேட்டினை (NPR) பயன்படுத்தி இதனை செய்தது தெரியவந்துள்ளது
NPR-Aadhaar Help by on Scribd
தமிழ்நாட்டில் தர்மபுரி , திருவள்ளூர் மற்றும் கோவையில் சிறப்பு முகாம் அமைத்து ஆதார் எண்களை திரட்டி NPR மூலம் தேர்தல் ஆணையம்  இணைத்துள்ளது
How Tamil Nadu used parts o… by on Scribd
குஜராத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் வீடு வீடாக சென்று ஆதார் எண்ணையும் , EPIC எண்ணையும் திரட்டி உள்ளது.
நிலைமை இப்படி இருக்க ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம் அதற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தது, அதற்குள் வந்த உச்சநீதி மன்ற தீர்ப்பு (மானியம் பெற மட்டுமே ஆதார் பயன்படுத்த வேண்டும்) இதை செயல்படுத்த முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
எந்த அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, பெரும்பாலான மக்களும் இந்த திட்டம் போலிகளையும், கள்ள ஒட்டு போடுவதையும் தடுக்கும் என்றே நம்புகின்றனர். உண்மையாகவே இவர்கள் அனுமானம் சரியா?
இதை சாத்தியப்படுத்த முதலில் ஆதாரில் உள்ள போலிகளை நீக்க வேண்டும் அல்லவா?  வெறும் 500 ரூபாய் கொடுத்தால் போலி ஆதார் அட்டை தயார் படுத்த முடியும் என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ்  நாளேடு செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம் இணைப்பு , உத்தரப்பிரதேசத்தில் போலி ஆதார் கொண்டு 2 லட்சம் ரேஷன் அரிசியை களவாண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது இணைப்பு. நம் நாட்டில், மாட்டுக்கும் அனுமாருக்கும் போலி ஆதார்  தயார் செய்வது மட்டும் அல்ல அனுமாரின் பெயரில் யாரோ ஒருவன் காஸ் மானியமும் பெற முடியும் இணைப்பு.  ISI உளவு அமைப்பை சேர்ந்த  மெஹமூத் அக்தரை அக்டோபர் 2016ல் கைது செய்த போது டெல்லி முகவரியில் அவருக்கு ஆதார் அட்டையும், ஆகராவை சேர்ந்த பைஜிநாத் என்பவரின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டு எரிவாயு மானியம் பெற்றது தெரிய வந்தது. நிலைமை இப்படி இருக்கையில் ஆதாரை வைத்து போலிகளை களைய முடியும் என்று எண்ணுவது எவ்வளவு முட்டாள்த்தனம்?
ஒருவர் சொந்த ஊரில் ஒன்றும், வேலை செய்ய வந்த ஊரில் ஒன்றும்  என இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பது சாத்தியமே, ஆனால் தேர்தல் நடக்கும் முன்பு வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சென்று சரிபார்க்கப்படும் அதில் பெரும்பாலான விபரங்கள் சரிசெய்யப்படும். ஒருவர் இறந்திருந்தால் அவர் இறப்பை பதிவு செய்து அவரின் பெயரை நீக்கிவிடுவார்கள். இறந்தவரின் ஆதார் அட்டையை செயலிழக்க செய்யும் முறை யாருக்காவது தெரியுமா ? UIDAI வலைதளத்தில் கூட அதை பற்றி எந்த தகவலும் இருக்காது. பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்க முற்படும் UIDAI இறந்தவர்களை பற்றி கவலைப்படுவது இல்லை. தொடர்ந்து ஆதாரின் விதிமுறைகள் மாரி வருவதால் அந்த திட்டங்களை மென்பொருளில் செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது.
ஆதார் இணைப்பால் யாருக்கு லாபம்?
இது தான் நாம் உன்னிப்பாக பார்க்க வேண்டிய விஷயம்,
இந்த இணைக்கப்பட்ட தகவல்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளதோ அவர்களுக்கு தான் இது பெரும் லாபம், அது பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக முடியும்.
ஆதார் மூலம் ஒரு தனி நபரை அடையாளம் காண முடியும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆதாருடன்  வாக்காளர் அட்டையும் இணைத்து விட்டால் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுக்கு இணையான ஒரு கட்டமைப்பை ஒருவரால் உருவாக்கி விட முடியும். இதன் மூலம் ஆட்சியில் இருப்பவர் தங்களுக்கு சாதகமாக தேர்தலை நடத்துவது எளிது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியானபோது, நமது சமூக வலைத்தள கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, ஒருவருக்கு எந்த விதமான  பயத்தை உருவாக்கினால், அவர் எப்படி வாக்களிப்பார் என்பதை அல்காரிதம் மூலமாக கண்டறிந்த விவகாரம் வெளியாகி, உலகம் முழுக்க புயலை கிளப்பியது நினைவிருக்கும்.
போலி ஆதார் மூலம் போலியான ஒருவரை உருவாக்கி அவரை ஓட்டு போட செய்ய முடியும்,
தங்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிடும் ஒரு நபரை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும். இது புதிது அல்ல ஏற்கனவே டெல்லியில் சுமார் 10 லட்சம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கேஜிரிவால் குற்றம் சாட்டி உள்ளார் இணைப்பு., RK நகர் இடைத்தேர்தலில் 48000 வாக்காளர் பெயர் விடுபட்டதாக திமுக குற்றம்சாட்டியது.   குத்துமதிப்பாக AAP /DMK வாக்காளர் அதிகம் உள்ள வார்டுகளில்  உள்ள வாக்காளர்களை நீக்குவது எப்படி, இவர் திமுகவிற்கு தான் வாக்களிப்பார் என்று உறுதியாக தெரிந்து அவரை நீக்குவது எப்படி?
ஒரு வார்டில் எந்த மதத்தை/ஜாதியை  சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று அறிய முடியும் அவர்களுக்கு ஏற்றார் போல வேட்பாளரை அறிவிக்க முடியும், எந்த தொகுதியில் மானிய பயனாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எந்த மாதிரியான மானியத்தை பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயாரிக்க முடியும், தேர்தலுக்கு முன் திட்டங்கள் அறிவிக்க முடியும்.  குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த வாக்காளர்களின் தேவைகள் என்ன, விருப்பங்கள் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல  பிரச்சாரத்தை  மேற்கொள்ள முடியும்/
அரசாங்கத்திடம் உள்ள தகவல்கள் தனி நிறுவனங்களிடம் சென்றால் வரப்போகும் விளைவுகள் மிகவும் ஆபத்தானது.   ஆதார் தகவல்கள் 13 அடி சுவருக்குள் பாதுகாப்பாக உள்ளது என்று உறுதியளித்தாலும் வெறும் 500 ரூபாய்க்கு லட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கசியவிட்டதை ட்ரிப்யூன் நாளேடு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது  இணைப்பு 
இப்படி ஒரு ஆயுதம் உருவாக்க முடியும் என்றால் எந்த கட்சிதான் இதை வேண்டாம் என்று சொல்லும் ? இன்று ஆட்சியில் இருக்கும் பாஜக இதை கட்டமைத்தால் அடுத்த ஆட்சிக்கு வரும் கட்சி அதனை வேண்டாம் என்று நிராகரித்து விடுமா என்ன ?
இப்படி ஒரு கருவியை உருவாக்கி வைத்தால் தேசிய காட்சிகள் மாநில காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து விடும் , இதுவரை பணம் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்று இருந்ததை தாண்டி தனி நபர் தகவல்கள் திரட்டும் ஒருவருக்கே வாய்ப்பு அதிகம் என்ற நிலை உருவாகும்.  அதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுடன் கை கோர்த்து கொள்கைகளை தீர்மானிக்கும் அவலமும் அரங்கேறும்.
ஆகையால், வரக் கூடிய ஆபத்தை புரிந்துகொண்டு அதை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக